``பண்ணவாடியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்" - பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!!! | More new birds in pannavadi bird sanctuary

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:23 (16/01/2019)

``பண்ணவாடியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்" - பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!!!

சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் செந்தில்குமார், கலைச்செல்வன் ஆகியோர் பண்ணவாடிப் பகுதியில் பறவைகள் குறித்தான கணக்கெடுப்பு மேற்கொண்டனர். 

இது பற்றி ஆசிரியர் கலைச்செல்வனிடம் பேசினோம்,

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து பண்ணவாடிப் பகுதியில் வெளிநாட்டுப் பறவையினங்கள் அதிக அளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் இமயமலை, மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பா கண்டம் முதலான இடங்களில் குளிர்காலங்களில் ஏற்படும் அதிகளவு பனியால் அங்குள்ள பறவையினங்களுக்குப் போதுமான அளவு உணவு கிடைப்பதில்லை. உணவு தேடும்பொருட்டு அவை வெப்ப மண்டல பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலங்களில் வந்து போகின்றன. இதுவே வலசைப்போதல் என்று அழைக்கப்படுகிறது. வலசைபோதல் என்பது ஒரு நாட்டுக்குள் நெடுந்தொலைவோ அல்லது நாடு விட்டு நாடு, சில சமயங்களில் கண்டம்விட்டு கண்டம் கூட நிகழலாம். பறவைகள் எங்கு முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றனவோ அதுதான் அதன் தாயகமாகும். அந்த வகையிலே வலசைப் பறவைகள் உணவுக்காக மட்டுமே இடம்பெயர்கின்றன.

வலசை வருவதைக்குறித்து சங்ககாலத்திலேயே நாரைவிடு தூது என்னும் பாடலில் பாடியவர் சத்திமுத்தப்புலவர் ஆவார்.

``நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் " 


``நாரையே நாரையே, செந்நிறக் கால்களை உடைய நாரையே.. பழங்களை உடைய பனையின் கிழங்கு பிளந்ததை ஒத்த, பவழம் போன்ற நிறத்தினைக் கொண்ட, கூரிய அலகுகளைக் கொண்ட செங்கால் நாரையே.. நீயும் உன் மனைவியும் தென் திசையில் உள்ள குமரியில் நீராடி வட திசைக்குச் செல்வீர்களாயின்" என்று கூறியிருப்பார் அவர். இதிலிருந்து பறவைகள் வலசை வருதல் என்பது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது என அறிய முடிகிறது. மேற்கண்ட பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள செங்கால் நாரை என்னும் பறவை தமிழகத்துக்கு அரிதாய் வலசை வரும் ஐரோப்பிய, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பறவை ஆகும்.

பண்ணவாடிப் பகுதியில் வாத்து இனங்களில் வலசை வரும் வகைகளான பட்டைத்தலை வாத்து, ஆண்டி வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி ஆகியனவும், பழுப்புத்தலை கடற்காகம், பவளக்காலி, கருவால் மூக்கன், சிவப்பு வல்லூறு, ஐரோப்பிய பஞ்சுருட்டான், மஞ்சள் வாலாட்டி, சாம்பல் வாலாட்டி, காஸ்பியன் ஆலா, மீசை ஆலா , பச்சைக்காலி ,உள்ளான், பொறி உள்ளான் ஆகியவை  கண்டறியப்பட்டுள்ளன.

இவை மட்டுமன்றி மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, கூழைக்கடா, அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், பட்டாணி உப்புக்கொத்தி, தோல்குருவி ,நெடுங்கால் உள்ளான், கொம்பன் ஆந்தை, நீர்க்காகம்,கொக்கு, வயல் நெட்டைக்காலி முதலிய உள்ளூர் பறவைகளையும் தரிசிக்கலாம் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க