முதல் உலகவெப்பமயமாதலின் போது இந்த உலகம் எப்படி அழிந்தது தெரியுமா? #GreatDying | How the world extinct while the Great Dying?

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (07/01/2019)

கடைசி தொடர்பு:14:56 (07/01/2019)

முதல் உலகவெப்பமயமாதலின் போது இந்த உலகம் எப்படி அழிந்தது தெரியுமா? #GreatDying

இந்தத் தொல்லெச்சங்களைப் பாருங்கள். அவை சில நூறு ஆண்டுகளோ சில ஆயிரம் ஆண்டுகளோ பழைமையானவை அல்ல. பல லட்சம் ஆண்டுகள் பழைமையானது. இன்று நாம் ஏற்படுத்தியுள்ள உலக வெப்பமயமாதல் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை ஏற்கெனவே அனுபவித்தவற்றின் சமாதிதான் இந்தத் தொல்லெச்சங்கள்.

முதல் உலகவெப்பமயமாதலின் போது இந்த உலகம் எப்படி அழிந்தது தெரியுமா? #GreatDying

உலக வெப்பமயமாதல்.

``அட இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லிட்டு இருப்பீங்க. இப்ப என்ன? பூமி சூடாகிட்டிருக்கு. துருவத்துல பனிக்கட்டி உருகுது. கடல் மட்டம் உயருது, காலநிலை மாறுது, பேரழிவு காத்திட்டிருக்கு. அதானே!”

ஆம். ஆனால், இப்போது பேசப்போவது அதைப் பற்றியல்ல. இந்த உலக வெப்பமயமாதல் பிரச்னை ஏற்கெனவே வந்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா! இதுவரை பூமியில் ஏற்பட்ட பேரழிவுகளிலேயே மிகப்பெரிய பேரழிவு, கிட்டத்தட்ட மொத்த உயிரினங்களையும் துடைத்து எடுத்துக்கொண்டு போன பேரழிவு. அத்தகைய ஓர் அழிவுக்கு வித்திட்டது இந்த உலக வெப்பமயமாதல்தான் என்று சொன்னால் நம்புவீர்களா!

இந்த உலக வெப்பமயமாதல், பூமியில் அப்போது வாழ்ந்த நீர்வாழ் உயிரினங்களை சுவாசிக்க விடாமல் மூச்சுத் திணற வைத்துக் கொன்றழித்தது. இதைச் சொன்னால் உங்களால் நம்பமுடியுமா!

தொல்லூழிக் காலத்தின் (Paleozoic Era) இறுதிக்கட்டமான கடைத்தொல்லுயிர்க் காலத்தில் (Permian period) இந்தப் பேரழிவு நடந்தது. சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தப் பேரழிவு இயற்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அழிவுகளை ஏற்படுத்திச் சென்றது. இது டைனோசர்கள் தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம். அந்தச் சமயத்தில் பூமியில் அதிகமாக இருந்த பெரிய எரிமலைகள் கண்டத்தட்டு நகர்வியல் காரணமாக அதிகமான வெடிப்பு நிகழ்வுகளை ஏற்படுத்தின. அதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கடைத்தொல்லுயிர்க் காலத்தின் முடிவுக்கு வித்திட்டது. அந்த முடிவு, இறுதியில் அப்போது வாழ்ந்த 96 சதவிகிதம் நீர்வாழ் உயிரினங்களை அழித்துவிட்டது. இதை ஆய்வாளர்கள் ``பெருமரணம்” () என்று குறிப்பிடுகிறார்கள்.

வெப்பமயமாதல் விளைவுகள்

கடைத்தொல்லுயிர்க் காலப் பேரழிவு காலநிலை மாற்றத்தின் தற்போதைய விளைவுகளைப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கலாம். அந்தக் கோணத்தில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

தட்பவெப்ப நிலையும், பிராண வாயுவும்தான் கடல்வாழ் உயிரினங்கள் உயிர்த்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தப் பேரழிவின்போது ஏற்பட்ட கடல் தட்பவெப்பநிலை அதிகரித்தல், பிராண வாயு குறைதல் எந்த அளவுக்கு நிகழ்ந்திருக்கும் என்பதை ஆய்வு செய்தனர். பலகட்ட ஆய்வுகள் அதையும் தெரிந்துகொள்ள வைத்தது. அப்போதைய கடல்வாழ் உயிரினங்களின் தொல்லெச்சங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. அதோடு முந்தையவர்களின் பல்வேறு ஆய்வுகளில் கிடைத்தவையும் அவர்களுக்கு உதவின.

