மில்லெட், சாமை, கல்கண்டு... வெரைட்டியான பொங்கல் ரெசிப்பிகள்! | Traditional Pongal recipes list

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (12/01/2019)

கடைசி தொடர்பு:12:52 (12/01/2019)

மில்லெட், சாமை, கல்கண்டு... வெரைட்டியான பொங்கல் ரெசிப்பிகள்!

ஆரோக்கியம் நிறைந்த வெரைட்டியான பொங்கல் ரெசிப்பிகள்...

மில்லெட், சாமை, கல்கண்டு... வெரைட்டியான பொங்கல் ரெசிப்பிகள்!

தைப்பொங்கல் திருநாளில் வழக்கமாகச் செய்யும் சர்க்கரைப் பொங்கல் தவிர்த்து வெரைட்டியான சுவையில் சுவையில் செய்து அசத்த, ஆரோக்கியம் மிகுந்த ஈஸி பொங்கல் ரெசிப்பிகள்.

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
 நெய் - தேவையான அளவு
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 முந்திரி - 6

பொங்கல் ரெசிப்பி

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும். அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாகத் தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

சாமை பொங்கல்

தேவையானவை:

 சாமை அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது (தட்டி வைக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 2 கப்

தாளிக்க:

 நெய் - 2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சாமை பொங்கல் ரெசிப்பி

செய்முறை:

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

கல்கண்டு பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை + கல்கண்டு - முக்கால் கப்
 நெய்/வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 காய்ச்சிய பால் - கால் கப்
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
 முந்திரி - 5
 பச்சைக் கற்பூரம் - கடுகளவு 
 குங்குமப்பூ - 5 நரம்பு
 உப்பு - ஒரு சிட்டிகை

கல்கண்டு பொங்கல்

செய்முறை:

சர்க்கரை மற்றும் கல்கண்டைப் பொடித்து தனியாக வைக்கவும். பொங்கலைச் சுவைக்கும்போது கல்கண்டைச் சுவைப்பது சிலருக்குப் பிடிக்காது. பிடிப்பவர்கள் முழுதாகவே கல்கண்டைச் சேர்க்கலாம். குங்குமப்பூவைச் சிறிது பாலில் ஊற விடவும்.குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்/வெண்ணெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு, குக்கரில் அரிசியோடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடிப்போட்டு 4 விசில் வரை வேகவிட்டு, நன்கு மசித்து வைக்கவும்.இத்துடன் பால் சேர்த்து வேகவிட்டுப் பொடித்த சர்க்கரை-கல்கண்டு கலவை, பச்சைக் கற்பூரம், உப்பு, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு நெய்விட்டு மிதமான தீயில் 8 நிமிடம் கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை (கிஸ்மிஸ்), ஏலக்காய் சேர்த்து கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

அக்கார அடிசில்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 பால் - 2 + 1 கப்
 தண்ணீர் - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 நெய் - கால் கப் + 1 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 1
 முந்திரி - 6
 குங்குமப்பூ - 3 நரம்பு

அக்காரவடிசல்

செய்முறை:

குங்குமப்பூவை ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவிடவும். குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை உடைத்துச் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் அரிசி, பருப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பிறகு பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மூடிப்போட்டு மூன்று விசில் வரை வேகவிடவும். குக்கரின் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சமைப்பதாக இருந்தால் ஐந்து விசில் வரை வேகவிடவும். அரிசி-பருப்பு நன்கு வெந்ததும் மசித்து விடவும். இத்துடன் மீதமிருக்கும் 1 கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து மசித்து, அடுப்பில் வைத்து வேகவிடவும். பிறகு, 2 டேபிள்ஸ்பூன் நெய், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரைய கலக்கவும்.

மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். தீயை மிதமாக்கிக் கொள்ளவும். 4 நிமிடங்கள் வரை கிளறி, குங்குமப்பூ ஊறிய பாலை குங்குமப்பூவோடு சேர்த்து,மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.