கவுனி புட்டு, கொழுக்கட்டை, லட்டு ஆரோக்கியம் நிறைந்த கவுனி ரெசிப்பிகள்! | kavuni rice special recipes

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (30/12/2018)

கடைசி தொடர்பு:17:58 (30/12/2018)

கவுனி புட்டு, கொழுக்கட்டை, லட்டு ஆரோக்கியம் நிறைந்த கவுனி ரெசிப்பிகள்!

ஆரோக்கியம் நிறைந்த கவுனி ரெசிப்பிகள்

சிப்ஸ், சாக்லெட் எனக் குழந்தைகளின் வழக்கமான ஸ்நாக்ஸ்கள் தவிர்த்து, அவர்களின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் கவுனி அரிசி ரெசிப்பிகளை இந்த வீக் எண்டில் செய்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

கவுனி அரிசி பழ புட்டிங்

தேவையானவை:

கவுனி அரிசி  - அரை கப்
பால் - 3 கப்
ஆப்பிள், வாழைப்பழம் - தலா ஒன்று
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
கடல்பாசி (சைனா கிராஸ், அகர்அகர்) - 10 கிராம்
சர்க்கரை - அரை கப்

ரெசிப்பி

செய்முறை: 

சுத்தம் செய்த கவுனி அரிசியை போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். வெந்த அரிசியை மசிக்கவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு கடல் பாசியை வெதுவெதுப்பான நீரில் கலக்கி, அரிசி கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். பழங்களை விருப்பமான சைஸில் நறுக்கி வெனிலா எசன்ஸ் சேர்த்து அரிசி கலவையுடன் சேர்க்கவும். பிறகு, அழகான கிளாஸ்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

கவுனி அரிசி லட்டு

தேவையானவை:

கவுனி அரிசி மாவு - அரை கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - கால் கப்
துருவிய வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு

கவுனி அரிசி லட்டு

செய்முறை: 

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். இனி மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து தேவையானவற்றில் கொடுக்கப்பட்ட மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும். லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

கவுனி இனிப்பு (செட்டிநாடு ஸ்பெஷல்)

தேவையானவை:

கவுனி அரிசி - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - முக்கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் - சிறிதளவு

கவுனி இனிப்பு

செய்முறை:  

சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும். குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வேகவிடவும். பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். செட்டிநாடு விசேஷங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் உணவு இது.

கவுனிக் கொழுக்கட்டை

தேவையானவை:

கவுனி அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்

கொழுக்கட்டை

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிச் சூடு பண்ணவும். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கி, கவுனி அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவு கொழுக்கட்டை பதத்துக்கு வந்ததும், தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாகக் கிளறி வைக்கவும். இனி பிசைந்த கொழுக்கட்டை மாவைக் கொழுக்கட்டை அச்சில் வைத்து உள்ள வெல்லப் பூரணத்தை நிரப்பி மூடி எடுக்கவும். கொழுக்கட்டை வடிவம் வந்ததும் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கொழுக்கட்டை தயார்.


டிரெண்டிங் @ விகடன்