பறவைகளை பலிகொள்ளும் மாஞ்சா நூல்... இந்தக் கேளிக்கை இன்னும் தேவையா?! | Kite festivals affect birds flight and injures them to death

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (21/01/2019)

கடைசி தொடர்பு:23:36 (21/01/2019)

பறவைகளை பலிகொள்ளும் மாஞ்சா நூல்... இந்தக் கேளிக்கை இன்னும் தேவையா?!

இந்தக் கயிற்றின் மூலம் அடுத்தவரின் பட்டத்தை எளிதாக அறுத்து விட முடியும். இத்திருவிழானது சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மாதிரி செயல்களைச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை செய்கிறார்கள்.

பறவைகளை பலிகொள்ளும் மாஞ்சா நூல்... இந்தக் கேளிக்கை இன்னும் தேவையா?!

தென் மாநிலங்களில் இந்த மாதம் முழுவதுமே பொங்கல் ஸ்பெஷல்தான். இதே சமயத்தில் வட இந்தியாவில் மகர சங்கராந்தியையொட்டி பட்டம் விடுவது மிகவும் பிரபலம். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் அதிகமாக வாசம் செய்யும் இடமாக இந்தியா மாறி வருகிறது. சரிவிகிதப் பருவநிலை மற்றும் மிதமான காலகட்டமான இந்தக் காலகட்டத்தில் அதிகமான பறவைகளை நம் இயற்கை வளம் ஈர்த்து வருகிறது. வெளிநாடுகளில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பறவைகள் அங்கிருந்து நம் நாட்டுக்கு இடம்பெயர்கிறது. அப்படி இடம்பெயர்ந்து வருகின்ற பறவைகளைப் பாதிக்கிறது இந்த மகர சங்கராந்தி. எப்படி?

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் பட்டம் விடும் திருவிழாக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. வடமேற்குப் பருவக்காற்றின் காரணமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட இந்தியா பருவ மழையும், காற்றுமாக இருக்கும். இந்நிலையில்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி பட்டம் விடும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

காயமடைந்த பறவை

படம்: ராக்கேஷ்.பெ

பட்டம் விடுவது அவர்களுக்குப் பாரம்பர்யமாக, கலாசாரமாக இருக்கிறது. பட்டம் விடுவதற்குப் பயன்படும் நூல் மாஞ்சா என்று அழைக்கப்படும். மஞ்சள், கண்ணாடி தூள் போன்றவற்றைச் சேர்த்துத்தான் நைலான் கயிற்றைத் தயாரிக்கிறார்கள். அதைத்தான் மாஞ்சா என்றும் அழைக்கிறார்கள். இக்கயிறு மிகக் கடினமாக இருப்பதால் பறக்கும்போது பட்டம் அறுந்து விடாமல் இருக்கும். ஆனால், இதே கயிற்றை வைத்து இன்னொரு மாஞ்சாவை அறுக்கமுடியும். அதனால், இந்தக் கயிற்றின் மூலம் அடுத்தவரின் பட்டத்தை எளிதாக அறுத்து விட முடியும்.

இத்திருவிழானது சென்னை உட்படப் பல மாவட்டங்களிலும் சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாஞ்சா கயிற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மாதிரி செயல்களைச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை செய்கிறார்கள். இந்தத் திருவிழாவால் சில மனித உயிர்களும் பறிபோயுள்ளன. அதைக் கவனிக்கும் பலரும் அதே கயிற்றால் மரணத்தைச் சந்திக்கும் பல பறவைகளைக் கவனிப்பதில்லை. இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்கும் பலரும் பல விதமான பறவைகளின் உயிர்களைப் பறித்து விடுகிறார்கள். இந்தச் சம்பவம் வருடா வருடம் நடந்தாலும் இம்முறை அதில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாகத் தன்னார்வலர்கள் மற்றும் பறவையியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாஞ்சா கயிற்றால் மரணமடைந்த பறவை

இது குறித்துப் பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன், ``இது மிக மிக மோசமான கேளிக்கை விளையாட்டு. ஆண்டுதோறும் இந்தக் கொண்டாட்டத்தால் உயிரிழக்கும் பறவைகள் ஆயிரத்துக்கும் மேல். இதில் காயமடையும் பறவைகளை மீட்டுக் காப்பாற்றப் பல தன்னார்வலர்களும் மருத்துவர்களும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து சேவை செய்கின்றனர். இதில் சாதாரண புறாக்களிலிருந்து அரிய வகை கழுகு வரை இறந்து வருகிறது. இந்த மாஞ்சா கயிற்றால் பறவைகள் மட்டுமல்லாமல் மனிதர்கள்கூட படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறினார்.

