"எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுக்காததால் திருமணமே செய்துகொள்ளவில்லை!" - மனம்திறக்கும் மதுரை எம்.ஜி.ஆர் ரசிகர்! | "MGR is the God for us!" - An ardent MGR fan from Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (04/01/2019)

கடைசி தொடர்பு:16:54 (04/01/2019)

"எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுக்காததால் திருமணமே செய்துகொள்ளவில்லை!" - மனம்திறக்கும் மதுரை எம்.ஜி.ஆர் ரசிகர்!

"எம்.ஜி.ஆர். இல்லாமல் அ.தி.மு.க இத்தனை பெரிய கட்சியாக வளர்ந்திருக்க முடியாது. எனவே, அவரை முன்னிலைப்படுத்தவேண்டும். அவர் நினைவாக அவரைப் பற்றிய புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து நூலகம் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம்."

``எம்.ஜி.ஆர். தாலி எடுத்துக்கொடுத்தால்தான், திருமணம் செய்துகொள்வேன்" என்றவருக்கு, அந்த ஆசை நிறைவேறாததால், இன்றுவரை திருமணமே செய்துகொள்ளாமலே வாழ்ந்துவருகிறார், மதுரையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவர்.

சண்முகசுந்தரம்

மதுரையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 57 வயதான இவர், நண்பர்களோடு இணைந்து எம்.ஜி.ஆர். பெயரில் நற்பணிகளைச் செய்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``சின்ன வயசிலிருந்தே நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர், என்றால் எனக்கு உயிர். அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்துவிடுவேன். வீட்டில் கொடுக்கும் காசைவைத்து தலைவரின் படத்தைப் பார்ப்பேன். அவர் படம் என்றால், 10 கிலோ மீட்டர் என்றாலும் நடந்துசென்று பார்த்துவிட்டு வருவேன். 1977 தேர்தலின்போது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் மதுரைக்கு வந்திருந்தார், எம்.ஜி.ஆர். அவரைப் பார்ப்பதற்காக நானும் என் தாத்தாவுடன் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக வந்த கார் ஒன்று என் தாத்தவை இடித்துவிட்டது. அதில் பாதிக்கப்பட்ட என் தாத்தாவை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். 

எம்.ஜி.ஆர். பொக்கிஷங்கள்

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., என் தாத்தவை மருத்துவமனைக்குப் பார்க்கவந்தார். அப்போது, அவரிடம் என்னையும் என் தாத்தா அறிமுகப்படுத்திவைத்தார். என் சட்டைப்பையில் இருந்த அவரது புகைப்படத்தைப் பார்த்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிற்கு, `நல்லா படிக்கவேண்டும், எல்லாருக்கும் எப்போதும் நல்லது செய்யவேண்டும்' என்றார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை. அவருடைய அன்பு, என்னை இன்னும் தீவிர ரசிகனாக மாற்றியது. பின்னர்,  படித்து முடித்துவிட்டு மதுரையிலேயே வேலை பார்த்தேன். அப்போது, எனக்கு வயது 23. அந்தச் சமயத்தில் என் குடும்பத்தினர் எனக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். அதைப் பார்த்த நான், `எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன். இல்லையென்றால், எனக்குத் திருமணமே வேண்டாம்' என்றேன். அதைக் கேட்டும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் அவருடைய மறைவும் ஏற்பட... நான், திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று முடிவுசெய்து இன்றுவரை திருமணமே செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவருகிறேன். அதே நேரத்தில் அவரது பெயரில் நண்பர்களுடன் இணைந்து நற்பணிகளைச் செய்துவருகிறேன். எம்.ஜி.ஆருக்காக, நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று என்னைப் பலபேர் கேலி செய்வார்கள். அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை" என்று ஆச்சர்யப்படுத்தினார். 

மதுரை சண்முகசுந்தரம், தமிழ்நேசன்

எம்.ஜி.ஆரைக் கடவுளாக நினைத்து வாழ்பவரும், சண்முகசுந்தரத்தின் நண்பருமான தமிழ்நேசன், ``சண்முகசுந்தரம், நான் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து நற்பணிகள் செய்துவருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்குப் படிக்கும் குழந்தைகள், உழைப்பாளிகளுக்கு உதவி வருகிறோம். நான், எம்.ஜி.ஆர் தொடர்பான எல்லாப் புத்தகங்கள், பட போஸ்டர்கள், பட டிக்கெட்கள் என எல்லாவற்றையும் சேகரித்துவைத்துள்ளேன். பென்சில், பேனா, சுவிட்ச் போர்டு என எல்லாவற்றிலும் அவருடைய படங்களை ஒட்டியுள்ளேன். எம்.ஜி.ஆர்தான் எனக்கு கடவுள். என் நண்பர்களும் அவரைத்தான் கடவுளாக நினைக்கின்றனர். ஆனால், தற்போது உள்ள அரசியல்வாதிகள் அவர் படத்தை தங்களது போஸ்டர்களில் உப்பைப் போல சிறிதாகப் பயன்படுத்துகின்றனர். அவர் இல்லாமல் அ.தி.மு.க இத்தனை பெரிய கட்சியாக வளர்ந்திருக்க முடியாது. எனவே, அவரை முன்னிலைப்படுத்தவேண்டும். அவர் நினைவாக அவரைப் பற்றிய புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து நூலகம் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம்" என்றார், நிதானமாக.


டிரெண்டிங் @ விகடன்