போகி மட்டுமல்ல... காணும் பொங்கலன்றும் சுற்றுச்சூழலுக்குப் பிரச்னைதான்! | Huge amount of garbage collected from beach

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (20/01/2019)

கடைசி தொடர்பு:10:08 (20/01/2019)

போகி மட்டுமல்ல... காணும் பொங்கலன்றும் சுற்றுச்சூழலுக்குப் பிரச்னைதான்!

போகி அன்று காற்று மாசு பிரச்னை அதிகரிப்பது வழக்கம். அதையே நாம் இன்னும் குறைக்கவில்லை. அதற்குள் இப்படியொரு பிரச்னை.

போகி மட்டுமல்ல... காணும் பொங்கலன்றும் சுற்றுச்சூழலுக்குப் பிரச்னைதான்!

காணும் பொங்கல் என்றாலே மக்கள் குடும்பம் குடும்பமாய் சுற்றுலா தளங்களுக்குச் சென்று தங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவது வழக்கம். கடந்த 17.10.2019 வியாழக்கிழமை அன்று காணும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடினர். பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று கிலோமீட்டர் தொலைவு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கடலில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

நடமாடும் மருத்துவக்குழு, அவசர மருத்துவ உதவிக்காகத் தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், மீட்புப்பணிக்காகத் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களிலும் மற்றும் மோட்டார் படகுகளில் நீச்சல் தெரிந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப்பணிக்காகத் தயார் நிலையில் இருந்தனர்.  

மெரினா கடற்கரையில் மட்டும் 5,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். 13 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும், ஆயுதப்படையின் குதிரைப் படையின் 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. 

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் த.கார்த்திகேயன் 18.01.2019 அன்று அளித்த அறிக்கையில் கூறியதாவது...

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  200 கோட்டங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக 19,200 தூய்மை பணியாளர்கள் (தனியார் உட்பட), 5400 மூன்று சக்கர மிதிவண்டிகள், 14,500 காம்பெக்டர் குப்பைத் தொட்டிகள், 370 காம்பெக்டர் வாகனங்கள், 22 டாரஸ் கனரக வாகனங்கள், 19 பொக்லைன் இயந்திரங்கள், 57 ஸ்கிட் லெட்டர் இயந்திரங்கள், 21 முன் பளுதூக்கும்  லோடர்கள் மூலமாகத் தினந்தோறும் சுமார் 5,100 மெட்ரிக் டான் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றது. 

17.01.2019 வியாழக்கிழமை காணும் பொங்கல் திருநாள் அன்று மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இருந்து 4,610 மெட்ரிக் டன்  திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எஞ்சியுள்ள குப்பைகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் முடக்கிவிடப்பட்டுள்ளது. 

காணும் பொங்கல்

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அதிகம் வரும் இடங்களின் துப்புரவு பணியாளர்கள் காலை, மாலை எனச் சுழற்சி முறையில் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதில் மெரினாவில் மட்டும் 125 பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு 15 மெட்ரிக் டன்  திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் 6 மணல் சலிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் 5.5 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே போல் பெசன்ட் நகர் கடற்கரையில் 35 பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு 5.5 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் 2 மணல் சலிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் 1.5 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் தமிழக அரசு 01.01.2018 அன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து. 01.01.2018 முதல் 18.01.2018 வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 67.72 மெட்ரிக் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

மேலும் இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் த.கார்த்திகேயன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அரசு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்று கேட்டபொழுது.

"பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளது என்றும். சிமெண்ட் தொழிற்சாலைகள் போன்ற மற்ற பிற தொழிற்சாலைகளுக்குக்  கொடுக்கும் திட்டம் உள்ளது" என்றும். அவர் தெரிவித்தார்.

போகி அன்று காற்று மாசு பிரச்னை அதிகரிப்பது வழக்கம். அதையே நாம் இன்னும் குறைக்கவில்லை. அதற்குள் இப்படியொரு பிரச்னை.


டிரெண்டிங் @ விகடன்