வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (02/01/2019)

வரப்போகுது ராயல் என்ஃபீல்டின் புல்லட் ட்ரையல்ஸ் #Trials

ராயல் என்ஃபீல்டு, புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரப் போவதாகச் செய்திகள் வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது ராயல் என்ஃபீல்டு கொண்டுவர இருப்பது ஸ்கிராம்ப்ளர் இல்லை 2009-ல் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த புல்லட் ட்ரையல்ஸ் மாடல் எனத் தெரிகிறது. 

புல்லட் ட்ரையல்ஸ் 350

ஆஃப் ரோடு ட்ரையலுக்காகவே உருவாக்கப்படுவதுதான் ட்ரையல் பைக் என்பார்கள். மாடர்ன் ட்ரையல் பைக்குகள் எடை குறைவானதாக, மோனோஷாக் சஸ்பென்ஷன் உடன், எலக்ட்ரானிக் அதிகம் இல்லாமல் முழுக்க முழுக்க ஆஃப் ரோடுக்காக தயாரிப்பார்கள். ஆனால், ராயல் என்ஃபீல்டின் ட்ரையல்ஸ் அந்த வகையில் சேராது. அதனால், ஸ்கிராம்ப்ளர் பைக்காகவே இதை எடுத்துக்கொள்ள முடியும். வரவிருக்கும் புதிய பைக் புல்லட் மாடல்களின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டின் புல்லட் 350 மற்றும் புல்லட் 500 இன்ஜின்களுடன் வரவிருக்கிறது.

bullet trials 500

பெட்ரோல் டேங்க், சைடு பேனல் புல்லட்டில் இருப்பதுதான். எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கை உற்றுப் பார்த்தால் தெரியும் ஃபெண்டர்கள் சின்னதாகவும் ஒல்லியாகவும் இருப்பது. சாதாரண கிளாசிக், புல்லட் பைக்குகளைவிட ஹேண்டில்பார்கள் இதில் உயரமாக இருக்கின்றன. ஹேண்டில்பாரில் இன்டர்செப்டார் 650 போல க்ராஸ் பார் வைத்திருக்கிறார்கள். டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜீடி 650 பைக்குகளில் இருப்பதுபோலவே உள்ளன. ஃபிரேம், சம்ஃபிரேம், ஸ்விங் ஆரம், சென்டர் ஸ்டாண்டு போன்றவை ஒரு நிறத்திலும் மற்ற பாகங்கள் வேறொரு நிறத்திலும் உள்ளன.

ட்ரையல்ஸ் மாடல் பைக் டெஸ்டிங்கில்

பட்டன்கள் வைத்த ஆஃப் ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரியர் சீட்டுக்குப் பதிலாக லக்கேஜ் ரேக் உள்ளது. எக்ஸாஸ்ட் பைப் ஸ்கிராம்பிளர் ஸ்டைலில் மேல் நோக்கிப் பார்த்தவாறு பொருத்தப்பட்டுள்ளது. ஆஃப் ரோடுக்கு ஏற்ற லாங் டிராவல் சஸ்பென்ஷன் இருப்பதாகத் தெரியவில்லை. 

ட்ரையல்ஸ் வேரியன்ட் பைக்குகளில் ஸ்டாண்டர்ட் புல்லட் 350/500-ல் இருக்கும் அதே இன்ஜின்தான். புல்லட்டின் 346cc இன்ஜின் 19.8bhp பவர் 28Nm டார்க் உருவாக்கக்கூடியது. 499cc இன்ஜின் 27.2bhp பவர் மற்றும் 41.3Nm டார்க் உருவாக்கக்கூடியது. இரண்டிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ராயல் என்ஃபீல்டின் இந்த ட்ரயல்ஸ் பைக் இந்த ஆண்டே விற்பனைக்கு வரவுள்ளது.