Published:Updated:

பாகிஸ்தானுக்காக தயாராகும் அதிநவீன போர்க் கப்பல் -அச்சுறுத்தும் சீனா

பாகிஸ்தானுக்காக தயாராகும் அதிநவீன போர்க் கப்பல் -அச்சுறுத்தும் சீனா
பாகிஸ்தானுக்காக தயாராகும் அதிநவீன போர்க் கப்பல் -அச்சுறுத்தும் சீனா

பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் செய்துகொண்டுள்ள ஆயுத ஒப்பந்தத்தின்படி சீனா, பாகிஸ்தானுக்கான அதிநவீன போர்க் கப்பல் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை உணர்த்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான சீனா சக்திவாய்ந்த, அதிநவீன போர்க் கப்பல் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இதேபோன்று 4 போர்க் கப்பல்களை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும்  எனத் தெரிகிறது. 

இந்தப் போர்க் கப்பல் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல், எதிரிகளின் கப்பல் மட்டுமல்லாது நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள் முதலியவற்றை அழிக்கவல்லது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், இது 4,000 மெட்ரிக் டன் எடை தாங்கும் எனவும் கூறப்படுகிறது. 

File Photo

இந்தக் கப்பல் கட்டும் பணி முடிந்து, பாகிஸ்தானுக்குச் செல்லும்போது, பாகிஸ்தானின் பலம் வாய்ந்த நவீனக் கப்பலாக இது இருக்கும் என்கிறது பி.டி.ஐ-யின் ரிப்போர்ட். அதேபோன்று சீனா ஏற்றுமதி செய்யும் கப்பல்களில், நவீன மற்றும் பெரிய போர்க் கப்பல் இதுவாகத்தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா முற்றுகையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகத்தை  `சீனா பாகிஸ்தான் பொருளாதார’ ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது கையில் வைத்துள்ளது. மேலும், இலங்கையின் ஹம்பண்டோடா துறைமுகத்தை கட்டி அதையும் தனது கட்டுப்பாட்டில் சீனா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும், பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கும் நாடாகவும் சீனா உள்ளது.