இந்தத் திருவிழாவால் பறவைகள் படுகாயமடைவதும் இறப்பதும் இந்தாண்டு அதிகமாகி உள்ளது. ஒருசில தன்னார்வக் குழுக்கள் படுகாயமடைந்த பறவைகளை மருத்துவமனையில் சேர்த்து நலம்பெறச் செய்ய வழிவகுக்கின்றனர். தடை செய்யவேண்டிய பிரச்னையைப் பொதுமக்கள் முதல் முதலமைச்சர் வரை கொண்டாடுகிறார்கள். இத்தகைய கேளிக்கை விளையாட்டுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகிறதோ என்ற அச்சத்தில் சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் இருக்கின்றனர்.

சாலிம் அலி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் ஆய்வாளராக இருப்பவர் முனைவர். கிருபாநந்தினி. இந்தப் பட்டம் விடும் திருவிழாவால் ஏற்படும் பறவை இறப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். தற்போது குஜராத்தில் இருக்கும் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்,

பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன்

``இவர்கள் கேளிக்கை விளையாட்டாகப் பட்டங்கள் விடுவதால் பல்வகைப் பறவைகள் இறக்க நேரிடுகிறது. இவ்விழாவினை அரசு தடை செய்திருக்கிறது. அதையும் மீறி மாஞ்சா கயிற்றைப் பயன்படுத்தி பட்டம் விடுவதால் பறவைகளின் இறகுகள் முழுவதுமாக சேதமடைகிறது. சில பறவைகள் மாஞ்சாக்கள் நிறைந்த வானில் பறக்க இடமின்றித் தவிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியில்கூட இறக்கின்றன. அடிப்பட்ட பறவைகளில் இரத்த நாளங்கள் சேதமடைவதால் காப்பாற்றுவது மிகக் கடினமாக இருக்கிறது. இந்த மூன்றுநாள் திருவிழாவுக்காக நாடு முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் வந்து பறவைகளை மீட்டுக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

மொபைல் ஆம்புலன்ஸ் உட்பட மேலும் பல வண்டிகளிலும் பறவைகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றுகிறோம். கடந்தாண்டு 3149 பறவைகள் மீட்கப்பட்டன. அதில் 74 பறவைகள் மீட்கப்படும் போதே உயிரிழந்து விட்டன. 463 பறவைகள் சிகிச்சையின் போதும் இறந்துவிட்டன. எங்களால் 2380 பறவைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்தாண்டு எத்தனை பறவைகள் வரும் என்றும் தெரியவில்லை. அதில் எத்தனை பறவைகளின் உயிரைக் காப்பாற்ற முடியுமென்றும் தெரியவில்லை. மனித உயிர்களுக்கே எமனாகும் இக்கயிறுகள் பறவைகளை மட்டும் விட்டு வைக்கவா போகிறது" என்றார் வேதனையோடு.

பட்டமிடும் திருவிழா

இந்திய வரலாற்றின் தொடக்க காலத்தில் நம்மிடம் இருந்த கலாசாரங்கள் இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதாக இருந்தன. கடந்த சில நூற்றாண்டுகளில் அதில் நடைபெற்ற பல்வேறு மாறுதல்கள் இயற்கையிடமிருந்தும் மற்ற உயிர்களிடமிருந்தும் தொலைவாக்கிக் கொண்டே போகின்றன. அத்தகைய ஒன்றுதான் பட்டம் விடுதலும். கலாசாரங்களும், அதில் நடைபெறும் மாற்றங்களும், அதில் நாம் எய்தும் மகிழ்ச்சியும் சூழலையும் மற்ற உயிர்களையும் பாதிக்காதவாறு அமையவேண்டும். மாற்றங்கள் நல்லதுதான். அந்த மாற்றங்கள் நன்மை செய்தால் மட்டும். 


டிரெண்டிங் @ விகடன்