Published:Updated:

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 10 அடி உயர `பாச்சல்’ கல்குதிரை!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 10 அடி உயர `பாச்சல்’ கல்குதிரை!
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 10 அடி உயர `பாச்சல்’ கல்குதிரை!

நாமக்கல் அருகே பாச்சல் என்ற கிராமத்தில் செல்லியம்மன் கோயிலில் அம்மன் வலம்வரும் 10 அடி உயர குதிரை ஒரே கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டது என்பதை, அறிந்து அங்கு சென்றோம்.

நாமக்கல் மாவட்டம், சேலம் -நாமக்கல் மெயின்ரோட்டில் பாவை கல்லூரிக்கு முன் இடதுபுறம் திரும்பினால் சிறிது தூரத்தில் பாச்சல் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் இருக்கும் அம்மன் கோயிலில்தான் குதிரைச் சிலை மிக தத்ரூபமாக பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் விதமாக செதுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வரலாற்று ஆய்வாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான வெல்லக்கல்பட்டி துரைசாமியிடம் பேசினோம், ``கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரி. இவன் வில்அம்பு விடுவதில் வல்லவன். ஒரே அம்பில் நான்கு விலங்குகளை கொல்லும் சிறப்பு இவனுக்கு உண்டு. இவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிதான் பாச்சல். இங்குதான் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. கோயிலில் ஓரியின் கல்வடிவம் உள்ளது. இவரே இந்தக் கோவிலை கட்டியிருக்க வேண்டும். ஆனால் உரிய ஆதாராம் ஏதும் இல்லை. செல்லியம்மன் கோவில் எதிரே ராஜ கம்பீரத்தோடு கல்குதிரை உள்ளது. இது ஒரே கல்லால் செய்யப்பட்ட குதிரை என்பதால் நாமக்கல் மாவட்டத்தில் மிகச் சிறப்பு பெற்றது.

இக்குதிரை 10 அடி உயரம். 2 அடி அகலம் கொண்டது. குதிரையின் கழுத்தில், உடலின் பின் பக்கத்தில் ஒன்று விடாமல் ஆபரணங்கள் போல் செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் முஷ்டியின் துல்லியம், வால் வரையிலான அலங்காரம் என தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
நடுவில் பெண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு புறத்தில் குதிரை யாளியும், யானையும் சண்டையிடுவது போலவும், மற்றொரு புறம் யானையும், முதலையும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கொடி பெண்ணை பூத கணம் தாங்கி நிற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது. குதிரையின் இரண்டு கால்களிலும் ஒரே மாதிரியான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கழுத்தில் மனித முக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குதிரையின் மீது அம்மன் உட்காரும் வகையில் சிறப்பான அலங்கார் மேடை செதுக்கப்பட்டுள்ளது. காலில் சங்கிலியும், கொலுசும், கால் குளம்பு தெரியும் வகையில் உள்ளது. குதிரை நிற்க பீடத்தின் வடிவமைப்பே மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

குதிரை சிற்பம் குறித்து பேசிய பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், `இதுபோல் ஒரு குதிரையை நாமக்கல் மாவட்டத்தில் எங்கும் பார்க்க முடியாது. ஒரே கல்லால், அவ்வளவு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரிந்த பலரும் அம்மனை வணங்கிவிட்டு கல்குதிரையின் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர். எனக்கு தெரிந்த வரையில் இதுவே வல்வில் ஓரியின் எல்லையாக இருக்க முடியும். ஏனெனில், இங்கிருந்து சுமார்  ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் மூனுசாவடி என்ற இடத்தில் ராஜராஜன் கட்டிய கோவில் உள்ளது. குதிரையில் நாட்டை வலம்வந்த வரும் ஓரியின் குதிரையின் வடிவத்தை முன்மாதிரியாக வைத்து செதுக்கப்பட்ட சிற்பமாகக் கூட இது இருக்கலாம். ராஜ அலங்காரத்தோடு அவ்வளவு கம்பீரமாக, தத்ரூபமாக கல்குதிரை உள்ளது’’ என்றார்.