318 ஆராய்ச்சிக் கட்டுரைகள்; சர்வதேச உயர் மதிப்புமிகு ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்! | highest cited researchers list only one Tamil Nadu scientist name listed

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (04/01/2019)

கடைசி தொடர்பு:10:20 (04/01/2019)

318 ஆராய்ச்சிக் கட்டுரைகள்; சர்வதேச உயர் மதிப்புமிகு ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!

சர்வதேச அளவில் உயர் மதிப்புமிகு கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சக்திவேல் ரத்தினசாமி இடம்பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

ஆராய்ச்சி

சர்வதேச அளவில் அதிக மதிப்பு மிகுந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது கிளாரிட் அனலிட்டிக்ஸ் நிறுவனம்.  இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் உலக அளவில் அதிக மதிப்புள்ள ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்ட 4,000  ஆராய்ச்சியாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து பத்து பேரும், தமிழகத்திலிருந்து ஒருவரும் இடம்பிடித்துள்ளனர். 

இந்தப் பட்டியலில் 80 சதவிகிதம் பேர் பத்து நாடுகளிலிருந்து இடம்பிடித்துள்ளார்.  இந்தப் பட்டியலில், அதிக ஆராய்ச்சியாளர்கள் கொண்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் (2,639), இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும் (546), மூன்றாவது இடத்தில் சீனாவும் (482), நான்காவது இடத்தில் ஜெர்மனியும் (356) உள்ளன. 

கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே இடம்பிடித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் பத்து பேர் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளரும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.என்.ஆர் ராவ், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் அவினேஷ் குமார், மெட்ராஸ் ஐ.ஐ.டி பேராசிரியர் ரஜ்னீஷ்குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் தினேஷ் மோகன், போபால் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் அலேக் மிட்டல் மற்றும் ஜோதி மிட்டல், சி.எஸ்.ஐ.ஆர். ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த அசோக் பாண்டே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை பேராசிரியர் சக்திவேல் ரத்தினசாமி என இந்தியாவிலிருந்து 10 பேர் இடம்பிடித்துள்ளனர். 

சக்திவேல் ரத்தினசாமி ஆராய்ச்சியாளர்பேராசிரியர் சக்திவேல் ரத்தினசாமி, இதுவரை 318 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை 6,660 பேர் ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றியும், மேற்கோள்காட்டியும் உள்ளனர். 

பேராசிரியர் சி.என்.ஆர். ராவ், ``இந்தியாவில் இன்னமும் ஆராய்ச்சிக்கு அதிகளவில் கவனம் செலுத்தாததாலும், ஆராய்ச்சியைக் கட்டுரைகளை வெளியிடுவதில் ஆர்வம் இல்லாததாலும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம். இந்த நிலை இனி வரும் காலங்களில் மேம்பட்டு, ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் சீனாவுடன் போட்டி போட வேண்டும்” என்கிறார்.

அதிக மதிப்பு மிகுந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பிடித்த பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் ரத்தினசாமிக்கு பாராட்டுகள்!