நெல்வயலில் மீன்வளர்ப்பு... கூட்டு விவசாயத்தில் அசத்தும் இந்தோனேஷியா! | Indonesia Farmers leading in Rice-fish farming technique

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (04/01/2019)

கடைசி தொடர்பு:17:34 (04/01/2019)

நெல்வயலில் மீன்வளர்ப்பு... கூட்டு விவசாயத்தில் அசத்தும் இந்தோனேஷியா!

நெற்பயிர் மூலமாக ஆயிரம் சதுர கிலோமீட்டரில் 112 டாலர் ஈட்டி வந்த சிகித், நெற்பயிர் - மீன் வளர்ப்பு மூலமாக மாதம் 740 டாலர் வரை வருமானம் பார்த்து வருகிறார். நெற்பயிரை மட்டும் வைத்து விவசாயம் செய்து தவித்து வந்தவர், நெற்பயிர் - மீன் கூட்டுப் பண்ணையின் மூலம் மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

நெல்வயலில் மீன்வளர்ப்பு... கூட்டு விவசாயத்தில் அசத்தும் இந்தோனேஷியா!

விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளுக்குத் தனித்தனியாகப் பாரம்பர்ய முறை இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயேகூட ஒரே விவசாய முறை பின்பற்றப்படுவது இல்லை. அவற்றிற்குள்ளும் அதிகமான வேறுபாடுகள் இருக்கின்றன. அதிலும் இந்தோனேஷியாவின் பாரம்பர்ய விவசாய முறை கொஞ்சம் சுவாரஸ்யமானது. தண்ணீர் சேமிப்பு முறை, வயல்களின் தோற்றம் என சில விஷயங்கள் தமிழகத்தைப் போலவே இருக்கும். ஆனால், அவர்களின் நெற்பயிர் வளர்க்கும் முறை கொஞ்சம் வித்தியாசமானது.

நமது ஊர்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்து தனியாக மீன்களை வளர்ப்பது வழக்கம். இந்தோனேஷியாவில் தாங்கள் வளர்க்கும் நெல் வயல்களிலேயே மீன்களை வளர்த்து வருகிறார்கள். ஒரு நெல் வயலுக்குக் குறைந்தபட்சம் 60 நாள்கள் வரை தண்ணீர் தேவைப்படும். அந்தத் தண்ணீரை வைத்து ஒரே நேரத்தில் நெற்பயிர்களையும், மீன்களையும் வளர்த்து தண்ணீரை மிச்சப்படுத்தும் முறை கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நெற்பயிர் - மீன்கள்

Photo: Crnews.net

இந்தோனேஷியாவில் பாரம்பர்யமாக தொன்று தொட்டு பின்பற்றப்படும் வழக்கம் இது. அங்கே நெற்பயிர்தான் பிரதான பயிர். அதனால்தான் அத்தண்ணீரைப் பயன்படுத்தி மீன்களையும் வளர்க்கிறார்கள். இதற்காக அமைக்கப்படும் வயல்களின் அமைப்பு கொஞ்சம் வித்தியாசமானது. நெல் வயல் ஒரு பக்கம் சிறிது சரிவாக இருப்பது போல அமைக்கப்படும். இதனால் வயலின் ஏதாவது ஒரு பக்கத்தில் தண்ணீர் அதிகமாகத் தேங்கி நிற்கும். நெற்பயிர் நடவு செய்து சில நாள்களில் மீன்கள் விடப்படுகின்றன. நெற்பயிருக்குக் கொடுக்கப்படும் தண்ணீரை நிறுத்தும் வரை மீன்களை அங்கேயே வளர்ப்பது வழக்கம். மீன்களைப் பிடிக்கும் தருணத்தில் வயல்களில் இருக்கும் தண்ணீரை குறைத்தால் சரிவான பக்கம் நோக்கி நீர் குறைய ஆரம்பிக்கும். சரிவான பக்கத்தின் ஓரத்தில் வலைகளை வைத்து மீன்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். இப்படி வளர்க்கப்படும் மீன்களுக்கு இந்தோனேஷியாவில் கொஞ்சம் டிமாண்ட் அதிகமாகத்தான் இருக்கிறது. 

