`நீரையும் நிலத்தையும் இணைக்கும் உயிரைப் பாதுகாப்போம்! - மாணவர்களின் மணல் சிற்பம் | Sand sculpture made by student in Chennai besant nagar beach

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (08/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (08/01/2019)

`நீரையும் நிலத்தையும் இணைக்கும் உயிரைப் பாதுகாப்போம்! - மாணவர்களின் மணல் சிற்பம்

கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவர்கள் 12 அடி நீள மணல் சிற்பம் வடித்துள்ளார்கள். 6 அடி அகலம் கொண்ட இந்தச் சிற்பத்தை அரசு கவின் கலைக் கல்லூரி மற்றும் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

மணல் சிற்பம்

ஆமையின் உருவத்தின் மீது ஆக்டோபஸ், கடற்குதிரை ஜெல்லி மீன், டால்பின் போன்ற அரியவகை கடல் உயிரினங்களை சிறிதாக வடிவமைத்திருந்தனர். 17 மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை 2000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

பெசன்ட் நகர் பீச்

இதுதொடர்பாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் பேசினோம். ``கடலின் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்துக்கொள்வதால் கடல் உயிரினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வலியுறுத்தவே இந்த மணற்சிற்பம். நீரையும் நிலத்தையும் இணைக்கிற உயிர், ஆமை. ஆமையின் வழித்தடத்தைப் பின்பற்றித்தான் நம் முன்னோர்கள் பயணித்துள்ளதாக குறிப்புகள் உண்டு. கடல்வாழ் உயிரினங்களில் முக்கியமானது ஆமை. அதனால்தான் மற்ற உயிரினங்கள் அதன் ஓட்டின்மேல் சுமந்து சென்றதுபோல வரைந்துள்ளோம். இதை பொதுமக்கள் உணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.