BMW லெஃப்ட்ல போ, KTM ரைட்ல போ... வழிவிடு, வருது வருது ஹோண்டா CB300R! | Honda CB300R to be launched in competitive price

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (17/01/2019)

கடைசி தொடர்பு:18:26 (17/01/2019)

BMW லெஃப்ட்ல போ, KTM ரைட்ல போ... வழிவிடு, வருது வருது ஹோண்டா CB300R!

சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற CB300R பைக்கை இந்தியாவில் களமிறக்கப்போகிறது ஹோண்டா. ஆரம்பத்தில் CBR250R பைக்கை CKD முறையில் இறக்குமதிசெய்தது போல இந்த பைக்கையும் இறக்குமதிசெய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்போகிறார்கள். சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பைப்பெற்ற CB300R-ன் இன்ஜின், பழைய CB300F பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், இந்த மாடல் டிசைனுக்காகவே பெயர்பெற்றது. CB1000R பைக்கின் 'நியோ கஃபே' டிசைனை அப்படியே சின்னதாக்கி, CB300R பைக்காக 2015-ல் கொண்டுவந்தது ஹோண்டா. இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்க, கடந்த டிசம்பர் மாதம் நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்கான CB300F பைக்கின் விற்பனையை நிறுத்திவிட்டது.

ஹோண்டா CB300R

முதல் முறையாக ஹோண்டாவின் 300cc பைக் இந்தியாவுக்கு வருகிறது.  இந்த ரெட்ரோ மாடர்ன் ஸ்போர்ட்ஸ் பைக்கை, குறிப்பிட்ட சில ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்போவதாகக் கூறியுள்ளார்கள். இதற்கான முன்பதிவுகளை சீக்கிரமே தொடங்க உள்ளார்கள். 5000 ரூபாய் கொடுத்து பைக்கை முன்பதிவு செய்யலாம். 2.50 லட்சம் ரூபாய்க்குக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கில், 286cc சிங்கில் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. 4 வால்வ் DOHC சிஸ்டம் மற்றும் லிங்விட் கூலிங் தொழில்நுட்பம் வருகிறது.    6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் கூட்டாகக் களமிறங்கும் இந்த இன்ஜின், 31.4bhp பவர் மற்றும் 27.5Nm டார்க் உருவாக்கக்கூடியது. சர்வதேச மாடலில் 41மி.மீ USD ஃபோர்க் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் இருக்கிறது. இந்தியாவில் USD ஃபோர்க் வருமா என்ற கேள்வி உள்ளது. முன்பக்கம் 296 மி.மீ டிஸ்க் பிரேக், பின் பக்கம் 220 மி.மீ டிஸ்க் பிரேக் உள்ளன. முன்பக்கம் 4 pot caliper மற்றும் பின்பக்கம் single-pot caliper இருக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. சர்வதேச மாடலில், ஏபிஎஸ் உடன் IMU சென்சார்கள் வருவதால், கார்னரிங்கிலும் ஏபிஎஸ் கெத்தாக வேலை செய்யும். ஆனால், இந்திய மாடலின் விலையை யோசித்தால், IMU சென்சார் வருவது சந்தேகம்தான்.

Digital instrument console in CB300R

17 இன்ச் அலாய் வீல்களும் 110/70-17 மற்றும் 15/60-17 டயர்களும் இதில் உள்ளன. செக்மென்ட்டிலேயே எடை குறைவான பைக் CB300R. வெறும் 143 கிலோ எடை. 2.50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக விலை நிர்ணயித்தால், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கேடிஎம் டியூக் 390 மற்றும் பிஎம்டபிள்யூ G310R பைக்குகளுக்கு கடும் போட்டியாக இருக்கும். CB300R இந்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.