Published:Updated:

'வைத்தியத்தால் ஒண்ணும் பண்ண முடியாது; ஹரிணி தான் மருந்து!' - கவலைக்கிடமாக இருக்கும் காளியம்மாள்

'வைத்தியத்தால் ஒண்ணும் பண்ண முடியாது; ஹரிணி தான் மருந்து!' - கவலைக்கிடமாக இருக்கும் காளியம்மாள்
'வைத்தியத்தால் ஒண்ணும் பண்ண முடியாது; ஹரிணி தான் மருந்து!' - கவலைக்கிடமாக இருக்கும் காளியம்மாள்

தனது மகள் ஹரிணி காணாமல் போய் 100 நாள்கள் கடந்தும் கிடைக்காத மன உளைச்சலில் அவரது தாய் காளியம்மாள் நிலைமை கவலைக்கிடமாக போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு வயது நிரம்பிய ஹரிணி பாப்பாவை பற்றி விகடன் இணையதள வாசகர்களுக்கு அதிக அறிமுகம் கொடுக்க தேவையில்லை. காஞ்சிபுரம் மாவட்டம்,மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன்,காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த 100 நாள்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்க போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக,பதறிப்போன அந்த தம்பதி,அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது. அதோடு,'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.


 

இந்நிலையில்,கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு,'ஹரிணியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு,மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாக பதிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியை தேடி வருகிறார்கள். இருந்தாலும் ஹரிணி பற்றி நம்பிக்கை தரும் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இதற்கிடையில்,காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால்,ஹரிணி காணாமல் போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினார்கள். இந்நிலையில்தான்,'ஹரிணி கிடைக்கும்வரை நகரமாட்டோம்' என்று அணைக்கட்டு காவல்நிலையத்தின் முன்பே கதி என்று கிடந்த அந்த தம்பதி வேலைக்கும் போகாமல்,சரியாக சாப்பிடாமல் அல்லாடி வந்தது. குறிப்பாக,காளியம்மாள் ஹரிணியை நினைத்து நினைத்து உள்ளம் குமுறியபடி,வேளாவேளைக்கு சாப்பிடாமல் அரற்றி வந்திருக்கிறார். இதனால்,அவர் படுத்திருந்த வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்திருக்கிறார்;அவருக்கு 100 டிகிரியை தாண்டி கடும் ஜூரமும் ஏற்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து நடந்தவற்றை பற்றி நம்மிடம் பேசிய கரூர் இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீம், "இந்த தகவல் எங்களுக்கு வந்ததும் பதறிட்டோம். உடனே,அங்கிருக்கும் எங்க அமைப்பைச் சேர்ந்தவர்களை அனுப்பி,காளியம்மாளை உடனே மருத்துவமனையில் சேர்க்க சொன்னோம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,'இவருக்கு ஜூரம் வந்தது,மயங்கி விழுந்தது எல்லாத்துக்கும் வேறு காரணம் எதுவும் இல்லை,ஹரிணி பற்றிய அதீத நினைப்புதான். அதனால்,ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் சரியாக சாப்பிடாததால் இப்படி ஆயிட்டு. இவருக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. அடுத்த மாதம் அடுத்த குழந்தை டெலிவரியை வச்சுக்கிட்டு,இவர் இப்படி உடம்பாலயும்,மனசாலயும்  இப்படி வருத்திக்கிறது இவருக்கும்,இவரது வயிற்றில் உள்ள இரண்டாவது குழந்தைக்கும் ஆபத்து. உடனடியாக இவரை மனதாலயும்,உடம்பாலயும் தேத்தனும்' என்றிருக்கிறார்கள். அதோடு,அவருக்கு டிரிப் ஏற்றி,அவரை கொஞ்சம் தெம்புபடுத்தி இருக்கிறார்கள்.

காளியம்மாளை தைரியப்படுத்த கனடாவில் இருந்து ஹரிணி கிடைக்க தினமும் வேண்டும் ஒரு பெண்,'ஹரிணி கிடைத்தால் மொட்டையடித்துக்கொள்வேன்' என்று வேண்டிக்கொண்ட புதுவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் என ஹரிணிக்காக தினமும் கவலைப்படும் பலரை வைத்து காளியம்மாளிடம் பேச வைக்கிறோம். 'ஹரிணி கண்டிப்பா கிடைப்பா. உலகம் முழுக்க அவ கிடைக்கனும்ன்னு பல ஆயிரம் பேர் வேண்டிக்கிறாங்க. நீங்க கவலைபடவேண்டாம். நீங்க ஹரிணிக்காக படுற கவலை உங்க ரெண்டாவது குழந்தைக்கு ஆபத்தாக முடியும்' என்று பலவாறு பேச வைத்து,தைரியப்படுத்தி வருகிறோம்.

அதேபோல்,மனோத்துவ மருத்துவர்களை வைத்தும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். இன்னொரு பக்கம்,ஹரிணியை கண்டுபிடிக்க கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறோம். எல்லோரும் காளியம்மாளின் இரண்டாவது குழந்தை நன்றாக பிறக்க வேண்டும்,உடனே ஹரிணி பாப்பா கிடைக்க வேண்டும் என்று  வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.