வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:07:02 (05/01/2019)

அறிவியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் புதிய பணியில் மயில்சாமி அண்ணாதுரை!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. 

மயில்சாமி அண்ணாதுரை

தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது அறிவியல் தொழில்நுட்ப மன்றம். இது, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் வழிகாட்டி வருகிறது. இந்த மையத்தின் துணைத்தலைவராக இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். 

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் 1982-ம் ஆண்டு பணியாளராக வேலைக்குச் சேர்ந்தவர் பல்வேறு பணி நிலைகளில் பணியாற்றி 2005-ம் ஆண்டு இம்மையத்தின் இயக்குநராக உயர்ந்தவர். இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநராகச் செயல்பட்டவர். 2008-ம் ஆண்டு நிலவுக்கு சந்திரயான்-1 செயற்கைக்கோளை அனுப்பி உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியவர். சந்திரனில் நீர் உள்ளதை உறுதி செய்து நிரூபித்தார். 2018-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி தனது 36 வருட அனுபவத்துடன் இஸ்ரோ பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 

கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதில் தேர்வுக்குழு தேர்வு செய்த 10 பேர் கொண்ட பட்டியலிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால், துணைவேந்தர் பணி கிடைக்கவில்லை. தற்போது தமிழக அரசு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. 

அறிவியல் பணி

இவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், இனி வரும் காலங்களில், பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களிடத்திலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து திட்டப் பணிகளில் அதிகளவில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.