கடற்படைக் கப்பலில் நடைபெற்ற வினாடி-வினா போட்டி! - கலக்கிய சுட்டீஸ் | School students excelled in quiz inside the Indian Navy ship...

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:13:48 (18/01/2019)

கடற்படைக் கப்பலில் நடைபெற்ற வினாடி-வினா போட்டி! - கலக்கிய சுட்டீஸ்

இந்தியக் கடலோரக் காவல் படை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பள்ளி மாணவர்களுக்கான குவிஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. அதுபோல இந்த ஆண்டுக்கான குவிஸ் போட்டி சென்னைத் துறைமுகத்தில் ஐசிஜீஎஸ் சாகர் கப்பலில் நேற்று நடைபெற்றது.

சென்னை முழுவதிலும் உள்ள 21 பள்ளிகளிலிருந்து 78 மாணவர்கள் கலந்துகொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆவடி கேந்திர வித்யாலயா விமானப்படை பள்ளி, சங்கரா உயர்நிலைப் பள்ளி, பால வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். நாட்டியக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ரேவதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் பல மூத்த அதிகாரிகளும் உடன் கலந்துகொண்டனர். 

ஓர் அணியில் இரண்டு மாணவர்கள் என 39 அணியினர் பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாகப் போட்டி நடைபெற்றது. தகுதிச் சுற்றிலிருந்து ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஆறு சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாட்டு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டு கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தனர். 

இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தனர்கள் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விகடன் குழுமம் சார்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய ரேவதி ராமச்சந்திரன், இந்தியக் கடற்படை மீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. அறிவைத் தொடர்ந்து தேடிப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அறிவு சமூகத்திற்கும் பயன்பட வேண்டும். கலந்துகொண்டுள்ள மாணவர்கள் நாட்டுக்கு சேவை செய்கின்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க