``புலிகள் கணக்கெடுப்பு தெரியும், பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு தெரியுமா?" | Butterfly survey in Sathyamangalam Forest

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (09/01/2019)

கடைசி தொடர்பு:19:50 (09/01/2019)

``புலிகள் கணக்கெடுப்பு தெரியும், பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு தெரியுமா?"

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பட்டாம்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. புலிகள், யானைகள் போன்ற பெரிய மிருகங்களைக் கணக்கெடுப்பதுதான் வழக்கம். அதனால் இந்தப் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒரு பகுதியில் மட்டும் இத்தனை வகையான பட்டாம் பூச்சிகள் இருக்கிறதா என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்ஆய்வாளர்கள், புகைப்படக்காரர்கள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் எனக் 15 குழுக்களாக பிரிந்து 2 நாள்களாக இந்தக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.

பட்டாம்பூச்சி

இதுபற்றி தெரிந்துகொள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், ``புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானி சாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி உள்ளிட்ட வனச் சரகங்களில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் கணக்கெடுப்பில் பங்குபெற்றனர். அறிய வகை பட்டாம்பூச்சிகள், பறவைகள் பலவற்றைக் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம். இந்நிகழ்வில் பெண்களும் பங்குகொண்டு நாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்று நிரூபித்தனர்.

வண்ணத்துப்பூச்சி

தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் அமைப்பைச் சேர்ந்த பாவேந்தனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``யானை, சிங்கம், புலி போன்ற வனவிலங்குகளைக் கணக்கெடுத்த நாம் சிறிய விலங்கினங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். நமது சுற்றுச்சுழல் சமநிலையில் அனைத்து ஜீவராசிகளும் சமமாகவே பங்குகொள்கின்றன. எனவே, இந்த பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பற்றி மேலதிகாரிகளிடம் கூறினோம். அவர்களும் அனுமதி தந்தார்கள். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்தான் இடம்பெயரும் பறவைகள் அதிகமாகக் காணப்படும். அதே நேரத்தில்தான் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். 15 குழுக்களில் ஒவ்வொரு குழுவிலும் பறவைகள், பட்டாம்பூச்சி பற்றி படிப்பவர்கள், வனவிலங்கு புகைப்படக்காரர்கள், இயற்கை ஆய்வாளர்கள், அதிகாரிகள் என 6 முதல் 10 நபர்கள் பங்குபெற்று ஆய்வை நடத்தினர்.

இரு நாள்களாக நடைபெற்ற ஆய்வில் ஒவ்வொருவரும் 20 முதல் 25 கிமீ நடந்திருப்பார்கள். அனைத்து கணக்கெடுப்பு முடிந்த பிறகு 241 பறவையினங்கள் கணக்கிடப்பட்டன. ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் 331 பறவையினங்கள் வகைபடுத்தப்பட்டிருக்கின்றன. ஒரே பகுதியில் இவ்வளவு பறவையினங்கள் பதிவாகி இருப்பது இதுவே முதன்முறையாகும். இதிலிருந்தே எவ்வளவு சமமான இயற்கை சூழ்நிலை இங்கு நிலவுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பட்டாம்பூச்சி தெங்குமாரடாவிலிருந்து தொடங்கி ஹசனூர் வரையிலும் வளமான பகுதியாகவும், பறவையினங்கள் வாழத்தகுதியான இடங்களாக உள்ளது. முக்கியமாக வல்சர்ஸ் (பின்னந்தி கழுகு, பாறுகழுகு), இந்தியன் கிரே ஹார்ன்பில் பறவையினங்கள் அதிகமாகக் காணப்பட்டன. இப்பறவைகள் நீலகிரி பகுதியில்தான் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அட்ரா மெரைன் ஃப்ளை கேட்சர் அரிதாகக் காணப்படும் வகையினமாக உள்ளது. பட்டாம்பூச்சிகளைப் பொறுத்தவரை 324 இனங்கள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 311 வகை பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுப்பது எங்களது இலக்காக உள்ளது. அதில் 150 இனங்களை இதுவரை பதிவு செய்தோம்." என்றார்.

வண்ணத்துப்பூச்சி

மேலும், தகவல்களை அறிந்துகொள்ள பறவை ஆய்வாளர் ரவீந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``15 குழுக்களாகப் பிரித்ததில் நாங்கள் சென்ற இடம் புலித்துறைப்பட்டி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி. முன்னொரு காலத்தில் திப்பு சுல்தான் படைவீரர்கள் கடந்து வந்த பாதை இது. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. என் வாழ்க்கையில் மறக்கமுடியாத இடமாக எப்போதும் இது இருக்கும், இந்தப் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 89 வகையான பறவையினங்களைப் பதிவு செய்திருக்கிறோம்" என்று கூறினார்.

இந்தக் கணக்கெடுப்பு மூலம் இயற்கை சமநிலை, சுற்றுச்சுழல் சமநிலை சரியாக இருந்தால் மட்டுமே பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் வாழுமிடமாக இவை இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.