Published:Updated:

``காட் இஸ் கிரேட்; கண்டிப்பா ஹரிணி கிடைப்பா! ” - காளியம்மாளைத் தேற்றிய லதா ரஜினிகாந்த்

``காட் இஸ் கிரேட்; கண்டிப்பா ஹரிணி கிடைப்பா! ” - காளியம்மாளைத் தேற்றிய லதா ரஜினிகாந்த்
``காட் இஸ் கிரேட்; கண்டிப்பா ஹரிணி கிடைப்பா! ” - காளியம்மாளைத் தேற்றிய லதா ரஜினிகாந்த்

மகள் ஹரிணி தொலைந்து 100 நாள்கள் கடந்தும் கிடைக்காத அல்லாட்டத்தில் உடலும், மனமும் மோசமான நிலையில் இருந்த தாய் காளியம்மாளை போனில் அழைத்து தைரியம் சொல்லியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த 100 நாள்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டுக் காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது. அதோடு, `ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டோம்'என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, `ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். 

இந்தத் தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாகப் பதிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வருகிறார்கள். இருந்தாலும் ஹரிணி பற்றி நம்பிக்கை தரும் எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில், காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல் போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினார்கள். இந்நிலையில்தான், `ஹரிணி கிடைக்கும்வரை நகரமாட்டோம்' என்று அணைக்கட்டு காவல்நிலையத்தின் முன்பே கதி என்று கிடந்த அந்த தம்பதி வேலைக்கும் போகாமல், சரியாகச் சாப்பிடாமல் அல்லாடி வந்தது. குறிப்பாக, காளியம்மாள் ஹரிணியை நினைத்து நினைத்து உள்ளம் குமுறியபடி, வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்.

இதனால், அவர் படுத்திருந்த வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்திருக்கிறார்; அவருக்கு 100 டிகிரியைத் தாண்டி கடும் ஜூரமும் ஏற்பட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சையளித்தார்கள். ``மருத்துவத்தால் ஒண்ணும் பண்ண முடியாது. ஹரிணிதான் அவருக்கு மருந்து" என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இந்நிலையில், நமது செய்தியைப் பார்த்துவிட்டு, காளியம்மாளையும்,வெங்கடேசனையும் போனில் அழைத்து தைரியப்படுத்தியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

நம்மிடம் பேசிய இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாதிக் அலி,
 ``நேத்து காலையில்தான் காளியம்மாளிடம் போனில் கூப்புட்டுப் பேசி இருக்கிறார் லதா ரஜினிகாந்த். `தைரியமா இருங்க. விகடன் இணையதளத்தில் தொடர்ந்து ஹரிணி விவகாரம் பத்திப் படிச்சுட்டு வர்றேன். கலங்காம இருங்க. தைரியமா இருங்க. நாங்களும் ஹரிணியைத் தேட எல்லா வகையிலும் உதவத் தயாரா இருக்கோம். உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறோம். நீங்க இப்படி இருந்தா, உங்க ரெண்டாது குழந்தைக்கும் ஆபத்து. காட் இஸ் கிரேட். கண்டிப்பா ஹரிணி கிடைப்பா. நாங்களெல்லாம் சேர்ந்து தேடி கொடுத்துருவோம்'ன்னு சொல்லவும், காளியம்மாள் கொஞ்சம் தெம்பாகி இருக்காங்க.

அதன்பிறகு, என்கிட்டயும் பேசுனாங்க. `ஒரு ஏழை வீட்டு குழந்தைக்காக உங்க அமைப்பு இவ்வளவு மெனக்கெடறது நல்ல விசயம். தொடர்ந்து முயற்சி செய்யுங்க. நாங்களும் எங்க சைடுல ஸ்டெப் எடுக்கிறோம். வாழ்த்துகள்'ன்னு சொன்னாங்க. லதா மேடமே பேசுனதால, காளியம்மாளுக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. எங்களுக்கும், `ஹரிணி கிடைச்சுருவா'ங்கிற புதுநம்பிக்கை ஏற்பட்டிருக்கு!" என்றார்.