வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (28/12/2018)

கடைசி தொடர்பு:19:10 (28/12/2018)

120 பாரா ரன்னர்ஸ்... 25,000 ரன்னர்ஸ்... சென்னை மாரத்தானில் என்ன ஸ்பெஷல்?!

120 பாரா ரன்னர்ஸ்... 25,000 ரன்னர்ஸ்... சென்னை மாரத்தானில் என்ன ஸ்பெஷல்?!

உலகில் எல்லா மாரத்தான் ஓட்டக்காரனுக்கும் இருக்கும் கேள்வி, நான் எதற்காக ஓடுகிறேன். இந்தக் கேள்விக்கு மாரத்தான் உலகின் வேகமான மனிதர் எலியூத் கிப்சோகே வைத்திருக்கும் பதில், ``நான் என்னைத் தோற்கடிக்கவே ஓடுகிறேன்". ஜனவரி 6-ம் தேதி சென்னையில் இந்தியாவின் இரண்டாம் பெரிய மாரத்தான் போட்டி நடைபெறப்போகிறது. இதே கேள்வியை சென்னை மாரத்தான் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் V.P.செந்தில் குமாரைச் சந்தித்தேன்...

2016 சென்னை மாரத்தானில் வீரர்கள்

இந்த மாரத்தான் ஓட்டம் எதற்காக?

இந்த ஆண்டு சென்னை மாரத்தானின் தீம் `பாரா அத்லெட்'. மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், தேவேந்திர ஜஜாரியா போல திறமையான பாரா அத்லெட்டுகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்கள் மற்ற அத்லெட்டுகள் பயன்படுத்தும் பயிற்சி சாதனங்களைத்தான் இப்போது பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கெனத் தனி பயிற்சி மையங்கள் இல்லை. பாரா அத்லெட்டுகளுக்காகச் சிறப்புப் பயிற்சி மையங்களை உருவாக்கினால் நம்மால் இன்னும் நிறைய பாரா ஸ்போர்ட்ஸ் பிளேயர்களை உருவாக்கமுடியும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை இன்னும் மேம்படச் செய்யலாம். இதைச் சொல்வதற்காகத்தான் இந்த மாரத்தான்.

தினேஷ் கார்த்திக் உடன் சென்னை மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள்

இந்த மாரத்தானில் பாரா ஸ்போர்ட்ஸ் வீரர்கள் ஓடுகிறார்களா?

மொத்தம் 120 பாரா ரன்னர்ஸ் பங்கேற்கிறார்கள். இதுமட்டுமல்ல, பார்வையற்றோர்களும் இந்த மாரத்தானில் கலந்துகொள்கிறார்கள். மாரத்தான் ஓட்டக்காரர்களை உற்சாகப்படுத்த, அவர்களுக்கான நேரத்தை வகுத்துக்கொடுக்க, ஒவ்வொரு மாரத்தானிலும் பேசர்கள் (Pacers) (ஓடுபவர்களுக்கு உதவுபவர்கள்) இருப்பார்கள். இந்த முறை ஒவ்வோர் இரண்டரை மணிநேரத்துக்கும் ஒரு பாரா அத்லெட்டுதான் பேசராக இருக்கப்போகிறார். இதுவரை இந்தியாவில் எந்த மாரத்தானிலும் பாரா அத்லெட் பேசராக வந்ததில்லை. சென்னையில்தான் முதல்முறை. மாரத்தானில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு தருகிறோம். 4 திறமையான பாரா அத்லெட்டுகளை கண்டுபிடித்து அவர்களுக்கு 2024 பாரா ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி தருவோம்.

சென்னை ரன்னர்ஸ் ரோலிங் ரன்

வரப்போகும் சென்னை மாரத்தானில் வேறென்ன ஸ்பெஷல்?

மும்பை மாரத்தானுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாம் பெரிய மாரத்தான் இது. தற்போது 25,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்கள். உலகில் முதல் முறையாக மாரத்தான் பங்கேற்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் தரப்படுகிறது. இதற்கான பிரத்யேக இன்ஷூரன்ஸை `கோட்டக் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. Half மற்றும் Full மாரத்தான்களுக்கு இடையில்  Perfect 20 Miler என்ற புது கேட்டகிரியை உருவாக்கியிருக்கிறோம். இந்தமுறை சென்னை மெட்ரோ இணைந்திருப்பதால் மாரத்தான் தினத்தன்று மெட்ரோ ஸ்டேஷன்களில் பார்க்கிங் இலவசம். காலை சிறப்பு ரயில்களும் இயக்குகிறார்கள். நந்தனம் மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்த உடனேயே மாரத்தான் தொடங்குகிறது. பெண்களின் பங்களிப்பு இந்த மாரத்தானில் அதிகம். 18 சதவிகிதம் பெண்கள் ஓடுகிறார்கள். 

ஒலிம்பிக் மெடல் தாயரிப்பவர்கள்தான் இந்த மெடல்களையும் செய்கிறார்கள

முதல் முறை ஓடுபவர்களுக்கு மாரத்தான் ஒரு நாள் சந்தோஷம்தானே... இதில் என்ன சாதிக்க முடியும்?

இது ஒரு நாளோடு முடிவது இல்லை. முதல் முறை மாரத்தான் வருபவர்கள் அதிகபட்சம் 10 கி.மீ ஓடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தருகிறது. அடுத்த முறை பயிற்சி எடுத்து இன்னும் 5 கி.மீ அதிகமாக ஓடுவேன் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள். வென்றால் ஊரே கொண்டாடும் என்ற ஆசையோடு கிராமத்திலும், வெளி ஊர்களிலிருந்தும் நிறைய பேர் வந்து கலந்துகொள்கிறார்கள். உலகின் கஷ்டமான சிட்னி மெல்போர்ன் அல்ட்ரா மாரத்தானில் வென்ற 61 வயது விவசாயி cliff young போல தன் திறமையைப் பற்றித் தெரியாதவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள். அவர்களை ஓடவைத்தால் வெற்றிபெறுவார்கள். அடுத்த ஆண்டு இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்பார்கள். அதற்கு இந்த மாரத்தான் முதல் படியாக இருக்கும்.

முடிவு

நீங்கள் ஓடுவதற்கு காரணம் என்ன?

நம் உணவு, வாழ்க்கை முறை என எல்லாமே மாறிவிட்டது. ஸ்ட்ரெஸ் ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமாக இருக்க ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் தேவைப்படுகிறது. 2006-ம் ஆண்டு 6 பேர் சேர்ந்து ECR-ல் ஓட ஆரம்பித்தோம். இப்போது சென்னை ரன்னர்ஸ் என்று 200-க்கு மேற்பட்டவர்கள், 18 சேப்டர்கள் என ரன்னிங் சென்னையில் பிரதானமாக மாறிவிட்டது. மனதளவில் சோர்வாக இருந்தால், புத்துணர்ச்சிக்கு ஏதாவது தேவை என்று நினைத்தால் நீங்களும் ஓடிப்பாருங்கள்.


டிரெண்டிங் @ விகடன்