`குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எது நல்லது?" - ஆய்வில் ஆச்சர்யம் | A Survey reveals which is more important for the children's future

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (20/01/2019)

கடைசி தொடர்பு:09:59 (20/01/2019)

`குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எது நல்லது?" - ஆய்வில் ஆச்சர்யம்

புத்தகங்களுடன் வளர்வது மட்டுமல்ல, புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான். புத்தகத்தை வாங்குவதும் அதை வீட்டில் அடுக்கி வைத்து வீட்டுக்கு வருபவர்களிடம்  `என்னிடம் எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன பாருங்கள்’ என்று சொல்லிக்காட்டி பெருமைகொள்வதும் சுகமான அனுபவம்தான். இன்று பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்கான அறை என்று பெரிதாக இல்லை... குழந்தைகள் கையில் புத்தகமும் இல்லை. அந்த இடத்தை மொபைல்கள் ஆக்கிரமித்துவிட்டன. இவை, இன்றைய தலைமுறையினருக்கு புத்தகங்களின் அருமையையும் வாசிப்பின் அவசியத்தையும் யாரும் புரியவைக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.

நூலகம்

கடந்த இரண்டு வாரமாகச் சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்க்கும்போது, மேலே சொன்னவை எல்லாம் பொய் என்றே தோன்றும். ஆனால், புத்தகக் காட்சிக்கு உள்ளே போகும் ஒருவர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால்கூட, கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கும். அப்படியில்லாமல் புத்தகக் காட்சியும், வெறும் கண்காட்சிக் கூடமாக மட்டுமே இருப்பதைக் காண முடிகிறது. அதற்காக, ஓராண்டில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வாசித்துவிடுங்கள் என்றால் அது இயலாதுதான். அப்படி எல்லா புத்தகங்களையும் அல்லாமல் ஓராண்டில் வெளியாகும் குறிப்பிட்ட சில நூல்களையாவது வாங்கலாம். அப்படி வாங்குவது உங்கள் சந்ததிக்குத்தான் நல்லது என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூகவியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வில் புத்தகம் படிப்பது மட்டுமல்ல, வீட்டில் நிறையப் புத்தகங்களை வைத்திருப்பதும் உறவு நிலையில், அறிவுசார்ந்த வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

ஆஸ்திரேலியாவின் நேஷனல் யூனிவர்சிட்டியில் ஜோன்னா சிகோரா என்கிற சமூகவியல் ஆய்வாளர், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 25-லிருந்து 65 வயதுக்குட்பட்ட 1,60,000 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினார். முடிவில் `அதிக நூல்களை வைத்திருப்பவர்களின் வீடுகளில் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. நிறையப் புத்தகங்களோடு தங்களது இளமைக்காலத்தைக் கழித்தவர்கள், பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களைவிட இலக்கியம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிகுந்த அறிவோடு இருப்பார்கள்’ என்ற முடிவைக் கண்டுபிடித்துள்ளார். 

இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் `தங்களுக்கு 16 வயது இருக்கும்போது உங்கள் வீட்டில் எத்தனைப் புத்தகங்கள் வைத்திருந்தீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதன் பிறகு இலக்கியம், எண்கள், தொழில்நுட்பம் சார்ந்து அவர்களுக்கு இருந்த அறிவு குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் சராசரியாக 115 புத்தகங்கள் இருந்துள்ளன. இதுவே ஸ்வீடன், நார்வே நாடுகளில் இருப்போரின் வீடுகளில் சராசரியாக 200 புத்தகங்கள் இருந்துள்ளன. ஆனால், துருக்கி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்போரின் வீடுகளில் 60 புத்தகங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைதான் நாட்டுக்கு நாடு வேறுபட்டதே தவிர, பெரும்பாலானோர் வீடுகளில் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள்.

வசதியான நூலகங்களைக்கொண்ட பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பும், தினமும் புத்தகங்களோடு புழங்கும் வாய்ப்பும் வாய்க்கப்பெற்றிருந்தாலும் ஒருவர் வளர்வதே புத்தகங்களுக்கிடையேதான் எனும்போது அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை மட்டுமல்ல அவர்களின்  கல்வி அறிவையும் வளர்ப்பது புத்தகங்கள்தான். அதிக புத்தகங்களுடன் வளர்வது தங்களுக்கு மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் ஆரோக்கியமான ஒன்று என இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

புத்தகங்கள்

புத்தகங்கள் நிறைய வீட்டில் இருப்பது என்பது தங்களின் எதிர்காலச் சந்ததியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பதைக் கேட்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, இனி பணத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு, புத்தகங்களின் அதுவும் அறிவார்ந்த புத்தகங்களின் பின்னால் உங்கள் ஓட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததிக்கும் பயன்படும். நம் எதிர்காலச் சந்ததிக்குப் பணம், புண்ணியத்தைவிட புத்தகங்களைச் சேர்த்துவைப்போம். 


டிரெண்டிங் @ விகடன்