பிளாஸ்டிக் தடை... புத்துயிர் பெரும் பயோ பிளாஸ்டிக்! இது சரியான மாற்றுதானா? | Biodegradable Plastic, A new version of plastics

வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (04/01/2019)

கடைசி தொடர்பு:10:34 (04/01/2019)

பிளாஸ்டிக் தடை... புத்துயிர் பெரும் பயோ பிளாஸ்டிக்! இது சரியான மாற்றுதானா?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாகம் தொடங்கியதில் இருந்து உலகம் இதுவரை 9 பில்லியன் டன்கள் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்துள்ளது. அதில் 165 மில்லியன் டன்களைக் கடலில் கொட்டியுள்ளோம்.

பிளாஸ்டிக் தடை... புத்துயிர் பெரும் பயோ பிளாஸ்டிக்! இது சரியான மாற்றுதானா?

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துவிட்டது. நெகிழிக்குப் பதிலாகப் பாக்கு மட்டைகள், இலைகள், அலுமினியம் ஷீட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதேநேரம், வேறு ஒரு பெயரைச் சொல்லிக்கொண்டு மீண்டும் பிளாஸ்டிக் விநியோகிக்கப்படுகிறது. அப்படி விற்கப்படுவது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காது, அவை மக்கும் தன்மை கொண்டவை என்பன போன்ற செய்திகளும் சொல்லப்படுகின்றன. அவற்றின் பெயர் பயோ பிளாஸ்டிக்.

சூழலைப் பாதிக்காது, மக்கிவிடும் என்ற செய்திகளோடு தற்போது சந்தையில் சுழன்று கொண்டிருக்கும் பயோ பிளாஸ்டிக் உண்மையில் மக்கும் தன்மை கொண்டதுதானா! அவற்றால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் விளையாதா!?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாகம் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் இதுவரை 9 பில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 165 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் கடலில் கொட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் 9 மில்லியன் கொட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அளவில் வெறும் ஒன்பது சதவிகித பிளாஸ்டிக்குகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மற்ற அனைத்தும் சுற்றத்தைக் கெடுப்பதிலும், நிலத்தைக் குப்பை மேடுகளாக ஆக்கிரமிப்பதுமாகச் சூழலைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்குவதற்குச் சுமார் ஐந்நூறு ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆபத்தான நச்சு வேதிமங்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும். பெட்ரோலிய உற்பத்தியின்போது துணை உற்பத்தியாக உருவாகும் வேதிமங்களில்தான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அந்த வேதிமங்களுக்குப் பதிலாக இயற்கையாகக் கிடைத்த பொருள்களை வைத்துத் தயாரிக்கப்படுவதே பயோ பிளாஸ்டிக். இவை புதைபடிம எரிபொருள்களில் கிடைக்கும் வேதிமங்களைப் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுபவை. முந்தையவற்றில் இருக்கும் பி.பி.ஏ (B.P.A) என்ற வேதிமம் இருக்காது. அதனால் குறைவான கார்பன் வெளியேற்றம், விரைவாக மக்கும் தன்மை போன்றவற்றோடு இருக்குமென்று சொல்லப்படுகிறது. அதோடு இதில் நச்சுத்தன்மையும் மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது.

பயோ பிளாஸ்டிக்

``அனைத்து வகைப் பிளாஸ்டிக்குமே மக்கும். ஆனால், அதற்கு ஆகும் மிக நீண்டகால அவகாசமும் அதுவரை அது ஏற்படுத்தும் பிரச்னைகளும்தான் அவற்றை ஆபத்தானதாகப் பார்க்க வைக்கின்றன. இந்தப் புதிய வகை அப்படியில்லை. அது சீக்கிரமே மக்கிவிடும்" என்று சொல்லப்படுகிறது.

பிளாஸ்டிக் துகள்களாக உடைந்துவிடுவதால் அது மக்கிவிட்டது என்று சொல்லமுடியாது. அது இத்தனை ஆண்டுகளுக்குள் மக்கிவிடும் என்று சொன்னவர்களின் கூற்றும் இப்படியானதுதான். தூசுகளாக, துகள்களாக மாறுவதை மக்கிவிட்டதாகக் கூறமுடியாது. மக்குவது என்றால் உருமாற வேண்டும். அப்படி இல்லாமல் துகள்களாக உடையும்போது மண்ணோடு மண்ணாகக் கலந்து மேலும் அதிகத் தீங்குகளைத்தான் ஏற்படுத்தும். இதிலிருந்து பயோ பிளாஸ்டிக் கொஞ்சம் வித்தியாசமானது. இவற்றின் அணுக்கள் முழுமையாக உடைந்து நீர், கரிம வாயு போன்றவையாகச் சூழலில் கலந்துவிடுகின்றன. இதைச் செய்யத் தேவையெல்லாம் அது கிடக்கும் இடத்தில் சில நுண்ணுயிரிகள் மட்டுமே. அதுவும் சில வாரங்களிலோ சில மாதங்களிலோ இது நடந்துவிடும்.

