``ஐந்து ஆண்டுகளில் தேசாந்திரி முழுமையான பதிப்பகமாக இருக்கும்!” - எஸ்.ராமகிருஷ்ணன் | Writer S.Ramakrishnan shares about his new Books and his Publication

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (12/01/2019)

கடைசி தொடர்பு:15:31 (12/01/2019)

``ஐந்து ஆண்டுகளில் தேசாந்திரி முழுமையான பதிப்பகமாக இருக்கும்!” - எஸ்.ராமகிருஷ்ணன்

``பதிப்பகம் சார்ந்து என்னுடைய நகர்வுகளைப் படிப்படியாக எடுத்துச் செல்லலாம் என்றிருக்கிறேன். இன்று இருக்கும் பெரிய பல பதிப்பகங்கள் எல்லாம் அப்படிப் படிப்படியாக வளர்ந்தவைதான். தேசாந்திரி பதிப்பகம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுமையான பதிப்பகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.”

``ன் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியைப்போல உலகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்” என்று தன்னுடைய எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘என் பணி எழுதித் தீர்ப்பது’ என்று வகுத்துக்கொண்டு எழுத்து, அது சார்ந்த பேச்சு, பயணம் என இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளன. பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் என ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகைமையின்கீழ் வந்துள்ளன.  

எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த ஐந்து நூல்களும் அவருடைய ‘தேசாந்திரி பதிப்பகம்” வழியாகவே வெளியிடப்பட்டுள்ளன. ‘தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளை மட்டும் வெளியிடும் ஒரு பதிப்பகமாக இருக்கப் போகிறதா?’ என்ற கேள்விக்கான பதில் மட்டுமல்லாது, புதிதாக வெளிவந்துள்ள அவரது ஐந்து நூல்கள் பற்றியும், அவரது பதிப்பகம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

``என்னுடைய புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொடங்கியது முதல் இப்போதுவரை என்னுடைய பாதிக்கும்மேலான புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டேன். இன்னும் ஆறுமாதத்தில் என்னுடைய மற்ற புத்தகங்களையும் கொண்டுவந்துவிடுவேன். அடுத்த ஆறு மாதகாலத்தில் புதிய புத்தகங்களைக் கொண்டுவரலாம் என்ற யோசனையில் இருக்கின்றேன். சில முக்கியமான புத்தகங்கள் வெளிவந்த காலத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. அப்படிக் கவனிக்கப்படாத நூல்களில் மிக முக்கியமான சில நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பிக்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளேன்.

சில முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களைத் திருத்தம் செய்து பதிப்பிக்கலாம் என்ற யோசனையும் உள்ளது. அதேபோல புதிதாகச் சில புத்தகங்களின் மொழிபெயர்ப்பு உரிமையையும் வாங்கியுள்ளேன். அவற்றையும் மொழிபெயர்த்து வெளியிடவுள்ளேன். அதன்பின் உலக சினிமா ஆளுமைகள் பற்றியும், அந்த ஆளுமைகளே எழுதிய புத்தகங்களையும் பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

பௌத்தம் தொடர்பாக அடிப்படையான ஆதார நூல்களைக் கொண்டுவரும் முயற்சியும் நடந்து வருகிறது. இவைதவிர சமகால ஐரோப்பிய, ரஷ்ய சிறுகதைகளின் தொகுப்பு நூல்களைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. இவற்றுக்கு அதிகப் பொருளாதாரத் தேவையும், காலமும் தேவை என்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறிது சிறிதாகக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். நேரடி நூல்கள் என்ற வரிசையில் எனக்கு நண்பர்களாக இருப்பவர்களின் நூல்களை வெளியிடும் திட்டமிருக்கிறது. பதிப்பகம் சார்ந்து என்னுடைய நகர்வுகளைப் படிப்படியாக எடுத்துச் செல்வேன். இன்று இருக்கும் பெரிய பல பதிப்பகங்கள் எல்லாம் அப்படிப் படிப்படியாக வளர்ந்தவைதான். தேசாந்திரி பதிப்பகம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுமையான பதிப்பகமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய புதிய ஐந்து நூல்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.


ரயில் நிலையங்களின் தோழமை
என்னுடைய வட இந்திய மற்றும் அயல்நாட்டுப் பயண அனுபவங்களை விவரிக்கிறது இந்நூல். பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டுக்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. 

எஸ் ராமகிருஷ்ணன்

 

கதைகள் சொல்லும் பாதை
எழுத்தின் நுட்பத்தையும் அழகியலையும் கற்றுத்தரும் நோக்கில் உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளின் அழகியலை அறிமுகம் செய்யும் கட்டுரைகளைக்கொண்ட தொகுப்பு நூல். 

எஸ்.ராமகிருஷ்ணன்

 

சிவப்பு மச்சம்
தனித்தன்மைகள்கொண்ட கதாபாத்திரங்களையும், வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்தநூல். கதை சொல்லும்முறையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு மூலம் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டியுள்ளேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்

 

பறந்து திரியும்ஆடு
பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஒட்டிக்கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன். பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன்

 

பெயரற்ற நட்சத்திரங்கள்
இந்நூல் எழுத்தாளர்கள். கலைஞர்கள், ஓவியர்கள், எனப் பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகள் பற்றிய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன்


டிரெண்டிங் @ விகடன்