வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (03/01/2019)

15 நிமிடத்தில் 87 பேரின் அடையாளத்தையும் சொல்லி தங்கப் பதக்கம் வென்ற 12 வயது துருவ்!

ஒரு மணி நேரத்தில் ஏழு சீட்டுக்கட்டில் உள்ள கார்டுகளின் வரிசையையும், அரை மணி நேரத்தில் 1,155 எண்களையும், பதினைந்து நிமிடத்தில் 87 பெயர்களையும், முகங்களையும் அச்சு பிசுக்காமல் அப்படியே சொல்லி அசத்தி வருகிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன் துருவ். 

துருவ்

அடிக்கடி அழைத்துப் பேசும் நண்பர்களின் மொபைல் எண்ணையே நினைவில்கொள்ள முடியாமல் தடுமாறிவரும் வேளையில், பதினைந்தே நிமிடத்தில் 87 பேரின் பெயர்களையும், முகங்களையும் நினைவில் வைத்து அச்சு பிசுக்காமல் அப்படியே சொல்லியும், அரை மணி நேரத்தில் 1155 எண்களையும், ஒரு மணி நேரத்தில் ஏழு சீட்டுக்கட்டில் எப்படி கலைத்துப்போட்டு அடுக்கினாலும் அதை ஒரு முறை பார்வையிட்டு, வரிசை மாறாமல் சொல்லி ஆச்சர்யப்படுத்தி வருகிறான் 12 வயதுள்ள துருவ். 

அண்மையில் ஹாங்காங்கில் நடந்த `உலக மெமரி சாம்பியன்ஷிப் போட்டி'யில் சீனா, ரஷ்யா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 பேருக்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டதில், `பெயர்கள் மற்றும் முகங்கள்' பிரிவிலும், `வார்த்தைகளையும் எண்களையும் நினைவுபடுத்துதல்' பிரிவிலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளான் துருவ் மனோஜ். இவனின் தந்தை, மனோஜ் பிரபாகர் சிங்கப்பூரில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறியும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். 

துருவ் நினைவாற்றல்

``நினைவுத் திறனை மேம்படுத்துவதற்கு வாரத்தில் இரண்டு மணி நேரமும், போட்டியில் கலந்துகொள்ளும்போது, நான்கு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமும் பயிற்சி செய்வேன். ஏராளமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள ஏதேனும் ஒரு பொருளோடு அல்லது இடத்துடன் கற்பனை செய்துகொண்டால் எளிதில் மறக்காது. கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலேயே நினைவாற்றலின் மூலம் மிகப்பெரிய சாதனை செய்ய முடியும்" என்று நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான டிப்ஸையும் வழங்குகிறான் துருவ். 

வாழ்த்துகள் துருவ் மனோஜ்!