மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடா... உச்ச நீதிமன்றம் புது உத்தரவு! | Modified vehicle registrations are banned by Supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (12/01/2019)

கடைசி தொடர்பு:12:18 (12/01/2019)

மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடா... உச்ச நீதிமன்றம் புது உத்தரவு!

`ஸ்பாய்லர் பொருத்துவது, பாடி கிட் சேர்ப்பது, பெரிய டயர்களைப் பொருத்துவது, எக்ஸாஸ்ட் மாற்றியமைப்பது, ஃபேரிங் சேர்ப்பது போன்ற மாடிஃபிகேஷன்களை சட்டவிரோதம்’ என அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி வினித் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள தீர்ப்பில், தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள Original specification இருந்தால் மட்டுமே வாகனத்தை RTO அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் வாகன சட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு

ஒரு வாகனம் விற்பனைக்கு வருவதற்கு முன்பு அதற்கு முன்மாதிரியை (prototype) தயாரித்து, சாலையில் டெஸ்ட் செய்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகே, அந்த வாகனத்தின் கடைசி ஸ்பெசிஃபிகேஷன் ஷீட் தயார் செய்யப்படுகிறது. கார்/பைக் போன்ற வாகனங்களை நாம் அழகுக்காகவும், பெர்ஃபாமென்ஸ் கூட்டவும் நம் இஷ்டத்துக்கு மாற்றியமைப்பதால், அதன் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. `தனி மனிதர்களின் விருப்பம் மற்றவருக்கு ஆபத்தைக் கொடுக்கக்கூடாது என்பதற்காக வாகனங்களை மாடிஃபை செய்வது தடை செய்யப்படுகிறது’ என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். வாகனங்களின் அடிப்படை அமைப்பான (Structure) இன்ஜின், சேஸி, வீல், டயர், ஹேண்டில்பார்/ஸ்டீயரிங் போன்றவற்றை மாற்றுவது மட்டுமே தடைசெய்யப்படுகிறது.

மாடிஃபை செய்யப்பட்ட யமஹா பைக்

பழுதாகிய இன்ஜினை மாற்ற வேண்டும் என்றால் முதலில் RTO அலுவலகத்தில் அனுமதி வாங்கிவிட்டு பிறகுதான் மாற்ற வேண்டும். இல்லையென்றால் வாகனப் பதிவு ரத்துசெய்யப்படும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள். ஏற்கெனவே மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் RC-யில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிக மாற்றங்கள் செய்திருந்தால், அந்த வாகனத்தில் ரிஜிஸ்டிரேஷன் ரத்து செய்யப்படும் என்றும், புதிய வாகனங்களை உரிமையாளர்களே மாடிஃபை செய்து கொண்டுவந்தால் அதைப் பதிவு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோனியின் மாடிஃபை செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ

நிறத்தை மாற்றுவது, கிராஃபிக்ஸ் மாற்றுவது, wrap செய்வது, ஸ்பெசிஃபிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள அளவை மீறாத பெர்ஃபாமென்ஸ் பார்ட்ஸ் பொருத்துவது போன்ற மாடிஃபிகேஷன் செய்யலாம். அதே சமயம் காரில் கிரவுண்டு க்ளியரன்ஸை குறைப்பது, பைக்கில் ஹேண்டில்பார் மாற்றுவது, பெரிய வீல்களைப் பொருத்துவது, டயர்களைப் பொருத்துவது போன்றவை தடைசெய்யப்படுகிறது. பைக்குகளில் அதன் நீளத்தை அதிகரிப்பதற்காக சப் ஃபிரேமை மாற்றியமைப்பது வழக்கம். கார்களில் சேஸியை எக்ஸ்டன்ட் செய்து காரின் பாடி டைப்பை மாற்றுவார்கள். இதுபோன்ற மாடிஃபிகேஷன்களைச் செய்வது தவறு. சேஸியில் சிறிதளவு மாற்றம் இருந்தால் கூட அந்த வாகனம் பதிவு செய்யப்படாது.

டயர் மாற்றப்பட்ட புல்லட்

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை CNG-யாக மாற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது structural change என்றாலும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது என்பதால் இதை அனுமதித்துள்ளார்கள். வாகனங்களை மாடிஃபை செய்வது கலை சார்ந்தது மட்டுமில்லை அது தொழில்நுட்பம் சார்ந்ததும் கூட. அழகியலை மட்டும் பார்க்காமல் வாகனத்தின் பாதுகாப்பை மனதில் வைத்துத்தான் ஒரு வாகனம் வடிவமைக்கப்படுகிறது. அதனால், வாகனங்களில் ஏதாவது மாற்றம் செய்தால், அது பாதுகாப்பானதுதானா என்பதைச் சோதிக்க வேண்டும். இப்படிச் சோதிக்காமல் வாங்கினோம், மாட்டினோம் என்று பலர் கார்/பைக்குகளில் மாடிஃபிகேஷன் செய்கிறார்கள். 

இது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டா?

போலியான After market exhaust பொருத்தி இன்ஜின் தீப்பற்றுவது, பெரிய வீல்களைப் பொருத்தி காரின் நிலைத்தன்மை தடுமாறி விபத்து ஏற்படுவது, ஈசியூ ரீமேப் செய்து காரின் பவரை மட்டும் கூட்டி சஸ்பென்ஷன், சேஸியை அப்படியே விட்டுவிடுவதால் கார் கட்டுப்பாட்டை இழப்பது போன்று பல செய்திகளைக் கேட்டுள்ளோம், கண்டுள்ளோம். எஸ்யூவி-யை லிமோசினாக மாற்றுவது, ஹேட்ச்பேக்கை பிக்அப் டிரக்காக மாற்றுவது என தொழில்நுட்பம் தெரியாமல் வாகனங்களை மாற்றியமைப்பதால் பாதுகாப்பின்மை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்கிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்