இந்த மாதிரியான மக்கும் தன்மைகொண்ட பயோ பிளாஸ்டிக்குகள் பிளாஸ்டிக் உபயோகத்தில் ஒரு மாற்றாக இருக்கலாம். இந்த மாற்று நல்லதுதானா! இது உண்மையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதா!

உலகளவில் இது அறிமுகமான சில ஆண்டுகளிலேயே 2010-ம் ஆண்டு, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். ஏழு சாதாரண பிளாஸ்டிக், நான்கு பயோ பிளாஸ்டிக், புதை படிம எரிபொருள் உற்பத்தியில் கிடைத்த வேதிமம் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய இயற்கைப் பொருள்கள் இரண்டையும் கலந்து உருவாக்கிய ஒரு பிளாஸ்டிக் என்று மூன்று வகைப் பிளாஸ்டிக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது இயற்கை விளைபொருள்களை பிளாஸ்டிக் தயாரிக்க உகந்தவாறு மாற்றப் பயன்படும் வேதிமங்கள் பழைய பிளாஸ்டிக்கைப் போலவே அதே விகிதத்தில் சூழலுக்கு ஆபத்து விளைவிப்பதாகக் கண்டறிந்தனர். பழைய பிளாஸ்டிக்குகளைவிட பயோ பிளாஸ்டிக்குகளில் இருந்து வெளியாகும் அதிகமான மீத்தேன் வாயு ஓசோன் படலத்தைப் பெரிதும் பாதிப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது. அதோடு அதன் வேதிமங்களில் சூழலைப் பாதிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிமங்களும் புற்றுநோய்க் காரணியான கார்சினோஜென் என்ற வேதிமும் இருப்பது தெரியவந்தது. பயோ பிளாஸ்டிக் தயாரிக்க வளர்க்கப்படும் பயிர்களில் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதோடு பிளாஸ்டிக்காக மாற்றப் பயன்படுத்தும் வேதிமங்களும் சேர்ந்து சாதாரண பிளாஸ்டிக்கைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர்.

பழைய பிளாஸ்டிக்குகளைவிட பயோ பிளாஸ்டிக்குகள் எந்த விதத்திலும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சளைத்தது கிடையாது. பயோ பிளாஸ்டிக்குகள் மக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் அணுக்கள் உடைந்து அதிலிருக்கும் வேதிமங்கள் சூழலில்தான் கலக்கும். அதோடு இந்த பயோ பிளாஸ்டிக்கை குப்பை மேடுகளில் மேய்ந்து திரியும் ஆடு மாடுகள், மற்ற பறவைகள், விலங்குகள் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் கிடையாதா என்ற கேள்வியும் எழுகிறது. ஆடு, மாடுகளும் மற்ற உயிரினங்களும் இதைச் சாப்பிடும்போது, பழைய பிளாஸ்டிக் ஏற்படுத்திய அதே மாதிரியான பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும். அதோடு மீத்தேன் வாயு என்ற கரிம வாயுவைவிட 23 மடங்கு அதிகமான வீரியமுடைய பசுமை இல்ல வாயுவைத்தான் இவை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றைப் பயன்பாடு

இதுபோக நிலப் பயன்பாட்டிலும் பயோ பிளாஸ்டிக் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தயாரிக்கப் பயன்படும் பயிர்களே உணவுக்கும் விளைவிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு சோளம், கரும்பு போன்றவற்றில் இருந்துதான் பயோ பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இதன் உற்பத்திக்கு மட்டுமே சுமார் 34 லட்சம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகின்றன. அப்படிச் செய்தால் உணவு உற்பத்திக்குத் தேவைப்படும் நிலங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். 2008-ம் ஆண்டு பிரிட்டனில் குவிந்த பயோ பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யமுடியாமல் போனது. அவை மக்குவதற்கு அதிகமான வெப்பம் தேவைப்பட்டது. நிலங்களில் வழக்கம்போல் பிளாஸ்டிக் சேர்ந்துகொண்டே போக மறுசுழற்சி செய்யத் திட்டமிட்டனர். ஆனால், சாதாரண பிளாஸ்டிக்குகளைப் போல் இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாமல் திணறினார்கள். நிறைய இடங்களில் பயோ பிளாஸ்டிக் உற்பத்தி உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சோளம், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்குகளின் விற்பனை உலக அளவில் ஆண்டுக்கு இருபது முதல் முப்பது சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது இப்படியே போவது ஆரோக்கியமானது இல்லை.

