ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற ஃபோக்ஸ்வாகன் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு, தேசிய பசுமைத் தீர்பாயம் நாளை,( ஜனவரி 18)- க்குள் ரூ.100 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இந்திய மாசு கட்டுபாட்டு விதிமுறைகளை மீறியதால், அபராதத் தொகையை மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்திற்குச் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை மீறும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கைதுசெய்யப்பட்டு சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அபராதத் தொகையை நாளை மாலை 5 மணிக்குள் செலுத்த நேரம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்பாயம், நான்கு பேர் கொண்ட குழுவை இதற்கு நியமனம் செய்தது. அந்தக் குழுவின் அறிக்கையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் கார்களில் இருந்து கடந்த 2016 -ம் ஆண்டு 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸ்சைடு (Nitogen oxide) வாயு நாட்டின் தலைநகரான புது டெல்லியில் வெளியிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக, அக்குழு 171.34 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்தது. நைட்ரஜன் ஆக்ஸ்சைடு போன்ற வாயுக்கள் பூமி வெப்பமயமாதல் மற்றும் அமில மழைக்குக் காரணமாக அமையும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே தொழிற்சாலைகள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் விதிகளை வகுத்துள்ளது.