கெளரவர்கள் 100 பேருமே டெஸ்ட் டியூப் குழந்தைகள்தான் - ஆந்திர பல்கலை துணைவேந்தர் அதிர்ச்சி தகவல்! | Andra University VC says Kauravas were test tube babies, Ravana had several airports in Lanka

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (06/01/2019)

கடைசி தொடர்பு:09:26 (06/01/2019)

கெளரவர்கள் 100 பேருமே டெஸ்ட் டியூப் குழந்தைகள்தான் - ஆந்திர பல்கலை துணைவேந்தர் அதிர்ச்சி தகவல்!

``ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ஸ்டெம் செல், டெஸ்ட் டியூப் தொழில்நுட்பம் இருந்துள்ளது. கெளரவர்கள் 100 பேருமே டெஸ்ட் டியூப் குழந்தைகள் தான்” என்று ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் கூறியுள்ளார். 

துணைவேந்தர்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் கலந்துகொண்டு உரையாற்றியவர், ``மகாபாரத காலத்திலேயே டெஸ்ட் டியூப் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது. கெளரவர்கள் 100 பேருமே சோதனைக் குழாய் கருத்தரிப்பில் பிறந்தவர்கள்தான். 

விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம், இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். அந்த வகையில் இன்றைய ஏவுகணைகளின் தொழில்நுட்பத்துக்கு சுதர்சன சக்கரம்தான் முன்னோடி. ராவணனிடம் ஒரேயொரு புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை. ராவணனிடம், வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 வகையான விமானங்கள் இருந்துள்ளன. அவற்றை இயக்குவதற்காக இலங்கையில் ஏராளமான விமான நிலையங்கள் இருந்துள்ளன. 

துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ்

கெளரவர்களின் தாயார் காந்தாரி, எப்படி 100 குழந்தைகளைப் பெற்றிருக்க முடியும்? இது சாத்தியம் தானா என்று எல்லோரும் கேள்வி கேட்கின்றனர். இது சாத்தியம்தான் என்பதை, இன்றைய சோதனைக் குழாய் தொழில்நுட்பம் நிரூபித்திருக்கிறது. மகா பாரதத்தில், கருவுள்ள 100 முட்டைகள், 100 மண்பாண்டங்களில் போடப்படுகின்றன என்றால், அந்த மண்பாண்டங்கள் சோதனைக் குழாய்கள் அல்லாமல் வேறு என்னவாக இருந்திருக்கும். 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்டெம்செல் ஆராய்ச்சியும், டெஸ்ட் டியூப் தொழில்நுட்பமும் இருந்திருக்கிறது” என்று உரையாற்றியுள்ளார் ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ். 

அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், இவரது உரையைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.