குடும்ப பட்ஜெட் to திருமணக் காப்பீடு: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அம்சங்கள் | highlights of this week Nanayam Vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (07/01/2019)

கடைசி தொடர்பு:15:27 (07/01/2019)

குடும்ப பட்ஜெட் to திருமணக் காப்பீடு: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 10 அம்சங்கள்

இந்த இதழ் நாணயம் விகடன்:  https://bit.ly/2SGsU8q

 

குடும்ப பட்ஜெட் என்றவுடனேயே, ``என்ன பட்ஜெட் போட்டு என்ன ஆகப் போகிறது? நாம் பட்ஜெட் போட்ட மாதிரி எந்தக் காலத்திலாவது நடந்திருக்கிறதா?" என்று சிலர் புலம்பத் தொடங்கலாம். வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் நம் வருமானம் குறைவாக இருக்கும்போது, நாம் பட்ஜெட் போட்டபடி நம் செலவுகள் இருக்காதுதான்.  ஆனால், வருமானம் ஓரளவுக்கு அதிகமாக அதிகமாக செலவு என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். அப்போது கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த வேண்டுமெனில், நாம் நிச்சயம் பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும். இப்போதுகூட நம்மில் சிலர் கைநிறைய சம்பாதித்தாலும், கடன் வாங்கித்தான் நிலைமையைச் சமாளிக்கிறார்கள். இதற்குக் காரணம், திட்டமிடாமல் இஷ்டப்படி நாம் செலவு செய்வதுதான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?   

நிச்சயமாக என்கிறவர்களுக்கு இந்த ஆண்டுக்கான குடும்ப பட்ஜெட்டை எப்படித் தயார் செய்வது, அதைத் தயார் செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள பக்குவமான 10 அம்சங்களுடன் வழிகாட்டுகிறது 'புதிய ஆண்டு... வளமான வாழ்க்கை... கைகொடுக்கும் குடும்ப பட்ஜெட்!' எனும் கவர் ஸ்டோரி.

வெட்டிங் இன்ஷூரன்ஸ் திட்டம் இந்தியாவின் குறிப்பிட்ட சில ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் மட்டும் கிடைக்கிறது. திருமணத்துக்கு ஆகும் செலவைப் பொறுத்து, திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கி, ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை காப்பீடு செய்யப்படுகிறது. 

கல்யாண மண்டபம் இருக்கிற ஊர், காப்பீட்டுத் தொகை, காப்பீட்டுக் காலம், கல்யாணச் செலவு போன்றவைகளைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். தோராயமாகக் கணக்கிடும்போது, காப்பீட்டுத் தொகையில் 0.75% - 1.5% வரை  பிரீமியம் இருக்கும். இது ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப்படுகிறது...

- திருமணக் காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம் எவ்வளவு? எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும்? எப்போது க்ளெய்ம் கிடைக்காது? என்பது பற்றியெல்லாம் விரிவாக வழிகாட்டுகிறது 'பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!' எனும் கைடன்ஸ் கட்டுரை.

இன்ஷூரன்ஸ் கட்டண உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்கள் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களின் டிசம்பர் மாத சில்லறை விற்பனையைப் பாதித்துள்ளன. இந்த டிசம்பர் மாத விற்பனை, ஆண்டு இறுதியின் காரணமாகவும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஜனவரியில் இரு சக்கர வாகன விற்பனை மீண்டெழுவதை எதிர்பார்க்கலாம். நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. வாடிக்கையாளர்களிடம் பணப்புழக்கத் தட்டுப்பாடும், வாங்கும் ஆர்வம் குறைந்திருப்பதும் தொடரக்கூடும் எனலாம். கடந்த இரண்டு மாத புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பது தெரிகிறது.  இதை வைத்து மட்டுமே பங்குகளை வாங்கலாமா விற்கலாமா என்பதை முடிவு செய்ய முடியாது....

- தற்போது, வாகனங்களின் விற்பனை குறைய என்ன காரணம், ஒவ்வொரு நிறுவனத்தின் விற்பனை எவ்வளவு குறைந்திருக்கிறது, இந்தத் துறை சார்ந்த பங்குகளை என்ன செய்யலாம் என்பது குறித்து முழுமையாக அலசுகிறது 'குறையும் வாகன விற்பனை... என்னதான் காரணம்?' எனும் சிறப்புப் பார்வை. 