`வயலில் விடப்படும் மீன்களால் நெற்பயிரும் காப்பாற்றப்படுகிறது' என்கிறார்கள், இந்தோனேஷிய விவசாயிகள். மேலும் `வயலில் இருக்கும் சிறிய பூச்சிகளை மீன்கள் உணவாக எடுத்துக்கொள்கிறது. இதனால் பூச்சிகளின் சேதத்திலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் வயல்களில் நீந்துவதால் பயிர்களுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும் மீன்களின் கழிவுகள் பயிர்களுக்கு நல்ல உரமாகவும் மாறுகிறது. இதனால் சாகுபடியின்போது மகசூல் பத்து சதவிகிதம் அதிகரிக்கிறது,' என்கிறார்கள், விவசாயிகள்.

இந்தோனேஷிய விவசாயியான சிகித் பார்யோனோ (sigit paryono) எனும் விவசாயி நெற்பயிர் - மீன் கூட்டு வளர்ப்பில் அசத்தி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  சிகித் பார்யோனா 17 வயதில் விவசாயத்துக்கு வந்துவிட்டார். விவசாயத்தைத் தவிர இவருக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தன்னுடைய பெற்றோர்கள் விட்டுச் சென்ற சிறிதளவு நிலத்தை வைத்துக்கொண்டு நெல் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால் அதில் கிடைக்கும் வருமானம் அடிப்படைத் தேவைக்கே சரியாக இருந்தது. அதைத் தாண்டி அவரால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்த பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. 

இந்தோனேஷியாவில் நெற்பயிரில் வளர்ப்பு

2011-ம் ஆண்டு நெற்பயிரில் மீன்களை வளர்த்து தோல்வி காண்கிறார். முறையாக மேலாண்மை செய்யப்படாததால் நஷ்டமடைந்து அதைக் கைவிட்டு, நெற்பயிரை மட்டும் வளர்க்க ஆரம்பிக்கிறார். அவரது மனம் நெற்பயிர் - மீன் வளர்ப்பு பக்கமாகப் போக மறுக்கிறது. இந்த நிலையில்தான் 2013-ம் ஆண்டு மீன்வளத் துறை அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார். அவர்கள் நெற்பயிரையும், மீன்களையும் கூட்டாக வளர்ப்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி பயிற்சி கொடுக்கிறார்கள். அதற்காக மீன்வளத் துறை சார்பில் கடனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து நெற்பயிர் - மீன்கள் கூட்டுப் பண்ணையத்தை ஆரம்பிக்கிறார். அதிகாரிகளின் ஆலோசனை, மீன் பராமரிப்பு யுக்திகள் எனப் பலவற்றை முறையாகச் செய்கிறார். ஆச்சர்யம் அவர் எதிர்பார்த்ததைவிட அதிக முன்னேற்றம் தெரிந்திருக்கிறது. இதன் மூலமாக வயலில் அதிக அளவிலான மீன்களை இன்று வளர்த்து வருகிறார், சிகித்.

மீன்கள் அதிகமாகச் சேதமடையாமல் இருக்க நெல் வயலின் மேற்புறம் வலை அமைத்திருக்கிறார். மீன்கள், பறவைகளால் வேட்டையாடப்படுவதைத் தடுக்க முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். நெற்பயிர்களில் மீன்களை வளர்ப்பதால் அவற்றின் உணவு செலவும் கணிசமாகக் குறைகிறது. நெற்பயிர் மூலமாக ஆயிரம் சதுர கிலோமீட்டரில் 112 டாலர் ஈட்டி வந்த சிகித், நெற்பயிர் - மீன் வளர்ப்பு மூலமாக மாதம் 740 டாலர் வரை வருமானம் பார்த்து வருகிறார். நெற்பயிரை மட்டும் வைத்து விவசாயம் செய்து தவித்து வந்தவர், நெற்பயிர் - மீன் கூட்டுப் பண்ணையின் மூலம் மகிழ்ச்சியாக வலம் வருகிறார். இதன் மூலம் தனியாக ஒரு மீன் பண்ணையையே நிறுவி இன்று பலருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து தொழிலதிபராக மாறிவிட்டார். இவர் மட்டுமல்ல, அங்கே இவரைப் போல பல விவசாயிகளும் நெற்பயிர்களில் மீன்களை வளர்த்து லாபம் பார்த்து வருகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்