Published:Updated:

சர்வதேச கராத்தே போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! - கொல்கத்தாவில் உபசரித்து நெகிழ்ந்த தமிழர்

சர்வதேச கராத்தே போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! - கொல்கத்தாவில் உபசரித்து நெகிழ்ந்த தமிழர்
சர்வதேச கராத்தே போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! - கொல்கத்தாவில் உபசரித்து நெகிழ்ந்த தமிழர்

 கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தனிநபர் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு மொழிதெரியாத கொல்கத்தாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் உதவி செய்து நெகிழவும் வைத்திருக்கிறார்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக அரசுப் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இந்தப் பள்ளி ஆசிரியர்கள் 13 லட்சம் வரை ஸ்பான்சர் மூலமாக நிதியுதவி பெற்று ஸ்மார்ட் கிளாஸ் முதல் இயற்கை விவசாயம், நாப்கின் எரியூட்டி எந்திரம் வரை எண்ணற்ற வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.

இந்தப் பள்ளி மாணவர்களுக்கு தனித்திறமைகளை வளர்க்கும் பொருட்டு, விடுமுறை நாள்களில் முசிறியை சேர்ந்த கண்ணன் என்ற பயிற்சியாளரைக் கொண்டு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளைக் கற்றுத் தருகிறார்கள். அப்படி, `தனித்திறமைகளை வளர்க்க' என்று ஆரம்பித்த இந்த முயற்சிதான் இப்போது இந்தப் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சர்வதேச அளவில் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற வைக்கும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச கராத்தே போட்டியை ஒரு தனியார் அமைப்பு நடத்தியுள்ளது. இந்தியா முழுக்க இருந்து பல மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டியில்தான் தனிநபர் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்கள். பொய்யாமணி பள்ளியில் படிக்கும் தனுஷ், சாரதி, மாதவன் மற்றும் மதுமிதா என்ற மாணவர்கள்.
 இவர்களை ஒருங்கிணைத்து அழைத்துப்போன இந்தப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி,
 ``சர்வதேச போட்டிதான் அது. ஆனால், இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து எண்ணற்ற மாணவர்கள் கலந்துகொண்டனர். நாங்கள் மட்டுமே அரசுப் பள்ளி. மீதமுள்ள அனைத்து மாணவர்களும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் எங்கள் மாணவர்கள் நான்கு பேரும் தன்னம்பிக்கையோடு போட்டியில் கலந்துகொண்டு நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, தமிழக அரசுப் பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்களை முன்னாள் கல்வித்துறை செயலர் ப.உதயச்சந்திரன் போன் பண்ணி பாராட்டினார். அதேபோல்,மொழி,இடம் புரியாத கொல்கத்தாவில் போட்டி நடைபெற்ற இரண்டு நாள்களும் அங்கு எலக்டிரிக்கல் பொறியாளராக பணிபுரியும் தமிழர் ஒருவர் எல்லாவகையிலும் உதவி, மாணவர்களை ஊக்கப்படுத்தி, எங்களை வழிகாட்டி, மாணவர்களுக்குப் பரிசுக் கொடுத்துன்னு எங்களை நெகிழ வைத்துவிட்டார். 

அவர் பெயர் சூரியன் ரவி. முதல்வர் ஊரான எடப்பாடியின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவராம். அவர் எனக்கு ஃபேஸ்புக்கில்கூட நண்பர் கிடையாது. யார்ன்னே தெரியாத அவர், எங்கள் பள்ளி மாணவர்கள் கொல்கத்தாவில் கராத்தேவில் கலந்துகொள்ளவிருக்கும் எனது ஃபேஸ்புக் பதிவை ஏதோ ஒரு லிங்க் மூலம் பார்த்துட்டு, என் நம்பர் பிடித்துப் பேசினார்.

கொல்கத்தாவில் போய் கால்வைத்ததில் இருந்து எங்களை அழைத்துப் போய் தங்க வைத்தது, ஸ்டேடியத்துக்கு அழைத்துப் போனது, சாப்பாடு பிரச்னையைத் தீர்த்தது, போட்டியில் மாணவர்கள் பங்கேற்றபோது வந்து அவர்களை உற்சாகப்படுத்தியதுன்னு ரொம்ப உதவி பண்ணினார். அதோடு, கொல்கத்தாவில் பிரபலமான இனிப்புக் கடையில் 2,500 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கி வந்து மாணவர்களுக்கு கொடுத்தார். மாணவர்கள் பரிசுகள் வாங்கியதும், அவ்வளவு சந்தோஷப்பட்டார். `அரசுப் பள்ளி மாணவர்கள் இவ்வளவு தூரம் வந்ததே பெருமையான விசயம்'ன்னு உச்சிமுகர்ந்து பாராட்டினார். கடைசியாக எங்களை சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டு, ரயில் நகர தொடங்கியதும்தான் அவர் நகர்ந்தார். மொழி, இடம் தெரியாத ஊரில் கேட்காமலேயே எங்களைத் தேடிவந்து உதவி செய்து, எங்களையும், மாணவர்களையும் நெகிழ வைத்துவிட்டார்" என்றார்.