நிலைத்த நீடித்த பயன்பாடு (Sustainable), மக்கும் (Biodegradable), உரமாக்கலாம் (Compostable), மறுசுழற்சி செய்யலாம் (recyclable) என்பன போன்ற வார்த்தைகளோடு இந்த பயோ பிளாஸ்டிக்குகளை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆனால், அந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். மக்கிவிடும் என்பதாலேயே அது நன்மை பயப்பதாகிவிடாது. நிலத்துக்குச் சென்றால் அங்கிருந்து மீத்தேனாக வெளியாகி மேலும் பாதிப்புகளைத்தான் ஏற்படுத்துகிறது. பிறகு எப்படி அதைச் சூழலுக்கு நன்மை பயப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும். 

இது தொடர்பாக பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜமாணிக்கத்திடம் பேசினோம், ``பிளாஸ்டிக் என்ன பிரச்னைகளைக் கொண்டு வந்ததோ அதையேதான் இதுவும் செய்யும். இதன் தயாரிப்பு, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றிலிருந்துதான் எடுக்கிறார்கள். இரண்டுமே உணவுப் பொருள்கள். ஆனால், அதைப் பிளாஸ்டிக்காக மாற்றும்போது வேதிமங்கள் பலவும் கலக்கப்படுகிறது. மக்கிவிடும் என்று கூறினாலும், ஒரு கால்நடையின் வயிற்றுக்குள் போகும்போது அதேமாதிரியான பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும்" என்று கூறினார்.

``மாற்றம் நல்லதுதானே. என்ன வந்தாலும் ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருப்பதா" என்று சிலர் சொல்லலாம். உடனடி மாற்றம் என்பது எப்போதும் மேலும் அதிகச் சிக்கல்களுக்குத்தான் வழிவகுக்கும். அப்படியாக இந்த மாற்றம் அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. ஆனால், நாம் மீண்டும் மீண்டும் பன்னாட்டு வணிகத்துக்கான நுகர்வுக் கலாசார சிறைக்குள்தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஒன்றைத் தடைசெய்தால், ஒருமுறை பயன்படுத்திக் குப்பைக்கு அனுப்பும் விதமாக இன்னொன்று முன்வைக்கப்படுகிறது. மக்களை நுகர வைத்துக்கொண்டே இருப்பது பொருளாதார ரீதியில் லாபகரமாகத் தோன்றலாம். ஆனால், அதிகமான கழிவுகளைச் சேர்க்காமல் வாழ ஊக்குவிப்பதே சமூகத்துக்கும் அந்தச் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு வித்திடும் சுத்தமான சுற்றத்துக்கும் துணைபுரியும்.

குப்பை மேடாகும் காடுகள்

இந்த மாதிரியான மாற்றுகள் மக்களை மீண்டும் மீண்டும் நீடித்த நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையிலிருந்து திசைதிருப்பிக் கொண்டேயிருக்கிறது. மக்கள் பாதுகாப்பான வகையில் துணிப் பைகளை, இலைகளை, பாக்கு மட்டைகளை, தூக்குச்சட்டிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டிய இந்தச் சமயத்தில் பயோ பிளாஸ்டிக் என்று கூறி மீண்டும் அதே குப்பை போடும் கலாசாரத்துக்குள் இழுக்கப்படுகிறார்கள். எந்த ஒரு மாற்றமும் முழுமையான ஆய்வுகளோடு, நிலையான முழுமையான திட்டங்களோடு கொண்டுவரப்பட வேண்டியது முக்கியம். அந்த அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும். 

இங்கு மாற்றவேண்டியது பிளாஸ்டிக்கின் வகைகளை அல்ல. மக்களிடம் இருக்கும் குப்பைபோடும் மனநிலையை. ஆனால், பொருளை மாற்றி மீண்டும் மீண்டும் மக்களை ஒருமுறை பயன்படுத்திக் குப்பையில் போடலாமென்று அதே நாற்றத்துக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றது இந்தத் தனியார்மய நுகர்வுக் கலாசாரம்.


டிரெண்டிங் @ விகடன்