367 பள்ளிகள், குவிந்த அறிவியல் மாதிரிகள்... களைகட்டிய கோவை அறிவியல் கண்காட்சி! | 367 Schools participated in Coimbatore vizha science and technology exhibition

வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (07/01/2019)

கடைசி தொடர்பு:17:42 (07/01/2019)

367 பள்ளிகள், குவிந்த அறிவியல் மாதிரிகள்... களைகட்டிய கோவை அறிவியல் கண்காட்சி!

பள்ளி மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்த ஒவ்வோர் அறிவியல் மாதிரியும், அவர்களின் திறமைக்குச் சான்றாக அமைந்தது.

367 பள்ளிகள், குவிந்த அறிவியல் மாதிரிகள்... களைகட்டிய கோவை அறிவியல் கண்காட்சி!

கோவை தொழில் நகரம் மட்டுமல்லாமல், கல்வி நகரமும்கூட என்பதைப் பறைசாற்றும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி. கோவை விழாவில் முதல்முறையாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கோவையில் உள்ள 367 பள்ளிகளில் 260 அறிவியல் மாதிரிகள் முதல் தேர்வாக எடுத்துக்கொண்டு அதில் சிறப்பான 100 அறிவியல் மாதிரிகள் மட்டும் இங்குக் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகளில் 30 அறிவியல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்கள்

சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் அறிவியலால் பிணைந்தவை. ஒவ்வோர் அறிவியல் உண்மைகளும் ஆச்சர்யப்படவைக்கும் தகவல்களைத் தருபவை. அவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்தது இந்தக் கண்காட்சி. இக்கண்காட்சியில் ரோபோட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆபத்துக் காலத்தில் உதவும் எமர்ஜென்சி விளக்குகள், வானவியல் உண்மைகள், கடல்வாழ் உயிரினங்களைத் காப்பாற்றத் தேவையான உபகரணங்கள், மாசுபாடு குறித்த ஆய்வுகள் அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் எனப் பலவிதமான மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன்களுக்கான போட்டிகள், ரோபோ கார்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. ட்ரோன் போட்டிகள் நடத்துவது கோவையில் இதுவே முதன்முறை. இது இங்கு வந்த அனைத்துப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. தொழில் வர்த்தகர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வானது இரு நாள்கள் நடைபெறும். முதல் நாளில் மட்டும் 1000-த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து மாணவர்களின் அறிவியல் திறமைகளை கண்டுகளித்தனர்.

ஜி.டி அருங்காட்சியகம் அறிவியல் அடிப்படை மாதிரிகளைக் காட்சிப்படுத்தி அழகாக விளக்கிச் சொன்னார்கள். இத்துடன் கோவையைப் பெருமைப்படுத்திய அறிவியல் அறிஞர்களின் படங்களும் இங்கே வைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவில் 3 அரசுப் பள்ளிகள் பங்குபெற்று தங்களது அறிவியல் மாதிரிகளைக் காட்சிப்படுத்தினர். அதில் திருப்பூரைச் சேர்ந்த நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செய்த காயின் வெண்டிங் மிஷின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவர்கள் கூறுகையில், ``இந்த மெஷினில் நமது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். சில்லறைத் தட்டுப்பாட்டைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் இல்லா சூழ்நிலைக்கு நாம் மாறிவரும் நிலையில் துணிப்பை கூட இதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் குறைவான மதிப்பில் செய்யப்பட்ட இயந்திரம் என்பதால் அனைவருக்கும் பயன்படும்." என்றனர்.

கோவையிலேயே தயாரிக்கப்பட்ட six access servo robot, மருத்துவத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள் போன்றவற்றையும் கண்காட்சியில் நேரிடையாகக் கண்டுகளிக்கலாம். இங்கே வைக்கப்பட்டிருந்த Smart trash bin பலரையும் கவர்ந்தது. இது அன்றாடம் சேகரமாகும் கழிவுகளைச் சேகரித்து மாநகராட்சிக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் சிஸ்டம் ஆகும்.

ரோபோ கை

இவ்விழாவில் கோவை மட்டுமல்லாமல் சென்னை, ஊட்டி, உடுமலைப்பேட்டை, பல்லடம் மற்றும் திருப்பூரைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர். கோவை விழாவின் முக்கிய நோக்கம் அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்தி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதாகும். வேதியியல் ஆய்வுகள் கண்முன்னே நடத்தப்படுவதால் பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.

அறிவியல் கண்காட்சியைப் பார்க்க வந்த மாணவி ஆஷிகாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``முதல் முறையாக இந்தக் கண்காட்சி நடக்கிறது. எங்களைப் போன்ற பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. ட்ரோன் மற்றும் கார் போட்டிகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இதேபோல அடுத்த வருடமும் நடக்கவேண்டும்" என்கிறார். இவ்விழாவின் இறுதியில் சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அறிவியல் மாதிரிகள்

இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் விவசாயம், தொழில் வர்த்தகம், விளையாட்டு, விர்ச்சுவல் ரியாலிட்டி மாதிரிகள், டோமினோ எஃபெக்ட் போன்றவை இளம் தொழில் முனைவோருக்கும் சிறந்த களமாக விளங்கியது. இந்த ஆண்டு மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்களையும் ஆசிரியர்களையும்,பொதுமக்களையும் எதிர்பார்க்கிறோம் என்று கோவை விழாக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்