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் உத்தரவாதமான வருவாயை அளிக்காவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் நல்ல வருவாயை அளித்து வந்துள்ளன.  ஓப்பன் எண்டட் கடன் ஃபண்டுகளில்  முதலீடு செய்வதும், முதலீட்டைத் திருப்பப் பெறுவதும் சுலபமானது. பல ஃபண்டுகளில் முதலீட்டைக் குறிப்பிட்ட காலத்துக்கு வைத்திருந்தால் வெளியேறும் கட்டணம் எதையும் விதிப்பதில்லை.

தர மதிப்பீடு, செயல்படும் காலம், நிர்வகிக்கும் தொகை, செலவு விகிதம், நிலையான வருவாய், முதலீடுகளின் கடன் தரம், வட்டி விகித மாற்றம், க்ரைசில், புரமோட்டரின் ஜாதகம் உள்ளிட்ட விதிமுறைகளைக் கொண்டு கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மதிப்பிட வேண்டும். அந்த விதிமுறைகளை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது 'கடன் ஃபண்டுகள்... தேர்வு செய்யும் கலை!' எனும் சிறப்புக் கட்டுரை.

இந்திய இ-காமர்ஸ் சந்தையில் நான்கில் மூன்று பங்கு சந்தையை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களுக்குதான் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இந்தப் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கியமான உத்தியே தள்ளுபடிதான். இனி இதுபோன்ற அதிக தள்ளுபடிகள் வழங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு. அதனால் இந்த இரு நிறுவனங்களும் அரசின் இந்த முடிவை மாற்றுவதற்கு ஒன்றாக இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன... 

... இப்போது வந்திருக்கும் விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்திருந்தாலும், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சிறுவர்த்தகத்துக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்திருக்கிறது... - இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகள், அவற்றால் யாருக்கு லாபம், யாருக்குப் பாதகம் என்பது குறித்து விரிவாக அலசுகிறது 'மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி!' எனும் சிறப்புப் பார்வை. 

வாக்கிங் செல்லும் சிலர், தாங்கள் வளர்க்கும் நாயையும் அழைத்துச் செல்வார்கள். அந்த நாய் ஒரு நிலையாக நடந்து செல்லாது. அங்குமிங்குமாக இழுக்கும்; திடீரென நிற்கும்; பிறகு ஓடும். நாமும் வாக்கிங் செல்பவரைக் கவனிக்காமல், அவர் இழுத்துச்செல்லும் நாயைத்தான் பார்ப்போம். இதேபோலத்தான் பலரும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம், உலகச்சூழல் போன்ற புறக்காரணிகளையே பார்ப்பார்கள். ஆனால், அவற்றைக் கவனிப்பதைவிட பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் குறித்துப் பார்ப்பதும், ஆய்வு செய்வதும்தான் சரியான பார்வையாக இருக்கும். பல நிறுவனங்கள் சந்தை சரிவிலிருக்கும் காலத்திலும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். - `பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?' என்பதை அழுத்தமாகக் கேட்டு, பல்வேறு முக்கிய உத்திகளை உதிர்த்திருக்கிறது `நாணயம் விகடன்' சார்பில்  சென்னையில் நடந்த ஃபைனான்ஸ் கான்க்ளேவ். 

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் பிறந்த லட்சுமணன், புளியங்குடியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தார். முதலில் லிபியாவுக்கு வேலைக்குப் போனவர், பிற்பாடு ஐக்கிய அரசு நாடுகளில் தனது டெக்டான் நிறுவனத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் குடிநீராக்கும் தொழிலில் இவரது நிறுவனம் உலக அளவில் முதல் பத்து இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிறுவனத்தில்  சுமார் 30,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதில் 27,000 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 9,000 பேர் இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். ``என்னை வளர்த்த தமிழகத்துக்கு என்னால் முடிந்த தொழில் உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறேன். தண்ணீர் தொடர்பான தொழில் பற்றி நல்ல தொழில் ஐடியாவை வைத்திருப்பவர்களுக்கு நான் வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்" என்றவர், தான் வெற்றி பெற்ற கதையை  அருமையாக எடுத்துச் சொன்னார்.

- தொழில் துறையில் இருப்பவர்கள் தங்களின் தொழிலை வலுப்படுத்தவும், புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளவும், வெற்றியின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய ‘எழுமின்' மாநாட்டின் சிறப்பு அம்சங்களை அடுக்குகிறது 'மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!' எனும் செய்திக் கட்டுரை.

