அதிகாலைப் பனி... குழந்தைகளை என்ன செய்யும்... மருத்துவ விளக்கம்! | How useful is your muffler to escape winter health issues? explains doctor

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (29/12/2018)

கடைசி தொடர்பு:09:15 (29/12/2018)

அதிகாலைப் பனி... குழந்தைகளை என்ன செய்யும்... மருத்துவ விளக்கம்!

மார்கழி மாத பனி மச்சியைத் துளைக்கும் என்பார்கள். அந்தளவுக்குப் பனி கொட்டும். அதுவும் அதிகாலை பனி... கேட்கவே வேண்டாம். பெரியவர்கள் சிறியவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் மஃப்ளரோடுதான் வெளிப்படுகிறார்கள். மஃப்ளர் நிஜமாகவே குளிரிலிருந்து பனியிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கிறதா என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் கண்ணன்.

பனி

``குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். குறிப்பாகப் பனிக்காலங்களில் காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் எளிதில் குழந்தைகளை அட்டாக் செய்யும். அந்த வைரஸ்களினால் வரக்கூடிய இருமல், ஃப்ளூ, சுவாசத் தொற்றுநோய் (croup) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

பொதுவாக குழந்தைகள் மஃப்ளர் அணிவதற்கும், காய்ச்சலுக்கும் தொடர்பு கிடையாது. பனிக் காலங்களில் பரவும் காற்று வழி தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே மஃப்ளர் உதவுகிறது. குழந்தைகளால் அதிக அளவிலான குளிரை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருக்காது. அதிகாலை பனியை பெரியவர்களாலேயே எதிர்கொள்ள முடியவில்லை. மாலை நேரத்துப் பனியை விட அதிகாலைப் பனிதான் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்து. மார்கழி மாத பனி காலை 9 மணி வரைக்கும் அடர்த்தியாக இருக்கிறது. அதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஸ்கார்ஃப், மஃப்ளர் அணிந்து செல்வது நல்லது.

தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகப் பனி காதை அடைக்கும். சில சமயம் அதிகப் பனி காரணமாக நடுக்காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு, பாக்டீரியா அதிகமாகப் பெருகும் வாய்ப்பும் உண்டு.  

இவ்வளவு நேரம் மஃப்ளர் அணிய வேண்டும் என்கிற வரைமுறையெல்லாம் கிடையாது. பனி அதிகமாக ஏற்படும் நேரத்தில் குழந்தைகளுக்கு மஃப்ளர் போட்டுவிடுவதை பெற்றோர்கள் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே போன்று, அதிக நேரமும் மஃப்ளர் அணியத் தேவையில்லை.

கடைகளில் கிடைக்கக்கூடிய பருத்தி ரக மஃப்ளர்களை வாங்குவது நலம். மஃப்ளர் வாங்கும்போது காட்டன் மட்டுமே வாங்குங்கள்.

மஃப்ளர்

குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களும், அதற்கான அறிகுறிகளும் :

இருமல் :

இருமலும் வறண்ட இருமலாக இல்லாமல், சளியுடன் கலந்த இருமலாக இருக்கும். ஆனால், காய்ச்சல் இருக்காது. 

ஃப்ளூ :

கடுமையான உடல் வலி, காய்ச்சலுடன் சளியும் இருக்கும். ஃப்ளூ காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

சுவாசத் தொற்றுநோய் (croup) :

இந்தத் தொற்றுநோய் வைரஸ் அல்லது பாக்டீரியா இரண்டினாலும் வரலாம். இந்த நோய்த் தொற்று ஏற்படும்போது கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களைப் போன்று மூச்சுத் திணறலின் வீரியம் அதிகமாக இருக்கும். தொண்டைப் பகுதியில் எக்ஸ்ரே எடுத்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம். இந்த நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை மூலம் எளிமையாகக் குணப்படுத்திவிடலாம்.

நிமோனியா காஃப் (pneumonia cough) :

குளிர்காலத்தில் மட்டும் மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. குளிர்காலத்தை அவர்களால் சமாளிக்க முடியாது. ஸ்கின் டிரையாகிவிடும்.

பொதுவான காரணிகள் 

குளிர்காலத்தில் பரவும் வைரஸ்களின் ஆயுட்காலம் 3 மணி நேரம். எனவே, வெளியில் சென்றுவிட்டு வந்தால் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். குளிர்கால நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அவ்வப்போது கை கழுவ கற்றுக்கொடுக்க வேண்டும்.

டான்சில் என்பது நம் வாயின் உள்ளே இரு பக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அந்தப் பகுதி வீங்கி வலியை ஏற்படுத்தும். இதை `டான்சிலிட்டிஸ்’ (Tonsillitis) என்பார்கள். இந்தத் தொற்றும் அதிகமாகக் குளிர்காலங்களில் ஏற்படக்கூடும்.

மஃப்ளர்

மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நீரினால் பரவக் கூடிய நோய்கள் ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. 

இருமலால்தான் பெரும்பாலான நோய்கள் பரவுகின்றன. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு குழந்தையிடமிருந்து நோய்த் தொற்று அடுத்த குழந்தைக்கு எளிமையாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், உடல்நிலை சரியில்லாத குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. 

இருமலை உருவாக்கக்கூடிய கிருமிகள் தொண்டையில் மட்டுமல்ல; மூக்கிலும், காதிலும் இருக்கின்றது. முடிந்தவரைப் பயணங்களின்போது வாயைச் சுற்றி கட்டும் மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்