Published:Updated:

`முதலில் மாலை வரவேற்பு; அடுத்து ஹெல்மெட்!'- வாகன ஓட்டிகளிடம் போலீஸ் விழிப்புஉணர்வு

`முதலில் மாலை வரவேற்பு; அடுத்து ஹெல்மெட்!'- வாகன ஓட்டிகளிடம் போலீஸ் விழிப்புஉணர்வு
`முதலில் மாலை வரவேற்பு; அடுத்து ஹெல்மெட்!'- வாகன ஓட்டிகளிடம் போலீஸ் விழிப்புஉணர்வு

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணியாத 10 வாகன ஓட்டிகளுக்குக் காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து மாலை போட்டு அறிவுரை வழங்கினர்.

ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடியில் வாகன சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 10 பேருக்குத் தூத்துக்குடி மாநகரக் காவல் மற்றும் ஜெபா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் இணைந்து ஹெல்மெட் வழங்கும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சந்திப்பு சிக்னல் பகுதியில் டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 45 வயது மற்றும் அதற்கு மேல் மதிக்கத்தக்க 20 ஆண்களை ஓரமாக நிறுத்தினர். அவர்களிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை என போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், ஹெல்மெட் இல்லாத, தினக்கூலி வேலை பார்ப்பவர்களுக்கு ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மாலையும் அணிவித்து, அறிவுரை கூறி அனுப்பினர். இதுகுறித்து டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் பேசுகையில், ``இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வருபவர்கள் ஹெல்மெட் அணிந்தே வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும். அரசின் கட்டாயத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் ஹெல்மெட் அணியக்கூடாது. தங்களின் உயிர்ப்பாதுகாப்புக்காக என நினைத்து அணிய வேண்டும்.

எதிர்பாராத வாகன விபத்துகளால் சிறு காயங்கள், பலத்த காயங்கள், உடல் உறுப்புகள் பாதிப்புகளிலிருந்து உயிரிழக்கும் நிலை வரை ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற விபத்துகளால் வாகனம் ஓட்டி வருபவர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குடும்பத்தினரை மனதில் நினைத்தாவது ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். 2019-ம் ஆண்டு விபத்தில்லாத தூத்துக்குடி மாநகராக மாற்றுவதை இலக்காக நினைத்து போக்குவரத்து போலீஸார் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்குப் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

சமூகத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் இதுபோன்று பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டுப்பிரசுரம் வழங்குதல், ஹெல்மெட் வழங்குதல் போன்ற விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட முன்வர வேண்டும்” என்றார்.