ஒரு முட்டைக்கு 27 மில்லியன் லைக்ஸ் -.சாதனை படைத்த இன்ஸ்டாகிராம் பதிவு! | An egg photo become a most liked post in instagram

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (14/01/2019)

ஒரு முட்டைக்கு 27 மில்லியன் லைக்ஸ் -.சாதனை படைத்த இன்ஸ்டாகிராம் பதிவு!

 

இன்ஸ்டாகிராம்

உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில், இன்ஸ்டாகிராமும் ஒன்றாக இருக்கிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இந்தத் தளத்தில் ஷேர் செய்து கொள்ள முடியும். இதில், பல சினிமா நட்சத்திரங்களும், பல பிரபலங்களும் இணைந்திருக்கிறார்கள். தற்போது, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்திருக்கிறது ஒரு பதிவு. ஆனால், அது ஒன்றும் ஏதோ ஒரு பிரபலத்தின் புகைப்படமோ அல்லது வேறு ஆச்சர்யப்படக்கூடிய வகையிலான புகைப்படமோ அல்ல. ஒரு முட்டையின் புகைப்படம் என்பதுதான் விஷயம். இதற்கு முன்பு வரை கெய்லி ஜென்னர் (Kylie Jenner) என்ற தொலைக்காட்சி பிரபலத்தின் பதிவுதான் அதிக லைக்ஸ் வாங்கியதாக இருந்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம், கெய்லி ஜென்னர், அவருக்குக் குழந்தை பிறந்திருப்பதைத் தெரிவிக்கும் வகையில், அவரது மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படம் 18 மில்லியன் லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவே இன்ஸ்டாகிராமில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட பதிவாகவும் இருந்தது. அந்தச் சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் பதிவிடப்பட்டதுதான் இந்த முட்டையின் புகைப்படம். அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரே world_record_egg என்றுதான் இருக்கிறது. அந்தக் கணக்கில் வேறு எந்தப் பதிவும் கிடையாது. இருப்பது ஒரே ஒரு பதிவுதான். இந்த மாதம் 4-ம் தேதி, இந்த முட்டையின் போட்டோ அப்லோட் செய்யப்பட்டுள்ளது. ' இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்ற பதிவு என்ற சாதனையை தற்போது நாங்கள்தான் வைத்திருக்கிறோம், எங்கே எங்களது ப்ளூ டிக்' என்றும் இந்தக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெய்லி ஜென்னர்

இதற்குப்  பதிலடிகொடுக்கும் வகையில், கெய்லி ஜென்னர் ஒரு முட்டையை உடைத்து தரையில் ஊற்றி 'Take that little egg' என்று பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு நிமிடமும் இந்த முட்டை போஸ்ட் பெரும் லைக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.