Published:Updated:

``சைக்கிள்மூலம் வியாபாரம் செய்வது நிம்மதியா இருக்கு!" - கரூர் பலூன் வியாபாரி!

``சைக்கிள்மூலம் வியாபாரம் செய்வது நிம்மதியா இருக்கு!" - கரூர் பலூன் வியாபாரி!
``சைக்கிள்மூலம் வியாபாரம் செய்வது நிம்மதியா இருக்கு!" - கரூர் பலூன் வியாபாரி!

ன்றைய நவீனயுகத்தில், பக்கத்துத் தெருவுக்குப் போவதற்கே மோட்டார் சைக்கிளைத் தேடுகிறோம். `நடப்பதோ, சைக்கிள் மிதிப்பதோ கௌரவக் குறைச்சல்' என்று நம்மில் பலர் தவறான கற்பிதத்தை உள்ளுக்குள் விதைத்துக் கொள்கிறோம். ஆனால், அப்பாஸ் அப்படி இல்லை. தொலைதூரத்தில் இருக்கும் சேலத்துக்காகட்டும்,150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரைக்காகட்டும், `தன்காலே தனக்கு உதவி' என்று `ஓட்டை உடைசல்' சைக்கிளை மிதித்தபடி சென்று சேர்ந்துவிடுகிறார். சைக்கிளில் மீன், ஏரோபிளேன், டால்பின், சின்ட்ரெல்லா எனப் பலவகையான பலூன்களை விற்பதுதான் இவருக்குத் தொழில். கரூர் டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே வைத்து அப்பாஸைச் சந்தித்தோம். 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளப்பட்டிதான் அப்பாஸுக்குச் சொந்த ஊர். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ரேஸ்மா என்ற 3 வயதுப் பெண்குழந்தையும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இப்படி சைக்கிளிலேயே பல கிலோமீட்டர்களை அசால்டாகக் கடந்துசெல்கிறார். திடீரெனக் கைகாட்டி தன்னை மறித்த பள்ளிச் சிறார்களிடம், சைக்கிளை நிறுத்தி 10 நிமிடம் வியாபாரம் பார்க்கிறார். பிறகு நம்மிடம் பேசிய அவர், ``எனக்கு என் மனைவி, குழந்தையைவிட்டால் சொந்தம்னு சொல்லிக்க ஆள் இல்லை. சொந்த வீடுகூட எனக்குக் கிடையாது. வாடகை வீட்டுலதான் குடியிருக்கிறோம். மகளைப் பார்த்துக்க ஆள் வேணும்ங்கிறதால, என் மனைவியை வேலைக்கு அனுப்பலை. என் வருமானம் மட்டுமே குடும்பத்தை நகர்த்துது. இந்தப் பலூன் விக்கிற தொழிலை கடந்த 15 வருஷமா பார்க்கிறேன். இந்தத் தொழிலை ஆரம்பிச்சப்ப வாங்குன சைக்கிள் இது. ஆனா, இன்னையவரைக்கும் என்னையும், என் குடும்பத்தையும் மூணுவேளை சோத்துக்குப் பழுதில்லாம நகர்த்திக்கொண்டு போவது. பெருசா வருமானம் இல்லை. இருந்தாலும் என் ஓட்டைச் சைக்கிள் போலவே என் குடும்பமும் தட்டுத்தடுமாறி உருளுது. மாசத்துக்கு ஒருதடவை மதுரைக்குப் போய் டால்பின், மீன், மிக்கிமவுஸ், சின்ட்ரெல்லா, சோட்டாபீம் உள்ளிட்ட பெரிய சைஸ் பலூன்களையும், மற்ற பலூன்களையும் மொத்தமா வாங்கிக்குவேன். அதைக் காத்தால நிரப்பி, சைக்கிள்ல கட்டிக்கிட்டுப் பெரும்பாலும் நெடுஞ்சாலை ஓரமாகவே வியாபாரத்துக்குப் போவேன். கொஞ்சம் உள்ளடங்கி கிராமப் பகுதிகளுக்குப் போனா, `என்ன ஒரு பலூன் அறுபது ரூபாயா?'னு மிரளுவாங்க. போணியும் ஆகாது. ஆனா, நெடுஞ்சாலையில் போவும்போது, கார்ல போவோரும், வருவோரும் என்னை நிறுத்தி பலூன்களை வாங்குவாங்க. அவங்களும் பேரம் பேசவே செய்வாங்க. 


