வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (30/12/2018)

கடைசி தொடர்பு:09:28 (31/12/2018)

`வெற்று ரயிலைப் பார்த்து கையசைத்தாரா மோடி?' - வைரல் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?

புகைப்படங்களில் கேமராவை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டிருப்பது, குறுக்கே யாரவது அவரை மறைத்து நின்றால் அவர்களைத் தள்ளி நிற்கக் செய்வது என மோடிக்கும் கேமராவிற்கும் இடையே உள்ள பந்தம் ஏற்கனவே வைரலான விஷயம்தானே, அதைப் போல இதுவும் ஒன்று என மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

`வெற்று ரயிலைப் பார்த்து கையசைத்தாரா மோடி?' - வைரல் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?

பிரதமர் மோடி ஒரு பாலத்தில் நடந்து வரும் போது கீழே நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்து கையசைக்கும் வீடியோவை அண்மையில் நீங்கள் பார்த்திருக்கலாம். கடந்த சில நாள்களுக்கு முன்னால் சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோக்களில் அதுவும் ஒன்று. நீங்களும் கூட அந்த வீடியோவை பார்த்துவிட்டு அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்திருக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையைப் பற்றி அதற்கு முன்னால் யோசித்தீர்களா?

ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க ஜி?

மோடி

அஸ்ஸாமில் உள்ள போகிபீல் பாலத்தைக் கடந்த 25-ம் தேதி திறந்து வைத்தார் பிரதமர் மோடி. மேலும் அதில் பயணிக்கும் முதல் ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்தியாவின் மிக நீளச் சாலை-ரயில் பாலம், ஆசியாவின் இரண்டாவது மிக நீளச் சாலை-ரயில் பாலம், மேலும் 1997-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டுப் பல வருடங்கள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது எனப் பல காரணங்களால் சற்று கூடுதல் கவனம் பெற்றிருந்தது இந்தத் திறப்பு விழா. வழக்கம்போல பாலத்தைத் திறந்து வைத்தார் மோடி. அதன் பிறகு அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாயின. ஆனால் அந்த நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட வீடியோ மட்டும் ட்ரெண்டானது. அதன் பிறகு பாலத்தின் கவனத்தை அப்படியே மோடியின் பக்கம் திருப்பியது சோஷியல் மீடியா. பாலத்தில் நடந்து வரும் மோடி கீழே நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்து கையசைக்கிறார். ஆனால் அந்த ரயிலில் எவருமே இருந்ததைப் போலத் தெரியவில்லை. மேலும் பாலத்தின் சுவரில் கேமராவின் நிழலும் தெரிகிறது. 10 நொடிகளுக்கும் குறைவாகவே ஓடக்கூடிய அந்த வீடியோவில் இருந்த காட்சிகள் இவ்வளவுதான். புகைப்படங்களில் கேமராவை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டிருப்பது, குறுக்கே யாரவது அவரை மறைத்து நின்றால் அவர்களைத் தள்ளி நிற்கக் செய்வது என மோடிக்கும் கேமராவிற்கும் இடையே உள்ள பந்தம் ஏற்கனவே வைரலான விஷயம்தானே, அதைப் போல இதுவும் ஒன்று என மக்கள் நினைத்துக் கொண்டார்கள். எனவே ரயிலில் யாரும் இல்லையென்றாலும் கேமராவிற்காக மோடி நடிக்கிறார் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.

ட்வீட்

எனவே வீடியோவை வைத்து மோடியை கலாய்க்கத் தொடங்கினார்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். 'கற்பனையான கூட்டத்தைப் பார்த்து கை அசைக்கிறீர்களா மோடிஜி. ஆளே இல்லாத கடையில் யாருக்கு ஐயா டீ ஆத்துறீங்க?? நீங்கள் எப்போது உண்மையாகவே வேலை பார்க்கப் போகிறீர்கள்?" என ட்வீட் செய்திருந்தார். இவர் மட்டுமின்றி ட்விட்டரில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தவர்கள் பலரும் இதே போல ட்வீட் செய்திருந்தார்கள்.

ரயிலில் யாராவது இருந்தார்களா? உண்மை என்ன? 

ரயில்

மோடி உண்மையில் யாருமே இல்லாத இடத்தைப் பார்த்து கையசைக்கும் அளவுக்கு கேமரா பிரியரா என்றால் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அது உண்மையில்லை. கீழே நின்ற ரயிலில் ஆள்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அவர்களைப் பார்த்து மோடி கையசைத்ததும் உண்மை. அதை அந்த நிகழ்வு தொடர்பான வேறு புகைப்படங்களிலோ மற்ற வீடியோக்களிலோ அதைத் தெரிந்து கொள்ள முடியும். அப்புறம் எப்படி இந்த வீடியோவை உண்மை என்று மக்கள் நம்பினார்கள்? அதற்குக் காரணம் முதலில் அந்த வீடியோ தெளிவாகவே இல்லை ரயில் ஜன்னல்கள் கண்ணாடியால் ஆனவை என்பதால் உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. மேலும் மோடியின் முந்தைய சம்பவங்களோடு இதைத் தொடர்புப்படுத்திக் கொண்டதும்தான் இந்த வீடியோவை பலர் பகிர்ந்ததற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. முந்தைய வரலாறு அப்படி!

மேலே இருக்கும் வீடியோவில் 0.47-ல் ரயிலின் உள்ளே ஆள்கள் இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒரு தவறான செய்தி எந்த அளவு வேகமாகப் பரவும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இந்த விஷயத்தைப் பதிவு செய்த பலர் அந்த வீடியோ உண்மையில்லை என்று தெரிந்த பின்னரும் கூட இன்னும் அதை நீக்காமல் வைத்திருக்கிறார்கள், தவறான செய்தியைப் பதிவு செய்ததற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இது போல தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க கூகுளும் சரி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்களும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. இணைய நிறுவனங்கள் இதைப் பெரிய அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன. ஆனால் அதை அவர்களால் மட்டுமே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பும் தேவைப்படும். அடுத்த முறை இணையத்தில் ஏதாவது வீடியோவையோ அல்லது புகைப்படத்தையோ பார்த்தால் அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொண்ட பிறகே மற்றவர்களுக்கும் பகிருங்கள். 


டிரெண்டிங் @ விகடன்