வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (10/01/2019)

கடைசி தொடர்பு:17:18 (12/01/2019)

`வாசிப்பு முக்கியம் பாஸ்!’ - வசந்தபாலன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் #ChennaiBookFair2019

வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் வசந்தபாலன். மிகச்சிறந்த வாசிப்பாளராகவும், இலக்கிய உலகின் ஆளுமைகளுடன் நெருங்கிய நண்பராகவும் இருப்பவர்.

`வாசிப்பு முக்கியம் பாஸ்!’ - வசந்தபாலன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் #ChennaiBookFair2019

`இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை, கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது... அதுதான் புத்தக வாசிப்பு!’

– எமர்சன்

வாழ்க்கையின் மீதான பற்றுதல்களை புத்தகங்கள்தான் நமக்குத் தருகின்றன. புத்தகங்களை வாசிப்பதை அறிவுஜீவிகள் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். வாழ்க்கையின் துயரங்களை, பிரச்னைகளை வாசிப்பதன் வழியாகக் கையாளுகின்றனர். வாழ்க்கையைப் படிப்பதன் வழியாகவும் எழுதுவதன் வழியாகவும் புதுமையை அடைந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களின் எல்லாமுமாகப் புத்தகங்களே இருக்கின்றன. புத்தகங்கள் வாசிப்பவர்களுக்குப் புதிய உலகங்களையும் தத்துவங்களையும் திறந்துகொண்டே இருக்கின்றன.

`வெயில்’, `அங்காடித் தெரு’, `காவியத்தலைவன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் வசந்த பாலன். மிகச்சிறந்த வாசிப்பாளராகவும், இலக்கிய உலகின் ஆளுமைகளுடன் நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். வாசிப்பு பற்றியும் தனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

வசந்தபாலன்

வாசிப்பின் அவசியம் பற்றி…

``அறிவு திறப்புக்கு புத்தகங்கள்தான் ஒரே சாய்ஸ். நண்பர்கள் இல்லாத நேரங்களில் புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். உலகத்தின் மிகச் சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டும்தான். தனிமையான அறையில் அமர்ந்து அருமையான புத்தகத்தை வாசிக்கும்போது, உலகுக்கு நாமும் நமக்கு உலகமும் அறிமுகமாகிறது. மூன்று நாள்கள் இடைவிடாது நாவலை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் அற்புதமானது.’’

நினைவுகளைப் புத்தகங்களோடும் படித்த வரிகளைச் சுட்டிக்காட்டி சிலாகித்தும் தொடர்ந்து பேசினார்…

``வார்த்தைகள் மனிதனுக்கு முக்கியமானவை. வார்த்தைகளைப் புத்தகங்கள் நமக்குத் தருகின்றன. தனித்திறமைகளைப் புத்தக வாசிப்பின் வழியேதான் வளர்த்துக்கொள்ள முடியும். வாழ்க்கையில் இந்த இடத்தில் நான் இருப்பதற்குப் புத்தகங்களே காரணம். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையானது.’’

ஆரம்பக்கால வாசகர்களுக்காக இயக்குநர் வசந்தபாலன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்…

1. மௌனமே காதலாக

மௌனமே காதலாக

எழுத்தாளர் பாலகுமாரனின் மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு. காதலைப் பற்றிய வித்தியாசமான சிறுகதைகளை மௌனமே காதலாக தொகுப்பில் படிக்க முடியும். உயிரை உலுக்குகிற கதைகளும் அதில் அடங்கும்.

2. தாவரங்களின் உரையாடல்

தாவரங்களின் உரையாடல்

நவீன இலக்கியத்தின் போர்ட்ரெய்ட் என்று எஸ்.ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பைக் கூறலாம். எஸ்.ரா-வின் வித்தியாசமான அழகியல் மொழியும் புனைவும் கலந்த தனித்துவமான சிறுகதைத் தொகுப்பு. எழுத்தில் பல பரிமாணங்களை அடைந்துவிட்ட பிறகும், வாசகர்களின் மனதில் தாவரங்களின் உரையாடலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. தாவரங்களின் உரையாடல் புத்தகத்தை தேசாந்திரி பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது.

3. ஜெயமோகன் விஞ்ஞானம் சார்ந்து எழுதிய சிறுகதைகள்

ஜெயமோகன்

இந்தச் சிறுகதைகள் அதிகம் கவனம் பெறாதவை. விஞ்ஞானத்தை மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்து கதைகளாக எழுதியிருப்பார். படிக்கும்போது வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடிய கதைகள் ஜெயமோகன் எழுதிய விஞ்ஞானச் சிறுகதைகள்.

4. கொமோரா

கொமோரா

அழகியல் தன்மையோடு எல்லாவற்றையும் அணுகுகிற நேரத்தில் கொமோரா நாவல் நம்மைப் பித்துப்பிடித்த மனநிலைக்குத் தள்ளுகிறது. நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிற உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடியாது. இப்படியான நாவல்களைப் பலர் எழுதத் தயங்குவர். ஆனால், லஷ்மி சரவணகுமார் துணிச்சலாக எழுதியிருக்கிறார். லஷ்மி சரவணகுமாரின் கொமோரா நாவலைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

5. மகிழ்ச்சியான பன்றிக்குட்டி

மகிழ்ச்சியான பன்றிக்குட்டி

புதுமையான கவிதைமொழி, புதுமையான படிமம் நிறைந்த கவிதைகள் வெய்யிலுடையது. பலருடைய கவிதைகளையும் நான் வாசித்திருக்கிறேன். வெய்யில் தன்னுடைய கவிதைகள் வழியாகத் தனித்து தெரிகிறார். வெய்யிலின் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி கவிதை புத்தகத்தைக் கொம்பு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்