புதுப்பாளையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் இளவட்டக் கல்!- வரலாற்று ஆர்வலர்கள் வருத்தம் | unattended atlas stone in puthupalayam

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (18/01/2019)

புதுப்பாளையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் இளவட்டக் கல்!- வரலாற்று ஆர்வலர்கள் வருத்தம்

சேலம் மாவட்டம், புதுப்பாளையம் என்ற ஊரில் இருக்கும் ஐயனாரப்பன் கோயிலுக்கு அருகே இளவட்டக் கல் ஒன்று காணப்படுகிறது. ஆனால், அதை இளைஞர்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை. 

இளவட்டக்கல்

பழங்காலத்தில் தமிழர்கள் வாழ்வியலில், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள, சில வீரம் நிறைந்த சவால்களைச் சந்திக்கவேண்டும். அவற்றில் ஒன்று இளவட்டக் கல்லைத் தூக்குவது. 

ஒரு காலத்தில் இளைஞர்கள் இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் திருமணம் செய்துகொள்ளத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுவர்.  எனவே தினமும் இளைஞர்கள் அதைத் தூக்கிப் பயிற்சி செய்து கொண்டு இருப்பர். ஒருவருக்குத் திருமணத் தேதி  நிச்சயம் செய்த பின்பு, மரத்தடியிலோ அல்லது கோயில் முன்போ ஊர்மக்கள் ஒன்று கூடுவார்கள். அங்கு இளவட்டக்கல் இருக்கும். அப்போது மணமகன், அந்த உருண்டையான மாப்பிள்ளை கல்லை தூக்கித் தோள்வரை கொண்டுசென்று பின்புறமாகத் தள்ளவேண்டும். தோள்வரை தூக்கியவருக்குப் பெண் கொடுக்கச் சம்மதிப்பர். அந்தக் கல்லை பாதிவரை தூக்கினாலோ அல்லது தூக்காமல் விட்டுவிட்டாலோ பெண் கொடுக்க விரும்பமாட்டார்கள். 

இந்த நடைமுறை மணமகனின் உடல்வலிமையையும், வீரத்தையும் கணிக்கப் பயன்பட்டது. இவையனைத்துயும் நவீன கால வாழ்க்கையில் வழக்கொழிந்துவிட்டது. அதனால் பழந்தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் இந்தச் சின்னங்களும் கேட்பாரற்றுப் போயின. 

கல்

இதுகுறித்து, வரலாற்றுத் தேடல் குழுவைச் சேர்ந்த கலைச்செல்வனிடம் பேசினோம். ``பூவாணிய நாடு என்பது இன்றைய தாரமங்கலம், நங்கவள்ளி, இளம்பிள்ளை, புதுப்பாளையம் அனைத்தும் சேர்ந்த பகுதி. இந்தப் பகுதியில் உள்ள  அனைத்துக் கோயில்களின் முன்பும் மாப்பிள்ளை கல் அல்லது இளவட்டக் கல் காணப்படுகிறது. 75 கிலோ முதல் 100 கிலோ அளவுள்ள அந்தக் கல்லைத் தூக்கிய ஒருவன் திருமணத்து மாப்பிள்ளையாகத் தகுதி உடையவராகக் கருதப்பட்டதால் இது `மாப்பிள்ளைக் கல் ' ஒரு பெயர் பெற்றது. ஆனால் இந்தக் காலத்தில் அந்த நடைமுறை இல்லை. எனவே இளைஞர்கள் இளவட்டக்கல்லைப் பொருட்படுத்துவதில்லை. இதைக் காணும் சில இளைஞர்களும் இதைத் தூக்க முயற்சி செய்யாமல் அந்தக் கல்லுடன் புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க