வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (28/12/2018)

கடைசி தொடர்பு:11:13 (28/12/2018)

600 சதுரஅடி போதும்... முயல் வளர்ப்பில் அசத்தலான லாபம் பார்க்கலாம்! #RabbitFarming

மந்த முயல்களை இறைச்சிக்கும், துறுதுறுவென இருக்கிற முயல்களை வளர்ப்புக்கென்றும் தனியாகவும் பிரிக்கலாம். உயிரோடு 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.

600 சதுரஅடி போதும்... முயல் வளர்ப்பில் அசத்தலான லாபம் பார்க்கலாம்! #RabbitFarming

பொதுவாக விவசாயத்தில் ஆடு, மாடு வளர்ப்பைத் தாண்டி நாய் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு உள்ளிட்டவை அதிக லாபத்தைத் தரும். சிலர் செல்லப் பிராணிகள் வளர்ப்பை ஆர்வத்துக்காகவும் வளர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் முயல்கள் வளர்ப்பும் லாபத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆனால், மற்ற பிராணிகளை வளர்ப்பதுபோல முயல்களை வளர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் சில தொழில்நுட்பங்களை உபயோகித்தால் முயல் வளர்ப்பை எளிதாக்கலாம். 

தேர்வு செய்யும் இனங்கள்

வெளிநாடுகளிலிருந்து இறைச்சிக்காக இறக்குமதி செய்யப்பட்டு கால்நடைத்துறை மூலமாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள முயல் இனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக இங்கிலாந்து வெள்ளை, சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், நியூசிலாந்து வெள்ளை மற்றும் கறுப்பு, டச்சு உள்ளிட்ட முயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பொதுவாக முயல்களை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். முயல் கொட்டகையைத் தென்னங்கீற்று மற்றும் பனை ஓலையால் ஓரளவு காற்றோட்டம் இருக்கும்படி அமைக்க வேண்டும். தென்னங்கீற்று மற்றும் பனை ஓலையில் நெய்யும்போது அறை இருளாக இருக்கும். அப்போதுதான் முயல்களுக்கு இரைதேடுவதற்கு வசதியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முயல்களுக்கு அதிக குளிர் தாக்காமலும் இருக்கும். 

முயல் வளர்ப்பு

உணவு முறை

காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 8 மணியளவில் முயலுக்குப் பக்கத்தில் கிடைக்கும் இலைதழைகளைப் போடலாம். முட்டைக்கோஸ் தோல், கேரட் (அளவாக), நுக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான், வாழை இலை, முள்ளங்கி, அகத்திக்கீரை, வேலி மசால் என எது கிடைக்கிறதோ அதைக் காலையில் தீவனமாகக் கொடுக்கலாம். தினமும் கொடுக்கும் உணவைச் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தைக் காலையில் கொடுத்து வந்தால் மாலையாகும் வரை சுறுசுறுப்பாக இருக்கும். பசுந்தீவனம் பெரும்பாலும் கிராமத்தில் அதிகம் கிடைக்கும். அதனால் தீவனச் செலவை பெரும்பாலும் குறைக்கலாம். இந்த உணவுகளால் முயல்களின் வளர்ச்சியிலும் கொஞ்சம் தெளிவு இருக்கும். முக்கியமான விஷயம் முயலைக் காதைப் பிடித்துத் தூக்க கூடாது. காது நரம்புகள் மெல்லிதாக இருக்கும். இடுப்பைப் பிடித்து தூக்குவது நல்லது. முயலைத் தூக்கும்போது ரோமங்கள் உதிரும். அந்த ரோமங்கள் சுவாசப் பாதைக்குள் சென்றால் நோய்கள் நமக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. மாலை வேளையில் கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, வேர்க்கடலை புண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ மற்றும் உணவு உப்பு 0.5 கிலோ என மொத்தம் 100 கிலோவை அரைத்துக்கொண்டு 100 முயலுக்குச் சராசரியாக தினமும் 100 கிராம் என மாலைத் தீவனமாக 6 மணிக்குக் கொடுக்க வேண்டும். 

