`இசைதான் அவளுக்கு நிரந்தரம்; வேறு எதுவுமில்லை! - நெகிழும் பாடகி ஜோதியின் தாயார் | jothi got a opportunity to helping others from cinema songs

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (19/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (19/01/2019)

`இசைதான் அவளுக்கு நிரந்தரம்; வேறு எதுவுமில்லை! - நெகிழும் பாடகி ஜோதியின் தாயார்

'றெக்க' படத்தில் இடம்பெற்ற 'கண்ணம்மா... கண்ணம்மா' பாடல்மூலம் சமூகப் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தவர், ஜோதி. பார்வைக் குறைபாடு, பேசுவதை எளிதில் உள்வாங்கிகொள்ள இயலாத தன்மை போன்ற பிரச்னைகள் இருந்தும், சமூகத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிக்கொண்டவர். இசையை மட்டுமே தனக்கான உலகமாகக் கொண்டிருந்த ஜோதி, தற்போது ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுதல், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் என சமூக சேவைப் பணிகளில் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஜோதியின் அம்மா கலைச்செல்வியிடம் பேசினோம்.

                                                                                                   ஜோதி

"நான் ஒரு சிங்கிள் மதர். ஆதரவற்றவர்களுக்கான வலி, வேதனை என்ன என்பதை அனுபவத்தால் பலமடங்கு உணர்ந்தவள். அதனால், சின்ன வயதில் இருந்தே என் மகளுக்கு, மற்றவர்களுக்கு உதவும் குணத்தை விதைத்து வளர்த்தேன். அவளை சிறுவயதில் இருந்தே முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் வாழும் இடங்களுக்கு அழைத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டேன். அப்போது, அங்கு இருப்பவர்கள் அவளிடம் பேசும் அன்பான வார்த்தைகளும், அவர்களின் கைதட்டல்களும் ஜோதியின் முகத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவளின் குறைகளை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். அதனால், அடிக்கடி ஆதரவற்ற மக்களுடன் எங்கள் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தோம்.

ஆரம்ப காலத்தில், எங்களால் அவர்களுக்குச் செய்ய முடிந்த உதவி என்றால், ஜோதியின் இனிமையான பாடல் மூலம் அவர்களை மகிழ்ச்சிகொள்ளச்செய்வது மட்டும்தான். திரைப்பட வாய்ப்புக்குப் பின் நிறைய இடங்களில் பாடும் வாய்ப்பு ஜோதிக்குவருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் பணமாகவோ, பொருளாகவோ நிறையப் பரிசுகள் வர ஆரம்பித்தது. ஜோதிக்கு, மற்றவர்கள் கொடுக்கும் பொருள்  என்ன என்பதுகூட தெரியாது. அதைப் பார்க்கவும் முடியாது.

பாடகி ஜோதி

ஆனால், அதன் பயன்பாட்டை விளக்கிப் புரியவைத்தால் அவளைச் சுற்றி இருக்கும் நபர்களில் யாருக்கு அந்தப் பொருள் பயனுள்ளதாக இருக்குமோ, அவர்களுக்கு கொடுக்கச் சொல்லிருவா. கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை எங்களுடைய அன்றாட செலவு போக மீதம் இருப்பதை முதியோர்களின் சிகிச்சைக்கு, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் என எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துட்டு இருக்கோம். சமீபத்தில், பொங்கல் திருநாளைக்கூட ஆதரவற்ற முதியோர்களுடன்  சேர்ந்து மனநிறைவுடன் கழித்தோம். ஜோதியைப் பொறுத்தவரை இசையைத் தவிர எதுவும் நிரந்தரம் இல்லை. அதனால், மற்றவர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறாள். இன்னும் சேவை தொடரும்" என்கிறார் புன்னகையுடன்.