வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (29/12/2018)

கடைசி தொடர்பு:10:56 (29/12/2018)

2018-ம் ஆண்டில் அறிமுகமாகி, இந்தியாவில் சாதித்த கார்கள்! #2018Rewind

எலீட் i20, டிகோர், க்ரெட்டா, XUV 5OO, சியாஸ், ஆஸ்பயர், கோ/கோ ப்ளஸ், D-Max V-Cross, C-க்ளாஸ் என இந்த ஆண்டு களமிறங்கிய பேஸ்லிஃப்ட் மாடல்களின் பட்டியல் பெரிது.

2019-ம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாள்களே இருக்கிறது. வழக்கம் போலவே அந்த ஆண்டிலும் புத்தம்புதிய கார்களும், விலை உயர்வும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. எனவே ஆண்டின் இறுதியில், எழுதி முடித்த டைரியைத் திருப்பி ஒருமுறை படிப்பதுபோல, கடந்த 12 மாதங்களில் நம் நாட்டின் போட்டிமிகுந்த கார் சந்தையில் விற்பனைக்கு வந்த புதிய கார்களைப் பற்றிய தொகுப்புதான் இந்தக் கட்டுரை. இதில் 'சிறந்த கார் எது?' என்ற கேள்விக்கான விடை, வருகின்ற ஜனவரி 1, 2019 இதழில் வெளிவரப்போகும் மோட்டார் விகடன் இதழில் இருக்கிறது.

`இந்தியாவில் நான்கு கார்கள் விற்பனையானால், அதில் ஒரு எஸ்யூவி இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளது SIAM. எனவே, இந்தியாவின் கார் சந்தையில் 25% பங்கைக் கொண்டிருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில்தான், புதிய தயாரிப்புகள் இம்முறை ரகம் வாரியாக வந்திருக்கின்றன. நம் நாட்டில் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருந்தே தொடங்குவோம்.

 

2018

 

* இந்த ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான கார் ஸ்விஃப்ட் என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் தவறாமல் இருப்பதுடன், இது டாப் - 10 பட்டியலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கார் அறிமுகமான 10 வாரங்களிலேயே, இதன் புக்கிங் 1 லட்சம் கார்களைத் தாண்டிவிட்டது! டிசைன், கேபின், சிறப்பம்சங்கள், இடவசதி, ஓட்டுதல் ஆகியவற்றில் ஏற்றம் பெற்றது வரவேற்கத்தக்கது.

 

Amaze

 

* இந்தியாவில் டீசல் இன்ஜின் & 7 சீட்களுடன் கூடிய முதல் எஸ்யூவியாகப் புதிய CR-V அறிமுகமாகியிருந்தாலும், ஹோண்டாவின் 'Big Launch' அமேஸ்தான்! அதற்கேற்ப அறிமுகமான 5 மாதத்திலேயே, 50,000 கார்கள் விற்பனையாகிவிட்டதுதான் ஹைலைட். ஹோண்டாவின் வரலாற்றில் விரைவாக இந்த இலக்கை எட்டிய முதல் கார் என்ற பெருமையைப் பெற்ற இரண்டாம் தலைமுறை அமேஸ், முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது நீட்டான டிசைன், பிரிமியம் கேபின், டீசல் இன்ஜின் - CVT ஆப்ஷன் என மாற்றம் முன்னேற்றம் கண்டிருந்தது.

 

Yaris

 

* மிட் சைஸ் செக்மென்ட்டில் லேட்டாக நுழைந்தாலும், சிட்டி - வெர்னா - சியாஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக லேட்டஸ்ட்டாக வந்திறங்கியது டொயோட்டா யாரிஸ். தனது வகையிலேயெ 7 காற்றுப்பைகளை ஸ்டாண்டர்டாகக் கொண்ட ஒரே கார் என்ற பெருமையைக் கொண்டிருந்ததுடன், டீசல் இன்ஜின் இல்லாத மாடலும் அதுதான்! அதற்குப் பதிலாக அனைத்து வேரியன்ட்டிலும் பெட்ரோல் இன்ஜின் - CVT ஆப்ஷன் கொடுத்துவிட்டது டொயோட்டா. 

 

Santro

 

*இந்தியாவில் ஹூண்டாய் எனும் கொரிய பிராண்டை, அனைத்து விதமான மக்களிடமும் கொண்டு சேர்த்த கார் சான்ட்ரோ. கபாலி படத்தில் ரஜினி சொல்வதுபோல, 4 வருடங்களுக்குப் பிறகு வந்தாலும் தனது கம்பேக்கை ஸ்டைலாகவும் கெத்தாகவும் தந்த இந்தக் கார், 40 ஆயிரம் புக்கிங்குகளைக் கடந்துவிட்டது. இதனால் இந்தக் காரின் வெயிட்டிங் பிரியட் 2 மாதம் என்றளவில் இருக்கிறது. ஹூண்டாய் வரலாற்றில் முதன்முறையாக AMT ஆப்ஷன் கொண்ட இந்த மாடலில் அந்த வேரியன்ட்களுக்கு மட்டும், 30% டிமாண்ட் இருப்பது பெரிய ப்ளஸ். 