பண்ணைப் பராமரிப்பு

பண்ணையைத் தினமும் சுத்தமாகக் கவனிக்க வேண்டும். முந்தைய நாள் காலை உண்ட உணவின் மீதியும், மாலை உணவின் மீதி மற்றும் முயல்களின் கழிவுகளும் கூண்டின் கீழே இருக்கும். அதைத் தினமும் தவறாது அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு முயல்களுக்கு வைக்கப்பட்டுள்ள தீவனக் கிண்ணங்களைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு அதில் பசுந்தீவனத்தை நறுக்கியோ அல்லது முழுமையாகவோ (பசுந்தீவனத்தின் தன்மையைப் பொறுத்து) வைத்து விடலாம். அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் நீரையும் வைத்து விடவேண்டும். இந்த உணவை முயல் எடுத்துக்கொள்கிறதா என்பதை 12 மணியிலிருந்து 1 மணிவரை கவனிக்க வேண்டும். 

நோய்த்தாக்குதலும், பராமரிப்பும்

முயல்களைத் தாக்கும் நோய்களுள் குடற்புழுநோயும், சொரி நோயும் அடங்கும். குடற்புழு நோயை நீக்க அல்போமர் டானிக்கை முயல்களின் மாதத்தைப் பொறுத்து 45 நாளுக்கு ஒருமுறையும், சிறிய குட்டியாக இருந்தால் 1 மி.லி அளவும், பெரிய 6முயலாக இருந்தால் 3 மி.லி என்ற அளவிலும் கொடுக்கலாம். இதைக் கொடுத்து வந்தால் மூன்று நாள்களுக்குள் முயல்களுக்குத் தாக்கியுள்ள குடற்புழு நோய் தானாகவே சரியாகிவிடும். முயல்களைத் தாக்கும் சொரி நோய்க்கு வேப்ப எண்ணெய் அல்லது பென்சலின் பென்சாயிலைத் தடவினால் சொரிநோய் குணமாகும். 