தொல்லூழிக் காலத்தின் பேரழிவு ஏற்பட வித்திட்ட காரணிகளைத் தெளிவாக விளக்கியாக வேண்டும். அப்போதுதான் அதைத் தற்போதைய உலக வெப்பமயமாதல் நிகழ்வோடு பொருத்திப் பார்க்கமுடியும். அதற்காகத் தொல்லூழிக் காலத்து நீர், நில அமைப்புகளையும் அதில் ஏற்பட்ட பேரழிவுகளையும் விளக்கும் வகையில் ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார்கள்.

பூமியின் வளிமண்டலத்தில் கலந்த அதிகமான வாயுக்கள், வெப்பமயமாதல் உருவாகக் காரணமாகின. அவை நீர்வாழ் உயிரினங்களின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்தது. வேகமான வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்ததால் அதிகமான பிராணவாயு தேவைப்பட்டது. ஆனால், கடலின் தட்பவெப்பநிலை உயர்ந்துகொண்டிருந்த அந்தச் சூழலில் அவற்றுக்குப் போதுமான பிராண வாயு உற்பத்தியைச் செய்யவில்லை. கடல்வாழ் உயிரினங்களுக்கு மூச்சுத்திணறத் தொடங்கியது. கடல் முழுவதும் நடந்த அமிலமாக்கல் தாவரங்களை வெகுவாகப் பாதித்தது. கடல்நீரின் அமிலத்தன்மை அபரிமிதமாக அதிகமாகியது. அதனால், தாவரங்கள் தம் ஒளிச்சேர்க்கைச் செயற்பாடுகளுக்கான திறன்களை இழந்து அழியத் தொடங்கின.

கடைத்தொல்லுயிர்க் காலத்தின்போது பூமியின் நிலப்பகுதி இப்போதுபோல் கண்டங்களாகப் பிரிந்திருக்கவில்லை. இப்போதைய சைபீரியா அப்போது பேஞ்சியா என்ற பெரும் கண்டத்தில் அமைந்திருந்தபோது அதில் மிகப்பெரிய ஓர் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அது அதிகமான பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றியது. அந்நிகழ்வு ஏற்படுத்திய மாற்றங்கள் தற்போதுள்ள நிலைமைக்கு ஒத்துப்போகிறது. அதாவது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய மாதிரி வடிவத்தின் மூலம் தொல்லூழிக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பேஞ்சியா

 

 

வெப்பமயமாதலும் பிராண வாயு குறைபாடும் கடல் பகுதியை உயிர்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றிவிடுகிறது. ஊகித்த நிலவியல் மற்றும் காலநிலை மாற்றங்களும், வெப்பநிலையும் உயர்ந்தால் தொல்லெச்சங்களில் பதிவான `பெருமரணம்’ வருங்காலத்தில் நிகழ்ந்து நாமும் தொல்லெச்சங்களாகி விடுவோம் என்பதில் சந்தேகமில்லை.

தொல்லூழிக்கால மாதிரிகளை ஆய்வு செய்ததில் மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. மிகச் சில உயிரினங்கள் இவ்வளவு பெரிய சூழலியல் தாக்குதலையும் தாங்கி உயிர் பிழைத்தது தெரியவந்தது. பேரழிவின்போது ஒன்று உய்த்து உயிர்பிழைத்து வாழப் போராட வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும். நம் போராட்டப் பாதை எது என்பதைப் பொறுத்து இருக்கிறது வாழ்வா சாவா என்பது.

பொதுவாக இவர்கள் போட்ட கணக்குப்படி, வெப்ப மண்டலங்களில் வாழ்ந்த உயிரினங்கள் ஏற்கெனவே அதிக வெப்பநிலைக்கும் குறைவான பிராண வாயு உற்பத்திக்கும் பழகியிருக்கும். அதனால், அவை இந்த அதிக வெப்பமயமாதலைத் தாக்குப்பிடித்து உய்த்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், நடந்தது வேறு.

