'சீனாவின் விண்கலம் நிலவில் இறங்கவேயில்லை' - சந்தேகம் கிளப்பும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்! | Alien researcher claims Chinese landing on far side of Moon was fake

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (15/01/2019)

கடைசி தொடர்பு:10:19 (15/01/2019)

'சீனாவின் விண்கலம் நிலவில் இறங்கவேயில்லை' - சந்தேகம் கிளப்பும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்!

 

சீனா

இந்த மாதம் 3-ம் தேதி சந்திரனின் மறுபக்கம் முதல் முறையாக விண்கலத்தை இறக்கிச் சாதனை படைத்தது சீனா. Chang’e 4 என்ற அந்த விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும் அங்கே இருந்து தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து அனுப்பி வருகிறது. அதைச் சீனாவும் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறது. சந்திரனின் மறுபக்கத்தில் தற்பொழுது ஆய்வை நடத்தி வரும் இந்த விண்கலத்தை உலக நாடுகள் உற்றுக் கவனித்து வருகின்றன. இந்நிலையில் அங்கே விண்கலம் இறங்கவே இல்லை என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார் வேற்று கிரகவாசி ஆய்வாளர் ஒருவர்.

 Chang’e 4

விண்கலம் தரையிறங்கியது தொடங்கி தற்பொழுது வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வரை அனைத்துமே சீனாவால் பொய்யாக உருவாக்கப்பட்டவை என்கிறார் இவர். ஸ்காட் சி வாரிங் (Scott C Waring) என்ற பிரபல வேற்று கிரகவாசி ஆய்வாளர்தான் இப்படி ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இவர் அதற்காக விண்கலம் நிலவில் எடுத்து எனச் சீனா வெளியிட்ட ஒரு புகைப்படத்தை ஆதாரமாக முன் வைக்கிறார். அவர் குறிப்பிடும் அந்த போட்டோவில் ரோவரின் அருகே தரைப் பகுதியில் ஒரு வெள்ளைக் கோடு ஒன்று தெரிகிறது. எனவே அந்தப் புகைப்படம் நிலவில் எடுக்கப்பட்டது இல்லையென இவர் தெரிவித்திருக்கிறார்.

சந்திரன் விண்கலம்

" யாரோ ஒருவர் தவறுதலாக விண்கலத்தின் முன்னால் ஒரு கோட்டை வரைந்திருக்கிறார்கள், அதை அழிக்கவும் மறந்திருக்கிறார்கள் ". மேலும் "இது நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது. நாசா எப்படி மனிதர்கள் முதலில் நிலவில் தரையிறங்கியதை போலியாக உருவாக்கியதோ அதை தற்பொழுது சீனாவும் தொடர்கிறது என யூகிக்கிறேன். அந்த போட்டோவில் அதைப் போல வேறு எங்கும் கோடுகள் இல்லை என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்" என்றும் அவரது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.