வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (09/01/2019)

`சமத்துவம், பகிர்ந்துண்ணும் பழக்கம் பள்ளியில் இருந்தே வரணும்!’ - அரசுப் பள்ளியில் புதுமையான கற்றல் முறை

மாணவர்களுடன் ஆசிரியர் கலைச்செல்வன்

சமயத்துவமும், நல்லொழுக்கமும் பள்ளிப்பருவத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பர். அப்போதுதான் பசுமரத்தாணி போல நெஞ்சில் நன்கு பதியும். இதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகிர்ந்துண்ணல், விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கற்றலை புதுமையாக எடுத்துரைக்கின்றனர் என்பதை அறிந்து அங்கு சென்றோம்.

பழங்களைத் துண்டுதுண்டாக வெட்டி, பகிர்ந்து போட்டுக்கொண்டிருந்த ஆசிரியர் கலைச்செல்வனிடம் பேசினோம். ``பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பண்டங்கள், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள் இவற்றிலேயே இன்றைய குழந்தைகளின் நாட்டம் இருக்கிறது. பழங்கள் குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லை. இதுபற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் பழங்கள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பின் அவசியம்குறித்தும் எடுத்துரைக்கிறோம்.

மாணவர்கள்

இன்றைக்கு, பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்குத் தடை வந்துள்ளது. நல்ல விஷயம். ஆனால், இதுபற்றிய புரிதலை பள்ளி மாணவர்களுக்கு ஊட்டினால், அது பல்கிப் பெருகும் என நினைத்தேன். அதுமட்டுமில்லாமல், பழங்களின் அவசியம் குறித்தும் பெரிதாகத் தெரிவதில்லை. வீட்டுக்கு பெற்றோர் பழங்களை வாங்கி வந்தாலும்கூட, பலரும் உண்பதில்லை. அரசுப் பள்ளியில் பலரும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்துவருகின்றனர். அவர்களுக்கு பழங்கள் எட்டாக் கனியாகவே உள்ளது. 

பழங்கள்

ஏற்றத்தாழ்வு பேதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்து, எல்லோருக்கும் பழங்கள் கிடைக்கும் வகையில் சாப்பிடலாம் என முடிவுசெய்தோம். மாணவர்கள் கொண்டுவந்த பழங்களைச் சேகரித்து, அவற்றை சுத்தம்செய்து, துண்டாக்கி, பழக்கலைவை செய்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தோம்.

மாணவர்கள்

இந்தச் சமயத்தில், பிளாஸ்டிக்கின் கெடுதல்குறித்தும், பழங்களின் முக்கியத்துவம், அவற்றின் சத்துகள் குறித்தும் விளக்கிக் கூறினோம். இந்த வகை கற்றலால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். இது சாத்தியம் எனப் பட்டது. இதுபோன்று, ஆண்டுக்கு ஒரு முறை நடத்திவருகிறோம். ஆனால், இந்த முறையை அடிக்கடி பின்பற்றலாம் என்றிருக்கிறோம்’’ என்றார் மன நெகிழ்வோடு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க