இயக்குநர் பிரம்மா பரிந்துரைக்கும் 3 புத்தகங்கள்! வாசிப்பு முக்கியம் பாஸ்! #ChennaiBookFair2019 | Director Bramma wants you to read these 3 books

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (12/01/2019)

கடைசி தொடர்பு:17:32 (12/01/2019)

இயக்குநர் பிரம்மா பரிந்துரைக்கும் 3 புத்தகங்கள்! வாசிப்பு முக்கியம் பாஸ்! #ChennaiBookFair2019

``புத்தகங்கள், நாம் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவுகின்றன. உட்கார்ந்து யோசிக்க வைக்கின்றன. நம்மை அறியாமலேயே ஆழ்மனதில் வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைக்கின்றன. பல கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன."

இயக்குநர் பிரம்மா பரிந்துரைக்கும் 3 புத்தகங்கள்! வாசிப்பு முக்கியம் பாஸ்! #ChennaiBookFair2019

``போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு..." - இங்கர்சால்.

வாழ்க்கையில் நினைவுகளையும், சுவாரஸ்யத்தையும், புரிதல்களையும் அதிகமாகத் தருவதில் புத்தகங்கள் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. புத்தகங்களின் பக்கங்களைப் புரட்ட வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனைகளை ஒருவன் அடைகிறான். வாசிப்பின் வழியே ஒருவன் பயணப்படுகிறான். உலகின் முன்னோடிகளாகக் கருதப்படும் அறிவுஜீவிகள் அனைவருமே வாசிப்பின் வழியே தங்களைப் பண்படுத்திக் கொண்டவர்கள். புத்தகம் தருகின்ற அனுபவங்களின் வழியாகவே ஒருவன் படைப்பாளியாக மாறுகிறான். புத்தகங்கள் நம்மைப் பிரமாண்டமாக மாற்றுகின்றன. புத்தகங்களை நாம் பிடித்துக்கொண்டால், பிறகு புத்தகங்கள் நம்மை விடுவதே இல்லை.

புத்தகங்கள்

`குற்றம் கடிதல்’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதையும், மக்களின் பாராட்டுகளையும் பெற்றவர் பிரம்மா. இவர் இயக்கிய 'மகளிர் மட்டும்' படம்  நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக அக்கறை கொண்ட கதைகளை இரண்டு படங்களிலும்  கையாண்டவர். கல்லூரி காலங்களிலேயே நூற்றுக்கணக்காக வீதி நாடகங்களை இயக்கியுள்ளார். திரைப்படத்துக்கு வரும் முன் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த வாசிப்பாளரான பிரம்மா நம்மிடம் புத்தகங்களைப் பற்றியும், வாசிப்பதன் அவசியம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். 

``புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?"

``புத்தகங்கள், நாம் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவுகின்றன. உட்கார்ந்து யோசிக்க வைக்கின்றன. நம்மை அறியாமலேயே ஆழ்மனதில் வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைக்கின்றன. பல கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன. அடுத்தவனுடைய வலிகளையும், பிரச்னைகளையும் அறிந்துகொள்ளும்போது தன்னுடைய வலி மிகச்சிறியது என்ற பக்குவத்தை அளிக்கின்றன. கமர்சியல் தன்மைகளைக் கடந்து நேர்மையான எழுத்துகளைப் பல புத்தகங்கள் இன்றும் தந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது மனஇறுக்கம் தளர்கிறது. இயக்குநரான எனக்கு, புதுமையான தகவல்களை புத்தகங்கள் கொட்டுகின்றன. புத்தகங்களில் வருகிற கதாபாத்திரமும், சூழ்நிலைகளும் 'ப்ரைன் டீச்சிங்காக' எனக்கு அமைகிறது. ஒரு விஷயத்தை மட்டுமே ஒரு புத்தகம் சொல்வதில்லை. பல விஷயங்களைப் புரிந்துகொள்ள புத்தகங்கள் உதவும். கலைஞர்களும் எழுத்தாளர்களும் சிறப்பான கதைகளையும், கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் வடிவமைக்கப் புத்தகங்கள் பயனுள்ளதாக அமைகிறது."

``நீங்கள், வாசிக்கப் பரிந்துரைக்கும் புத்தகங்கள்?"

புத்தகங்கள்

1) கதை மழை:

பிரபஞ்சனுடைய முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வெவ்வேறு மொழிகளிலுள்ள முக்கியமான சிறுகதைகளை, இங்குள்ள சிறுகதைகளோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். பிரபஞ்சன் மறைந்த நேரத்தில் கதை மழையைப் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு மக்களுக்கு மத்தியிலும் உணர்ச்சி மிகவும் பொதுவானது என்பதை இக்கட்டுரைகள் மூலம் கூறுகிறார். நற்றினை பதிப்பகம் கதை மழை புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  

2) ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்:

புத்தகங்கள்

குழந்தை இலக்கியம் முதல் அரசியல் கட்டுரைகள் வரை எல்லாவற்றையும் எழுதியுள்ளார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். அவரின், 'ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்' புத்தகம் எனக்குப் பிடித்தமான புத்தகங்களுள் ஒன்று. ஆண்மகனைச் சமைக்கத் தூண்டும். சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் அடங்கிய புத்தகம். நிறைய உணவு வகைகள் குறித்தும், உணவுகளைச் சாப்பிட்ட அனுபவங்களையும் இதில் பகிர்ந்துள்ளார். ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள், பாரதி புத்தகாலயம் வெளியீடாக வந்துள்ளது.

3) கறுப்பர் நகரம்:

புத்தகங்கள்

நீண்ட நாள்களாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுப் படித்த புத்தகம் கரன் கார்க்கியின் 'கறுப்பர் நகரம்'. சென்னைவாசிகள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம். வடசென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிய பதிவு அதில் உள்ளது. வடசென்னையின் எளிய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கரன் கார்க்கி எழுதியிருக்கிறார். மிகவும் சிறப்பான புத்தகம். கறுப்பர் நகரத்தைத் திரைப்படமாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சுவை கொஞ்சமும் குறையாமல் படமாக்கப்பட்டால், படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். கறுப்பர் நகரம் பாரதி புத்தகாலயம் வெளியீடாக வந்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்