இந்தியாவில் இ.டி.எஃப்-களில் செய்யப்பட்ட முதலீடு சாதனை அளவாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறதே?

`உண்மைதான். கடந்த ஓராண்டு காலத்தில் 32 லார்ஜ்கேப் ஃபண்டுகளில் இரண்டு ஃபண்டுகள் மட்டுமே அவற்றின் பெஞ்ச்மார்கைவிட அதிக வருமானம் கொடுத்திருக்கின்றன. ஆக்டிவ்-ஆக நிர்வகிக்கப்படும் லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்படத் தவறியதால், பல நிதி ஆலோசகர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்-களை (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்) முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்து வருகிறார்கள். இதன் விளைவாக, இ.டி.எஃப்-கள்மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. 

சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் எனப் பலரும் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்துவருவது அதிகரித்துள்ளது. பி.எஃப் பணத்தின் ஒருபகுதி கட்டாயம் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதும் இ.டி.எஃப் முதலீடு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது. இ.டி.எஃப்-களில் ரிஸ்க் மற்றும் செலவு விகிதம் குறைவு என்பதாலும் பலரும் அதை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஃபண்டுகள் ஏதாவது ஒரு பிரதான பங்குச் சந்தை குறியீட்டைப் பின்பற்றி முதலீடு செய்வதாக இருக்கின்றன."

- பங்குச்சந்தை, அது சார்ந்த பல்வேறு சந்தேகங்களைக் களைவதுடன் பற்பல புதிய தகவல்களை 'புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்!' எனும் தலைப்பில் தருகிறார் ஷேர்லக். 

மிட்கேப் ஃபண்டுகள் அதிக வளர்ச்சி உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், அந்த ஃபண்டுகளின் வளர்ச்சி விகிதம் நீண்ட காலத்தில் அபரிமிதமாக இருக்கும். இந்தவகை ஃபண்டுகள் சொத்து உருவாக்கத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். 10 வருடத்துக்கும் மேற்பட்டுள்ள இலக்குகளுக்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பணவீக்கத்தைத் தாண்டி அபரிமிதமான வருமானம் நீண்ட காலத்தில் கிடைக்கும். இந்தவகை ஃபண்டுகளில் எந்தளவுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளதோ, அதே அளவுக்கு ஏற்ற இறக்கங்களும் இருக்கும். தற்போது நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு, கடந்த ஒரு வருடத்தில் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஆகவே, ஏற்ற இறக்கத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய மனநிலை உள்ளவர்கள் மட்டும் முதலீடு செய்வது நல்லது. நீண்டகால எஸ்.ஐ.பி இந்த ஃபண்டுகளுக்கு உகந்தது. ஹைரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மொத்த முதலீட்டையும் எஸ்.டி.பி முறையில், இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 

- இவ்வாறாக நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகளின் சாதக, பாதகங்களை அடுக்குவதுடன், சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடர் பகுதி. 

அரசு நிறுவனங்களின்மீது முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு குறைந்தாலும், பெருமளவு நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள மத்திய அரசு கையில் எடுத்திருக்கும் இன்னுமொரு பழைய வழிமுறைதான், ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை இன்னொரு பொதுத் துறை நிறுவனத்துக்கு விற்பனை செய்வது. உதாரணமாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் முடிவின்படி, மின்சாரத் துறை நிதி நிறுவனமான ஆர்.இ.சி லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 52.63% பங்கை மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பி.எஃப்.சி லிமிடெட் (PFC Ltd) வாங்கிக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.11,000 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சில மாதங்களுக்குமுன் இதேபோல, ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51.11% பங்கை ஓ.என்.ஜி.சி லிமிடெட் (ONGC Ltd) நிறுவனம் சுமார் ரூ.36,915 கோடி கொடுத்து வாங்கியது. இத்தகைய விற்பனைகளின் மூலம் அரசாங்கத்துக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் கிடைக்கும் அதேவேளையில், வணிக நிறுவனங்களின் மீதான மத்திய அரசின் மறைமுகக் கட்டுப்பாடும் தொடர வாய்ப்புண்டு...

- வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி  அளவுக்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, தனது முதலீட்டைத் திரும்பப் (Disinvestment) பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.80,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 'முதலீட்டைத் திரும்பப் பெறுதல்... பொருளாதாரச் சீர்திருத்தமா, வெறும் கண்துடைப்பா?' என்று உற்று நோக்குகிறது ஒரு சிறப்புக் கட்டுரை.

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2RfXxFh