 

Tiago JTP

 

* டாடாவிடமிருந்து பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கார்கள் `இப்போ வரும், அப்போ வரும்' என இருந்த சூழ்நிலையில், தடாலடியாக டியாகோ மற்றும் டிகோர் ஆகியவற்றின் JTP மாடல்களைக் களமிறக்கி அசத்திவிட்டது. நெக்ஸானில் இருந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் பெறப் பட்டிருந்தாலும், இன்டேக் & எக்ஸாஸ்ட் சிஸ்டம் - சஸ்பென்ஷன் - டயர்கள் ஆகியவற்றில் ஸ்போர்ட்டியான முன்னேற்றம் தெரிந்தது. பிரிமியம் ஹேட்ச்பேக்கின் விலையில் டியாகோ JTP மற்றும் காம்பேக்ட் செடான்களின் டாப் வேரியன்ட் விலையில் டிகோர் JTP வெளிவந்து, 'More Car Per Car' எனும் டாடாவின் கோட்பாடுக்கு வலுசேர்த்தன.

 

Ertiga

 

* ஸ்விஃப்ட் போலவே புதிய Heartect ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எர்டிகா, முந்தைய மாடலைவிட அளவில் பெரிதாகியிருந்தது. இதனால் இடவசதி அதிகமாகியிருந்ததுடன், டிசைன் - கேபின் - சிறப்பம்சங்கள் விஷயத்தில் பிரிமியம் தன்மையும் கூடியிருந்தது. SHVS தொழில்நுட்பம் உடனான பெட்ரோல் / டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பான மைலேஜுக்கும் துணைநின்றன. புத்தம்புதிய தயாரிப்பாக இருப்பினும், விலை விஷயத்தில் சிக்கனமாகவே இருக்கிறது எர்டிகா.

 

Marazzo

 

* போல்ட், ஜெஸ்ட் ஆகிய கார்களிலிருந்து எப்படி டாடா தனது ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண்பித்ததோ, இந்த ஆண்டு மஹிந்திராவின் முறையாக இருந்தது எனச் சொல்லலாம். எர்டிகா மற்றும் இனோவாவுக்குப் போட்டியாகக் களமிறங்கிய மராத்ஸோ, Global NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியது ஆனந்த அதிர்ச்சி! இது ஒருபுறம் என்றால், ஒரு இந்திய நிறுவனத்தின் விலை உயர்ந்த காராக, ஆல்ட்டுராஸ் வெளிவந்து வியப்பளித்தது. கூடவே தனது யுட்டிலிட்டி அடையாளத்தையும் மறந்திடாமல், TUV 3OO ப்ளஸ் காரைக் கொண்டுவந்தது மஹிந்திரா. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இவர்களின் எலெக்ட்ரிக் கான்செப்ட்கள் செம.

 

Go

 

* எலீட் i20, டிகோர், க்ரெட்டா, XUV 5OO, சியாஸ், ஆஸ்பயர், கோ/கோ ப்ளஸ், D-Max V-Cross, C-க்ளாஸ் என இந்த ஆண்டு களமிறங்கிய பேஸ்லிஃப்ட் மாடல்களின் பட்டியல் பெரிது. இவை பெயரளவில் நியூ லுக் என இல்லாமல், குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருந்தன. நெக்ஸான், ரெடி-கோ, விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களில் AMT ஆப்ஷன் அறிமுகமாயின.

 

Indica

 

* இப்படி ஒருபக்கம் புதிய கார்கள் அறிமுகமாயின என்றாலும், மறுபக்கத்தில் இரண்டு முக்கிய கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்; நானோவுக்கு முன்பாக ரத்தன் டாடாவின் செல்லமாக இருந்த இண்டிகா மற்றும் இந்தியாவின் முதல் காம்பேக்ட் செடான் என்ற பெருமை கொண்ட இண்டிகோ CS ஆகிய கார்கள்தான் அவை! விரைவில் அமலுக்கு வரவிருக்கும் கார் கட்டுமான விதிகள் மற்றும் மாசுக் கட்டுப்பாடு விதிகள் காரணமாக, கால ஓட்டத்துக்கு ஏற்ப புதிய கார்களுக்கு வழிவிட்டு இவை தமது மூச்சை நிறுத்தியிருக்கின்றன என்பதே உண்மை. `கமர்ஷியல் வாகனங்களுக்குப் பெயர்பெற்ற ஒரு நிறுவனம், கார்களையும் தயாரிக்க முடியும்' என்பதை ஆணித்தரமாக நிரூபித்த இண்டிகா, Make In India-க்கு முன்பாகவே இந்தியாவில் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும். அதேபோல 'மிட் சைஸ் செடானை காம்பேக்ட் சைஸில் கொடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற கேள்விக்கான விடைதான் இண்டிகோ CS.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்