வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (14/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (14/01/2019)

மறுக்கப்பட்ட லோன்... 11 வயதில் டீக்கடை, வாழைப்பழம் பிசினஸ்... 50 வயதில் சாதிக்கும் திருநங்கை அம்பிகா

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை ரயில் பயணம் செய்யும்போது மட்டும் அதிகம் பார்த்துப் பழகிய திருநங்கைகளுக்கு மத்தியில் உழைப்பால் உயர்ந்து கண்ணியமாகச் சுடர்விட்டு எரியும் திருநங்கை அம்பிகா, மூவலூர், ஜோதி-கண்ணியம்மாள் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்ததாலோ என்னவோ ஒரு தம்பியையும் ஒரு தங்கையையும் தன் குடும்பத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயம்.

மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள அம்பிகாவுக்கு தற்போது 50 வயது. 11 வயதில் டீக்கடை ஒன்றை நடத்தத் தொடங்கினார். இளம்வயதில் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று அம்பிகா ஆசைப்பட்டாலும் கிடைத்தது என்னவோ தோல்விதான். இருந்தாலும் தம்பி, தங்ககையைக் கரை சேர்த்து, அப்பா, அம்மா ஆசைபடி வீடு கட்டிய அம்பிகாவின், நம்பிக்கை ஏதோ ஒரு தடத்தை நோக்கி ஓடிய மனதை கட்டி இழுத்தது. அம்பிகாவை சந்தித்தோம்.

``11 வயசுல டீக்கடை ஆரம்பிச்சேன். லாஸ் ஆயிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சப்ப திடீர்னு ஒருநாள், ஒருவர் வந்து அவர் தோட்டத்துல உள்ள வாழைத்தார் எல்லாம் காத்துல சாஞ்சுடுச்சுன்னு சொல்லி நிறைய வாழைப்பழங்கள் கொடுத்து வித்து தரச் சொன்னார். அன்னிக்கு பாத்த லாபம்தான் என்னை வாழைப்பழம் பிசினஸ் தொடங்க வச்சுது. அன்னிக்கு அழுக்கு கிழிஞ்ச புடவை கட்டுனேன். இன்னிக்கு வெயிலுக்கு இதமா சில்க் காட்டன் கட்டியிருக்கேன்.

எந்த வங்கியிலும் லோன் கிடைக்கவில்லை. அரசிடம் இருந்தும் லோன் கிடைக்கவில்லை. திருநங்கைன்னு அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகளைக்கூட கிடைக்கவில்லை. நான் அநாதை இல்லை, எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா லோன் குடுங்க. நான் திருப்பிக் கட்டுறேன்னு சொன்னேன். எதுவும் கிடைக்கவில்லை. இருந்த பணத்தில ஒரு வாழைத்தோப்பை குத்தகைக்கு எடுத்து சின்னதா வாழைப்பழம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். இன்று டெல்டா பகுதிகளில் கிட்டத்தட்ட 1,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றார் பெருமிதத்துடன்.

ஆரம்பகாலத்தில வாழைப்பழத்தை தலைல தூக்கி வச்சுக்கிட்டு நடக்க ஆரம்பிச்ச அம்பிகா, இன்னிக்கு பழங்கள ஒத்தமாட்டு வண்டில ஏத்திக்கிட்டு வந்தாலும் தானும் வண்டில ஏறி அந்த வாயில்லா ஜீவன் கஷ்டப்படக் கூடாதுன்னு இன்னிக்கும் வண்டி பின்னாடி நடந்துகிட்டு இருக்கிறார்.

“வாழைப்பழம் வித்தே 2 ஏக்கர் நிலம் வாங்கி நல்ல நிலைமையில் இருக்கும் அம்பிகாவை சுத்து வட்டாரத்தில் யாரும் திருநங்கையா பார்க்கல. எல்லாரும் குடும்பத்தில ஒருவராதான் பாக்கிறோம்” என்று பெருமிதம் கொள்கிறார்கள் ஊர் மக்கள்.

இப்படி சிறு வயது முதலே தன் கடின உழைப்பால் தன் பூர்வீக நிலத்தை 2 மாவில் இருந்து 2 ஏக்கராக மாற்றி, ``என் பணத்தை யாரிடம் கொடுத்தும் ஏமாற மாட்டேன், நானும் யார் பணத்தையும் ஏமாத்த மாட்டேன்னு’’ சொல்லும் அம்பிகா மயிலாடுதுறையில் கடின உழைப்பின் கலங்கரை விளக்கம்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க