பறவைகளின் உதவியுடன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கும் புகுன் பழங்குடிகள்! | Bird tourism gave new life and employment for Bugun tribes

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (17/01/2019)

கடைசி தொடர்பு:15:25 (17/01/2019)

பறவைகளின் உதவியுடன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கும் புகுன் பழங்குடிகள்!

பறவைகளுடனே வாழும் புகுன் பழங்குடி மக்களுக்கு அவை சாதாரண ஒன்றுதான். அவற்றைத் தினமும்தான் அவர்கள் பார்க்கிறார்கள். காடு, மலை ஏறி வேர்த்து வியர்க்கக் காத்திருந்து பல பறவையாளர்கள் பார்க்கும் அரிய வகைப் பறவைகளை அவர்கள் தங்கள் வாழிடத்திலேயே பார்ப்பவர்கள்.

பறவைகளின் உதவியுடன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கும் புகுன் பழங்குடிகள்!

அவர் பெயர் இண்டி. ஈகிள்நெஸ்ட் வனவிலங்குச் சரணாலயத்துக்கு அருகில் வாழும் புகுன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தில் வெறும் 1500 பேர் மட்டுமே தற்போது வாழ்கின்றனர். குறைவான மக்கள் தொகையுடைய இனமாக இருந்தாலும், அந்தக் காட்டைத் திறம்பட மேலாண்மை செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. 1962-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்காகத் தங்கள் நிலத்தில் பாதியைக் கொடுத்துவிட்டார்கள். அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசிடமிருந்து வாங்குவதற்கான முயற்சி இன்னமும் முடியவில்லை. போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

அது ஒருபுறம் நடந்துகொண்டே இருக்க, தங்களுக்கென்று என்ன நிலம் இருக்கிறதோ அதை அனைவரும் சமமாகப் பங்கிட்டு வாழ்கிறார்கள். இண்டிக்கும் அப்படியொரு நிலம் கிடைத்தது. அதை அவர் சூழலியல் சுற்றுலா தொடங்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். அதன்மூலம், தன் சமூகத்துக்கான வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார். யாருக்கும் தெரியாத, தெளிவற்று இருந்த புகுன் மக்களின் நிலம் இன்று உலகளவில் புகழ்பெற்று விளங்கக் காரணமாகவும் அமைந்தது அவரின் உழைப்பு.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், சூழலியலாளரும் வானியல் ஆராய்ச்சியாளருமான ரமணா ஆத்ரேயா இந்த யோசனையைச் சொன்னார். அப்போது இண்டிக்கு இது இவ்வளவு வெற்றியடையும் என்று தெரிந்திருக்கவில்லை. அது இவ்வளவு வெற்றிடைய அந்த யோசனையை நிகழ்த்திக் காட்டிய இண்டியின் உழைப்புதான். பறவை நோக்குதல் பற்றி ரமணா சொல்லும்போது புகுன் மக்கள் அனைவருக்குமே அது புதிதாகத்தான் இருந்தது. பறவைகளைப் பார்க்க யாராவது செலவு செய்வார்களா? எங்கு பார்த்தாலும் இருக்கும் அவற்றைப் பார்க்க யார் மெனக்கெட்டு வருவார்கள்?

ஆம். அவற்றுடனே வாழும் புகுன் பழங்குடி மக்களுக்கு அவை சாதாரண ஒன்றுதான். அவற்றைத் தினமும்தான் அவர்கள் பார்க்கிறார்கள். காடு, மலை ஏறி வேர்த்து வியர்க்கக் காத்திருந்து பல பறவையாளர்கள் பார்க்கும் அரிய வகைப் பறவைகளை அவர்கள் தங்கள் வாழிடத்திலேயே பார்ப்பவர்கள். அத்தகையவர்களுக்கு இந்தத் திட்டம் புதிதாகத்தான் இருக்கும். அப்படித்தான் இருந்தது.