முயல் வளர்ப்பு

சினை பருவ கால கவனிப்பு

பெண் முயலானது பருவத்துக்கு வருவதை சில அறிகுறிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம். கூண்டின் ஓரத்தில் ஏதாவது ஒரு மூலையில் கால்களை எலி வலை தோண்டுவது போலப் பறித்துக்கொண்டு அமைதியில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். அதை வைத்தும் கணிக்கலாம் அல்லது ஒரு பெண் முயல் குட்டியிலிருந்து 6-வது மாதத்தில் பருவத்துக்கு வருவதை வைத்தும் கணிக்கலாம். ஆண் முயல் எட்டு முதல் ஒன்பது மாதத்தில் பருவத்திற்கு வந்துவிடும். பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு இரண்டு நாள்களில் பிரித்துவிட வேண்டும். இணை சேர்ந்தது முதல் 28-முதல் 30-வது நாள்களுக்குள் குட்டி போட்டுவிடும். சரியாகக் குட்டி போடுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் முயல் தனது ரோமங்களை உதிர்த்து அதன் மீதுதான் குட்டி போடும். ரோமங்களை உதிர்க்க ஆரம்பிக்கும்போதே குட்டி போடப்போவதைக் கண்டுபிடித்துவிடலாம். எட்டு குட்டிக்கும் அதிகமாகப் பிறந்தால் நாம்தான் குட்டிகளை ஒவ்வொன்றாகப் பாலுட்ட வேண்டும். பிறந்த குட்டிகள் 12-வது நாள் கண்திறக்க ஆரம்பிக்கும். அதுவரை ஒரு பெட்டிக்குள் முயலின் முடிகளை வைத்து மெத்தை போன்று அமைத்து குட்டிகளுக்கு அதிகம் குளிராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குட்டிகள் பிறந்த 22-வது நாள் வரை தாய் முயல் குட்டிகளுக்குப் பால் தரும். சரியாக 22-வது நாள் இலைதழைகளைக் கடித்து உண்ண ஆரம்பித்துவிடும். தாயிடமிருந்து குட்டிகளை 45-வது நாள் முற்றிலும் பிரித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு குட்டிகளை தனித்தனி கூண்டில் அடைத்து பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனம் ஆகியவற்றைச் சரியான அளவில் கொடுத்து வந்தால் குட்டிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். பிரித்த தாய் முயலைக் கர்ப்பமாக இருந்த 30 நாள்கள் மற்றும் குட்டியுடன் 45 நாள்கள் என மொத்தம் 75 நாள்களுக்குப் பிறகு அடுத்த இணை சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்ப்பதால் தாய் முயலும், அடுத்து பிறக்கும் குட்டிகளும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அடுத்ததாகப் பிரித்த சிறிய முயல்களை 2 அடி நீளம் 2 அடி அகலம் உள்ள கூண்டில் 3 முயல் குட்டிகளாக விட்டு வளர்க்கலாம். பொதுவாக நான்காவது மாதம்தான் குட்டிகளை அடையாளம் காண முடியும். அடையாளம் கண்டவுடன் ஆண் முயல் மற்றும் பெண் முயல் எனத் தனித்தனியே குட்டிகளைப் பிரித்து விடலாம். அதன்பிறகு மறுபடியும் 6-வது மாதத்தில் பருவத்துக்கு வரும் பெண் முயலையும், 9-வது மாதத்தில் பருவத்துக்கு வரும் ஆண் முயலையும் மறுபடியும் இணை சேர வைக்கலாம். 

முயல் குட்டிகள் பராமரிப்பு

பெண் முயலின் இணையைப் பொறுத்து ஒவ்வொரு முயலும் 6 முதல் 8 குட்டிகள் வரைப் போடும். முயல்கள் குட்டிப்போட்ட 3 மாதத்தில் சராசரியாக 2 கிலோ அளவு எடை இருக்கும். 3 மாதத்திலேயே மந்தமாக இருக்கும். மந்த முயல்களை இறைச்சிக்கும், துறுதுறுவென இருக்கிற முயல்கள் வளர்ப்புக்கென்று தனியாகவும் பிரிக்கலாம். முயல் உயிரோடு 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இறைச்சியாக விற்பனை செய்தால் வருமானம் இருமடங்காகும். இதில் அதிக நேரம் செலவழிக்கத் தேவையில்லை. குறைந்தது 600 சதுர அடி இடம் இருந்தாலே முயல் பண்ணையை அமைத்து நல்ல லாபம் பார்க்கலாம். 

முயல் வளர்ப்பு

முயல் இறைச்சியில் உள்ள சத்துகள்

முயலானது குறைவான கொழுப்பும், அதிகமான புரதம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. முயல் இறைச்சி சாப்பிடுவதால், இதயநோய், உயர் ரத்த அழுத்தமுள்ளவர்கள், குடல்புண், மலச்சிக்கலையும் தீர்க்கும். 

அதிகமாக வளர்க்கப்பட்டு வரும் ரகங்கள்

வெள்ளை ஜெயின்ட், டைகர் ஜெயன்ட், சாம்பல் ஜெயின்ட், நியூசிலாந்து வெள்ளை மற்றும் கறுப்பு, சோவியத் சின்சில்லா, டச்சு, அங்கோரா என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முயல் இனங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

முயலுக்கு பஞ்சகவ்யா

பெரிய முயலுக்கு பஞ்சகவ்யா தினமும் 3 மி.லி என்ற அளவில் கொடுத்து வந்தால் முயல்களின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகவும், ஈனும் குட்டிகள் அளவும் பெரியதாகவும் இருக்கும். இனவிருத்திக்கும் இணை சேருவதற்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்