வெப்ப மண்டலங்களில் வாழ்ந்த நில வாழ் உயிரினங்கள் துருவத்தில் வாழ்ந்தவற்றைவிட அதிகமான பிரச்னைகளைச் சந்தித்துள்ளன. சுவாசிக்கக் காற்றில்லாமல், அதிக வெப்பநிலையோடு, ஆபத்தான நச்சு வாயுக்களோடு எண்ணற்ற அழிவுகள் நடந்துள்ளன. வெப்ப மண்டலங்களில் வாழ்ந்த அனைத்து உயிர்களுமே மிச்சமில்லாமல் அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட ஒன்றும் மிச்சமின்றி அனைத்தும். இங்கேயே நிலைமை இப்படியிருக்க, துருவங்களிலும், குளிரான நிலப்பகுதிகளிலும் நிலைமை இதைவிட மோசமாக இருந்துள்ளது. மிகக் கொடூரமான பாதிப்புகளை அங்கு வாழ்ந்த உயிரினங்கள் சந்தித்துள்ளன.

இந்தப் பெரும் மரணங்களின் ஆரம்பமான வெப்பமயமாதல், பிராண வாயுக் குறைபாடு, காலநிலை மாற்றம் அனைத்தும் தற்போதும் ஏற்படுகின்றன. பூமியில் மிகப்பெரும் அழிவை உண்டாக்கிய சூழலியல் மாற்றங்கள் தற்போதும் அதேபோன்ற அழிவுக்குத்தான் வித்திடும். சுற்றுச்சூழலும் காலநிலைகளும் கடைத்தொல்லுயிர்க் காலத்தில் இருந்ததுபோலவே இப்போதும் இருக்கின்றன. அப்படி இருப்பதால் இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகளை ஊகிக்க முடியுமென்று நம்புகிறார்கள்.

நம் இப்போதைய வாழ்வுமுறையே மேலும் தொடர்ந்தால், 2100-ம் ஆண்டே அத்தகைய அழிவு ஆரம்பமாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது 2100-ம் ஆண்டு, கடல் பரப்புகளில் தட்பவெப்பநிலை தொல்லூழிக் காலத்திய வெப்பநிலையில் 20 சதவிகிதம் அளவுக்கு எட்டிவிடும். அதுவே 2300-ம் ஆண்டில் 35 முதல் 50 சதவிகிதம்வரை வெப்பநிலை உயரலாமென்று கணிக்கப்படுகிறது. சில லட்சம் ஆண்டுகளாக நடைபெற்ற பேரழிவு இப்போது சில நூறு ஆண்டுகளில் நடக்கப்போகிறது.

தொல்லூழியின் நீர்வாழ் உயிரினங்கள்

கடைத்தொல்லுயிர் காலத்தில் பூமி வெப்பமயமாதலுக்கு, பேரழிவுக்கு வித்திட்டது என்ன? அதிகமாக நடந்த எரிமலை வெடிப்பு நிகழ்வுகள். அதனால் வளிமண்டலத்தில் கலந்த அதிகக் கரிம வாயு, கந்தகம் மற்றும் இதர வாயுக்கள். நவீனகாலப் பிரச்னைகளும் இதே சிக்கல்களால்தான் ஏற்படுகின்றன. அப்போது ஏற்பட்டதற்குக் காரணி எரிமலைகள், இப்போது நிகழ்வதற்குக் காரணி மனிதர்கள். நிகழ்காலப் பிரச்னைகளே கடந்த காலத்தில் ஓர் ஆகப்பெரும் பேரழிவை பெரும் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரச்னைகள் மீண்டுமொரு பேரழிவுக்கு வித்திடும். உலகில் இதுவரை நடந்த ஐந்து பேரழிவுகளும் இயற்கையாக நடைபெற்றன. இது மனிதனால் ஏற்படுத்தப்படுகிறதென்ற ஒன்றைத் தவிர பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஆம், ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது. இல்லை, தொடங்கி வைத்துவிட்டோம்.


டிரெண்டிங் @ விகடன்