புகுன் பழங்குடிகள்

Photos Courtesy: Ramana Athreya

இன்று பூனேவிலுள்ள ஐ.ஐ.டி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ரமணா ஆத்ரேயா அவர்களுக்கு விளக்க முயன்றார். முதலில் அவர்களோடு இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கி அங்கிருக்கும் பறவைகளைப் பற்றியும், ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தின் பல்லுயிர்ச் சூழல் பற்றியும் ஆய்வுசெய்தார். பின்னர் அவற்றைப் பற்றி புகுன் மக்களுக்கு விளக்கமாகப் பாடம் எடுத்தார். அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களைப் பார்க்க வருபவர்கள், அவர்களுக்காகச் செய்ய வேண்டியவை அனைத்தையும் எடுத்துரைத்தார். பறவைச் சுற்றுலா வருபவர்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். அதை முன்னெடுத்துச் செல்ல அங்கேயே இருக்கும் ஆர்வமுள்ள ஓர் இளைஞன் தேவை. பறவைச் சுற்றுலாவைப் பறவைகளையும் அப்பகுதியின் பல்லுயிர்ச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பாதையில் கொண்டுசெல்லும் அளவுக்குத் திறன்படைத்தவராக அவர் இருக்கவேண்டும். அவருக்குக் கிடைத்த அப்படியோர் இளைஞன் இண்டி.

புகுன் மக்களுக்குப் பறவைச் சுற்றுலா பற்றித் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவர்களுக்குத் தயக்கமாக இருந்தது. முதலில் இதை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியுமா என்றே அனைவருக்கும் சந்தேகமாக இருந்தது. அதனால் இதைச் செய்துகாட்டி அதில் லாபத்தையும் எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தன்னிடமிருப்பதை ஆத்ரேயா உணர்ந்தார். இதில் முன் அனுபவம் இல்லையென்றாலும் துணிந்து இறங்கினார். அவருக்குத் துணை நின்றார் இண்டி.

இண்டி. காடுகள் மேற்கொண்ட ஆர்வத்தாலேயே ஆத்ரேயாவிடம் அப்பகுதி வனத்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு துடிப்பான இளைஞர். முதலில் அருணாசலப் பிரதேசத்தின் வனத்துறையில் வனக் காப்பாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதை விட்டுவிட்டு, மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1996-ம் ஆண்டு மரம்வெட்டும் தொழிலை உச்சநீதிமன்றம் தடைசெய்தது. அதன்பின்னர் இண்டி சாலை போடும் பணி, கட்டுமானப் பணிகள் போன்ற சின்னச் சின்ன ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டு ஆத்ரேயா இந்தத் திட்டம் குறித்து வனத்துறையிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர் தனக்கு உதவியாக ஆர்வமுள்ள இளைஞன் தேவைப்படுவதைச் சொல்லியிருக்கிறார். அவர்களும் இண்டியைப் பரிந்துரைக்கவே இருவரும் ஒட்டிக் கொண்டனர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அறிமுகத்தைப் பற்றி இப்படிக் கூறினார் ஆத்ரேயா,

``அன்று மட்டும் இண்டிக்குப் பதிலாக வேறு யாராவது என்னிடம் அறிமுகம் ஆகியிருந்தால் இந்தத் திட்டம் நிச்சயமாக நீர்த்துப் போயிருக்கும்"

இண்டி

இடதுபக்கமாக நிற்பவர் இண்டி

அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் ஒத்துப் போயிருக்கிறது. முதல் முயற்சியாக 2004-ம் ஆண்டு தனக்குத் தெரிந்த மூன்று பறவை ஆர்வலர்களைச் சுற்றுலாவுக்கு வரவழைத்தார். மூவரும் முறையே பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். அவர்களிடம் இதை வெற்றிகரமாகச் செய்துமுடித்தால் பின்னர் அதிகமான பறவையாளர்கள் இங்கு வருவார்கள். ஈகிள்நெஸ்ட் சரணாலயத்தில் பத்து நாள் சுற்றுலா என்பதுதான் திட்டம். ஆனால் முதல்நாளே பிரச்னை தலைதூக்கிவிட்டது. டெஸ்பூரில் அமைந்திருந்த விடுதியில் தங்கினார்கள் சுற்றுலாப் பயணிகள். அடுத்தநாள் அதிகாலையில் பறவை நோக்குதலுக்குக் கிளம்புவதுதான் திட்டம். அவர்களும் கிளம்பினார்கள். சுற்றுலாவின் முதல்நாள். ஆனால், அவர்களை அழைத்துவர அனுப்பியிருந்த வாகனத்தை இந்திய ராணுவம் வாங்கிச் சென்றுவிட்டது. அங்கு அடிக்கடி நிகழும் ஒன்றுதான். அவர்களைக் கேள்விகேட்க முடியாது. கொடு என்றால் கொடுத்தாக வேண்டும். 

