Published:Updated:

ஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர் 

எஸ்.மகேஷ்
ஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர் 
ஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர் 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற, இரவில் காதலித்த பெண்ணைக் கரம்பிடித்துள்ளார், ஒப்பந்த ரயில்வே ஊழியர். 

 சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சுதேஷ். (60). கடந்த 11-ம் தேதி, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்தபோது, ரயில் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ் என மூன்று மகன்களும் உள்ளனர்.  சதீஷுக்கு, வரும் பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், விபத்தில் சிக்கிய சுதேஷுக்கு இன்று அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவுசெய்தனர். அறுவைசிகிச்சையின்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற சந்தேகம் புதுமாப்பிள்ளை சதீஷுக்கு ஏற்பட்டது. இதனால், அறுவைசிகிச்சை செய்யும் முன் அப்பாவின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் எனக் கருதிய சதீஷ், அவசர திருமணத்துக்கு ஏற்பாடுசெய்தார். ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில், நேற்றிரவு உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் சதீஷ் தாலி கட்டினார். அதன்பிறகு, அனைவரிடமும் அவர் ஆசீர்வாதம் வாங்கினார். 

சுதேஷிடம் கேட்டபோது, ``விபத்தில் என்னுடைய இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன். பிப்ரவரி 15-ம் தேதி, என் மகன் சதீஷுக்கு திருமணம் செய்துவைக்க சத்திரத்துக்கு 5 ஆயிரம் ரூபாய பணம் செலுத்தியிருந்தேன். தற்போதைய சூழ்நிலையைக் கருதி, சத்திரத்துக்கு கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கச் சொல்லிவிட்டேன். எனக்கு  ஏதாவது நடப்பதற்கு முன்,  மகனுக்கு திருமணத்தை நடத்தச் சொல்லிட்டேன். என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் அவர்களுக்கு உண்டு" என்றார். 

 சதீஷின் அம்மா மல்லிகா கூறுகையில், ``விபத்தில் அவருடைய (சுதேஷ்) இரண்டு கால்களும் துண்டாகிவிட்டன. அவருக்கு நடக்கும் அறுவைசிகிச்சையில், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.  அதனால்தான், அவர் உயிரோடு இருக்கும்போதே சதீஷுக்கு திருமணத்தை நடத்திவிட்டோம்" என்றார் கண்ணீர்மல்க 

 சதீஷின் திருமணம் அவசர அவசரமாக நடந்ததாலும், அவர் கரம்பிடித்த சித்ராவை சந்தித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்தார் உறவினர் ஒருவர். ``சதீஷ், சென்னை ஐசிஎஃப்பில் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் வேலை செய்துவருகிறார். சித்ரா, திருவொற்றியூரில்தான் குடியிருந்துவருகிறார். இருவருக்கும் ஒரே பகுதி என்பதால் காதலித்துள்ளனர். இந்தத் தகவல் இரு வீட்டினருக்கும் தெரியவந்ததும், திருமணத்தை நடத்த சம்மதித்துள்ளனர். ஆனால், அதற்குள் விதி விளையாடிவிட்டது. சதீஷ், சித்ரா திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டினரும் செய்துவரும் நேரத்தில்தான், சுதேஷ் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிவருகிறார். இதனால்தான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே அவசரத் திருமணத்துக்கு ஏற்பாடுசெய்தோம். தாலியை சுதேஷ் ஆசீர்வதித்துக் கொடுத்தார். அதை மல்லிகா எடுத்துக்கொடுக்க, சதீஷ் தாலி கட்டினார்"  என்றார். 

ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பொன்னம்பலம் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, ``சுதேஷின் இடுப்புக்குக் கீழ் ரயில் ஏறியதால், அவரின் இரண்டு கால்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நுரையீரலிலும் பாதிப்பு உள்ளது. இதனால், சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு, கூடுதல் கண்காணிப்புடன் அவருக்கு இன்று அறுவைசிகிச்சை நடத்தியது. அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அளித்துவருகிறோம்" என்றார். 

இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு சுதேஷ் வீட்டுக்குத் திரும்பினாலும், அவரை குழந்தையைப் போலதான் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். புதுமாப்பிள்ளை சதீஷ் மற்றும் அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் சோகத்துடன்  இருந்தனர்.