இந்தோனேசியாவை மீண்டும் மிரட்டியது நிலநடுக்கம்! - அதிகாலையில் மக்கள் பீதி | Earthquake hits magnitude 6.1 in Indonesia... Is there a tsunami alert!?

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (22/01/2019)

கடைசி தொடர்பு:13:45 (22/01/2019)

இந்தோனேசியாவை மீண்டும் மிரட்டியது நிலநடுக்கம்! - அதிகாலையில் மக்கள் பீதி

இந்தோனேசியாவில், இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியான சும்பாவாவில், இன்று அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா நிலவியல் ஆய்வகம் பதிவுசெய்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சும்பாவாவில் மேற்கு நூஸா டெங்காரா மாகாணத்தில் இருக்கும் ராபாவின் தெற்கே உருவான இது, 25 கிலோமீட்டர் ஆழம் வரை பதிவாகியுள்ளது. 219 கிலோமீட்டர் வரை இந்தோனேசிய மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

சர்வதேச அளவில் நிலநடுக்கத்தை முதலில் பதிவுசெய்த ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வகம், ரிக்டர் 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அளவு, இன்று அதிகாலை 5:29 மணிக்குப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஹவாயில் அமைந்துள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி ஏற்படும் அபாயம் எதுவுமில்லை என்று உடனடியாக அறிவித்தது.

நிலநடுக்கம்

இந்தோனேசியா, இயல்பாகவே இயற்கைச் சீற்றங்கள் அதிகம் ஏற்படும் பகுதி. பல்வேறு சூழலியல் பேரிடர்கள் நிகழும் ஒரு தீவுக்கூட்டம். அந்தப் பகுதியை "நெருப்பு வளையம் (Ring of Fire) என்று நிலவியல் ஆய்வாளர்கள் அழைப்பார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பெரிய அளவிலான பேரிடர்களும் சேதங்களும் 2018-ம் ஆண்டுதான் பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் மட்டும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.