இண்டி ஆத்ரேயாவிடம் இதை நிச்சயம் சரிசெய்வதாக உறுதியளித்தார். இரண்டாவது வண்டியும் அனுப்பினார். ஆனால், அதுவும் வழியிலேயே புகுன் கிராமத்துக்கு அருகிலிருக்கும் டெங்கா என்ற குருநகரத்தில் பழுதடைந்து நின்றுவிட்டது. அங்கிருந்து மூன்றாவது வண்டிக்கு அவர்களை மாற்றி அழைத்துவந்தார்கள். அதுவும் போம்பூ என்ற புகுன் மக்களின் கிராமத்துக்கு 10 கிலோமீட்டர் இருக்கையில் பழுதாகிப் போகவே இருட்டில் காட்டுக்குள் அந்தத் தொலைவை நடந்தே கடக்கவேண்டிய சூழ்நிலை. ஒருவழியாக இண்டி அழைத்து வந்துவிட்டார். ஆனால், முதல்நாள் காலையில் கிளம்பியவர்கள் அடுத்தநாள் காலைதான் சென்றடைந்தார்கள்.

ஒருவழியாகப் பறவை நோக்குதலைத் தொடங்கியாயிற்று. அந்தச் சுற்றுலாவின்போது வந்திருந்தவர்கள் சுமார் 180-க்கும் அதிகமான பறவை இனங்களைப் பார்த்துப் பதிவு செய்தார்கள். அதில் அதிகமானவை அழியும் நிலையிலும் அழிவின் விளிம்பிலும் இருக்கும் அரிய வகைப் பறவைகள். அங்கிருந்து மீண்டும் டெஸ்பூருக்கு ஒருவழியாகப் பத்திரமாகச் சென்று சேர்த்துவிட்டார் இண்டி. 

``நான் முதன்முறை அவனைச் சந்தித்ததை அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இப்படியொரு சூழலைச் சமாளித்து வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது எளிதல்ல. அவன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் விழிபிதுங்கித் தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றிருப்பார்கள். நான் சரியான நேரத்தில் சரியான நபரிடம் சென்று சேர்ந்ததுதான் இவை அனைத்தும் வெற்றியடையக் காரணம்" என்று பின்னாளில் ஆத்ரேயா அந்த நிகழ்வைப் பற்றிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒரேயொரு முயற்சி பெரியளவிலான சுற்றுலாவுக்கு வழிவகுக்காது என்பது இண்டிக்குப் புரிந்திருந்தது. இதை வளர்த்தெடுக்கக் காடு பற்றியும் அதன் பல்லுயிர்ச்சூழல் பற்றியும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அறிவைத் தேடி காடு முழுக்கப் பயணித்தார் இண்டி. 

அருணாச்சலப் பிரதேசம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தன் மக்களில் சிலரையும் அருகே வாழும் மோன்பா என்ற பழங்குடிகளில் சிலரையும் அவர்களோடு ஆத்ரேயா, பறவையியலாளர், ஊர்வனவியலாளர், பட்டாம்பூச்சிகள் ஆய்வாளர் என்று அனைத்து விதமான வனவிலங்கு ஆய்வாளர்களையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குள் பயணித்தார் இண்டி. ஈகிள்நெஸ்ட் சரணாலயக் காட்டைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்தார். இந்த முயற்சிகளின் விளைவாக 2006-ம் ஆண்டு சில நிறுவனங்கள் அவர்களுக்கு நிதியுதவி அளித்தது. அதைவைத்து லாமா கேம்ப் என்ற இடத்தில் அவர்கள் சில கூடாரங்களையும், கழிவறைகளையும் அமைத்தனர். தன் மக்களை  சமையல் செய்ய, அவ்விடத்தைப் பராமரிக்க, பறவைச் சுற்றுலா வழிகாட்டியாகப் பயிற்சி கொடுத்தார். இது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்கு உதவுவதன் மூலமும் அந்த மக்களுக்கு வேலையை நல்கியது.