 

தினமும் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்வேன். செருப்பும், கால்ல போடமாட்டேன். காரணம், எந்தச் செருப்பும் என் காலுக்கு செட்டாகலை. அதிக ரேட்டு உள்ள செருப்பை வாங்கிப் போட்டுப் பார்த்தும், காலை கடிச்சதாலே, `செருப்பே வேண்டாம் சாமி'னு விட்டுட்டேன். சேலம், மணப்பாறை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், ஈரோடுனு நான் சைக்கிளை மிதிச்சுப்போய் வியாபாரம் பார்க்காத ஊர் இல்லை. என் சைக்கிளுக்கு கிலோமீட்டர்கள் ஒரு பொருட்டில்லை. வாரத்துல ஆறு நாள்கள் இப்படி ஊர் ஊரா சுத்தி வியாபாரம் பார்ப்பேன். ஹோட்டல்கள்ல சாப்பிட்டுக்கிட்டு, கிடைச்ச இடத்துல படுத்துக்குவேன். வாரத்துல செவ்வாய்க்கிழமை மட்டும் எங்கே இருந்தாலும் குடும்பத்தைப் பார்க்க ஊருக்கு வந்துருவேன். தினமும் 200 ரூபாய் கிடைச்சாலே பெருசுங்கிற நிலைமை சார். சைக்கிள்ல, அழுக்குச் சட்டையைப் போட்டுக்கிட்டுக் கால்கடுக்க மிதிச்சு இப்படி வியாபாரம் பார்க்கிற என்கிட்ட யார் சார் வாங்கப் பிரியப்படுறாங்க. குளுகுளுனு ஏசி போட்ட கட்டடத்தில் கலர்ஃபுல்லா லைட்டைப் போட்டு நான் விக்கிற தரத்தைவிட கம்மியா உள்ள தரத்துல விக்கிற பொருளை 200, 300னு பேரமே பேசாம காசு கொடுத்து எல்லாரும் வாங்கிடுறாங்க. எல்லாம் மாய உலகமாப் போய்ட்டு சார். உண்மைக்குக் காலம் இல்லை. இருந்தாலும் நான் அதைப்பத்திக் கவலைப்படுறதில்லை. நான்பாட்டுக்கு வியாபாரம் ஆனாலும், ஆவலன்னாலும் சைக்கிளை மிதிச்சுக்கிட்டுப் போய்ட்டே இருப்பேன். ஆனா, சில இடங்களில் யாராவது வம்பு புடிச்சவங்க, பலூன்களைக் குத்திப் பஞ்சராக்கிடுவாங்க. அப்ப மனசு கனத்துப் போயிரும். அந்த நேரத்துல, தப்படி தூரம்கூட என்னால சைக்கிள் மிதிக்க முடியாது. இரண்டு மூணு மணி நேரம் அப்படியே எங்காச்சும் அக்கடானு மல்லாக்கப் படுத்து மனசை ஆசுவாசப்படுத்திக்கிட்டுதான் சைக்கிளை நகர்த்துவேன். ஆனா, அன்னைக்கு முழுதும் மனசு செத்தே கிடக்கும். 


 

ஆனா, பெருசா பகட்டா வாழ ஆசைப்படாத மனைவி, சளி, காய்ச்சல்னுகூடச் செலவு வைக்காத குழந்தைனு இருப்பதால், என் பொழப்பு பழுதில்லாம ஓடுது. பெருசா வருமானம் இல்லைனாலும், தினமும் சைக்கிள் மிதிப்பதால, இந்தப் பதினைஞ்சு வருஷத்துல நானும் ஒரு சின்னத் தலைவலின்னுகூடப் படுத்ததில்லை. சைக்கிளை தொடர்ச்சியா மிதிப்பதால, நல்லா பசிக்குது. படுத்த அடுத்த நொடியே தூங்க முடியுது. எனக்குக் கெட்டபழக்கும்னு எதுவும் இல்லை. ஆனா, கோடி ரூபா கார்ல போய், ஒரு லட்ச ரூபாய் செல்போன்ல பேசி, கோடிகோடியா சம்பாதிக்கிறவங்க உடம்புல ஆயிரத்தெட்டு நோயிருக்கு. அவங்க தூங்கக்கூட மாத்திரைதான் போட வேண்டி இருக்கு. நமக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. சிலர்கூட, `ஏண்டா தம்பி, ஒரு வண்டிவாகனத்தை வாங்கி, அதுல நோகாமப் போய் வியாபாரம் பார்க்க வேண்டியதுதானே'னு உசுப்பேத்துவாங்க. ஆனா, நான் அதைக் காதுல வாங்கிக்கமாட்டேன். விரலுக்கேத்த வீக்கம் வேணுமில்லையா? வண்டினு வாங்கப் போனா, அதுக்கு பெட்ரோல் செலவு இருக்கு. அதைவிட, என் மனசுக்குள்ள `சொகுசு' வந்து உக்காந்துக்கும். அதுல பயணிக்கிற மனைவியும், குழந்தையும்கூட ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிடுவாங்க. அப்போ, தினமும் 200 ரூபா சம்பாதிக்கிற நான், அதுக்காகக் கடனை வாங்க வேண்டி இருக்கும். அப்புறம், கடன்சுமை அதிகமாகி, கழுத்தை நெரிக்கும். குடும்ப நிம்மதியே போயிரும். அதனால்தான், `சைக்கிளே போதும்'ங்கிறதுல தெளிவா இருக்கேன். அதனால்தான், வருமானம் குறைவா இருந்தாலும், எந்த வம்பு வழக்கும் இல்லாம மகிழ்ச்சியா வாழுறோம்" என்றார், சிரித்தபடி.

அவரது பலூன்களில் நிரம்பிக்கிடக்கும் காற்றைப்போல,அவரது ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓராயிரம் அனுபவப் பாடங்கள். அப்பாஸிற்கு வாழ்க்கை வசப்பட்டிருக்கிறது!.