ஸ்வீட் பன், தட்டுவடை, காளான் மசாலா... ஈஸி ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்! | Easy snacks recipes to do in home

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (20/01/2019)

கடைசி தொடர்பு:15:17 (20/01/2019)

ஸ்வீட் பன், தட்டுவடை, காளான் மசாலா... ஈஸி ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்!

ஈஸியான் ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்

ஸ்வீட் பன், தட்டுவடை, காளான் மசாலா... ஈஸி ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்!

லகத்தின் பல பகுதிகளிலும் பலவிதமான ‘ஸ்ட்ரீட் ஃபுட்’ வகைகள் இருந்தாலும், தமிழ்நாட்டின்  தள்ளுவண்டி மற்றும் தெருக்கடை உணவுகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தப் பகுதிக்கே உரித்தான தனிச்சிறப்புடன் கூடிய ஸ்நாக்ஸ் வகைகள் ஏராளம்...இந்த வார விடுமுறை தினத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை குஷியாக்கும் ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்

தேனி இனிப்புப் போண்டா / ஸ்வீட் பன்

தேவையானவை

மைதா மாவு - ஒரு கப்
தயிர் - கால் கப்
சர்க்கரை - அரை கப் 
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
ஒன்றிரண்டாகப் பொடித்த சீரகம் - கால் டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு டீஸ்பூன் 
உப்பு - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 போண்டா

செய்முறை

மைதா மாவுடன் தயிர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், சீரகம், சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைப் போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மதுரை கிழங்கு பொட்டலம்

தேவையானவை

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்   
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் 
சோம்பு - கால் டீஸ்பூன்

 மசால் வகை

செய்முறை

கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சிறிதளவு உப்பு கலந்த நீரில் வேகவைத்து, மசிக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். பிறகு கடலை மாவுக் கரைசல் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து அலங்கரிக்கவும். இந்தக் கிழங்கு மசாலாவை மாலை வேளையில் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

கோயம்புத்தூர் காளான் மசாலா 

தேவையானவை

காளான் - 250 கிராம் (கழுவி, சிறிய துண்டுகளாக்கவும்)
மைதா மாவு - கால் கப் 
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் 
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்) 
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்   
தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன் 
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

காளான் மசாலா

செய்முறை

ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.

சேலம் தட்டு வடை செட் 

தேவையானவை

தட்டை - 12
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் 
காரச் சட்னி - 6 டீஸ்பூன் 
புதினா சட்னி - 6 டீஸ்பூன் 
மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

 தட்டு வடை

செய்முறை

பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும். அதன் மேலே கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும். பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும். மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.

சேலம் நொறுக்கல் 

தேவையானவை

தட்டை - 6 
முறுக்கு - 4 
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் 
காரச் சட்னி, புதினா சட்னி - தலா 6 டீஸ்பூன் 
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை

பாத்திரத்தில் தட்டை, முறுக்குகளைக் கைகளால் நொறுக்கிப் போடவும். அதனுடன் கேரட் துருவல், பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு, காரச் சட்னி, புதினா சட்னி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்