இவ்வளவையும் செய்த மக்கள் மற்றொன்றிலும் கவனமாக இருக்கிறார்கள். அது கூட்டம் கூட்டமாக மக்களை வரவழைக்கக் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்படி அனுமதிக்கக் கூடாது. ஆண்டுக்குச் சில நூறுபேர் மட்டுமே அங்கு வந்துசெல்ல வேண்டும். அப்போதுதான் அந்தச் சூழலும் அதன் இயல்பும் மாறாமல் பாதுகாக்கப்படும். அது இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான இடம். கத்திக் கூச்சலிட, கேம்ப் ஃபையர் போட அனுமதி கிடையாது. இது மற்ற சூழலியல் சுற்றுலாத் தளங்களைப் போல் குதூகலிப்பதற்கான இடமில்லை. இங்கு இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற சில கட்டுப்பாடுகள் உண்டு. அதற்குச் சம்மதித்தால் மட்டுமே நீங்கள் அங்கு செல்லமுடியும். அவர்களோடு பறவைகளை ரசிக்கவும் ஒளிப்படம் எடுக்கவும் முடியும். இப்படியே பாதுகாத்ததன் மூலம் அங்கு பல அரிய வகைப் பறவைகளைத் தொடர்ந்து அவர்களால் பார்க்கவும் முடிந்தது. அவற்றைப் பாதுகாக்கவும் முடிந்தது.

அப்படியான முயற்சியில் அந்த மக்கள் ஒரு புதுவகைப் பறவை இனத்தையே கண்டுபிடித்துள்ளனர். இருபது பறவைகளை மட்டுமே கொண்ட அந்தப் புதிய வகைக்கு அவர்களின் பெயரையே வைத்துப் பெருமை படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அந்தப் பறவையின் பெயர், புகுன் லியோசிக்லா (Bugun liocichla) இந்தியாவில் கடந்த ஐம்பது வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய பறவை வகை அது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரமணா ஆத்ரேயா

தற்போது அவர்கள் ஆண்டுக்கு ஐம்பது லட்சம் வருமானம் ஈட்டுகிறார்கள். ஆண்டுக்குச் சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை புரிகிறார்கள். ஒரு புகுன் பழங்குடியின் ஒரு நாளைய வருமானம் நான்காயிரம் ரூபாய். இது நாட்டில் தனிமனிதரின் ஒருநாளைய வருமானத்தில் குறைந்தபட்ச அளவைவிடப் பத்துமடங்கு அதிகம்.

அந்த மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டதுகூட ஆத்ரேயாவை மகிழ்விக்கவில்லை. அவர்கள் இன்னமும் தங்கள் காட்டுக்கும் அதைப் பாதுகாப்பதற்கும்தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதுதான் அவரை மேலும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. கூடிய விரைவில் அவர்கள் தங்கள் பதின்மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள். 

கிடைத்த வாய்ப்பையும் அதில் சம்பாதித்த பணத்தையும் அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். அது `நாகரிக' மனிதர்கள் நம் பூர்வகுடிகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இவற்றைவிட இந்த மக்களையும் அவர்களின் வரலாற்றையும் உலகம் முழுக்கப் பறைசாற்றும் விதமாகப் பெயரிடப்பட்ட பறவை பறக்கும் இடமெல்லாம் அமரும் மரமெல்லாம் பாடிச் செல்லும் புகுன் மக்களின் புகழை. அந்தப் புகழின் போதைக்கு அடிமையாகாமல் இன்னமும் காட்டை நம்பியே வாழும் அவர்கள்தான் நம் அனைவரையும்விட உயர்ந்தவர்கள்.


டிரெண்டிங் @ விகடன்