Published:Updated:

525 நாள்களில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த அப்துல் கலாம் தேசிய நினைவகம்!

525 நாள்களில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த அப்துல் கலாம் தேசிய நினைவகம்!
525 நாள்களில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்த அப்துல் கலாம் தேசிய நினைவகம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, இன்று 50 லட்சத்தை எட்டியது. இதையொட்டி இன்று அஞ்சலி செலுத்திய பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் அமைந்துள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், கலாமின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஓவியக் கூடம், புகைப்பட காட்சிக் கூடம், கலாம் பயன்படுத்திய பொருள்கள், அவர் கண்டுபிடித்த ஏவுகணை, ராக்கெட் மாதிரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி மாளிகை மாடத்தைப் போன்று, மொகலாய கட்டட வடிவமைப்புடன்  கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், கலாம் அமர்ந்த நிலையிலும், நிற்கும் நிலையிலும் இரு வெண்கலச் சிலைகள் உள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைத் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள்,  மாணவ மாணவிகள், கலாமின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிசெலுத்திச் செல்கின்றனர். ராமேஸ்வரத்துக்கு வரும் ஜனாதிபதி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வந்துசெல்லும் இடமாக கலாம் நினைவிடம் திகழ்கிறது.

கலாம் நினைவிடம், பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டு இன்றுடன்  525  நாள்கள் ஆன நிலையில், கலாம் நினைவிடத்தைப் பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை இன்று 50 லட்சத்தை எட்டியது. இதையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில்,       50 லட்சமாவது பார்வையாளரான ஈரோட்டைச் சேர்ந்த  பள்ளி மாணவி அகில் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம்  கரீம் நகரைச் சேர்ந்த மாணவன் முர்டா, கலாமின் கொள்ளுப் பேத்தியான மாணவி ஆஷில்  ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன் சலீம் மற்றும் கலாம் நினைவிடப் பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.