குழந்தையின் பெயரோடு வளர்ப்புத் தந்தையின் பெயரை ஆதாரில் இணைக்க இயலுமா?! | Can the name of the stepfather be replaced in Aadhar card in the place of biological father? Legal explanations

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:16 (24/01/2019)

குழந்தையின் பெயரோடு வளர்ப்புத் தந்தையின் பெயரை ஆதாரில் இணைக்க இயலுமா?!

அந்தச் சிறுமிக்கு மறுபடியும் புதிதாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எடுத்துவிட்டால், அதில் பயாலஜிக்கல் ஃபாதர் பற்றிய தகவல்கள் வராதா?

ஃபேஸ்புக்கில் அம்மாக்கள் குரூப் ஒன்றில், ஒரு சிறுமியின் பாஸ்போர்ட், ஆதார் போன்ற ஆவணங்களில் பெற்ற தந்தை அல்லது வளர்ப்புத் தந்தையின் பெயர் இடம்பெறுவது குறித்து சட்டரீதியான சந்தேகம் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. 

மறுமணம் - தந்தை

ஒரு தம்பதிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. நம்முடைய சட்டப்படி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்ற தந்தை மற்றும் தாயின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு, அந்தக் குழந்தைக்கு ஆதார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய அவசியம் இருப்பதால் அந்தச் சிறுமிக்கு பாஸ்போர்ட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. பாஸ்போர்ட்டில் சிறுமியின் விரல் ரேகைதான் இருக்கிறதே தவிர, அப்பாவின் பெயர் இல்லை. தற்போது அந்தச் சிறுமியின் அம்மா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இன்னொரு ஆணை மறுமணமும் செய்துகொண்டார். அந்தச் சிறுமியின் அம்மாவும் அவரை மறுமணம் செய்து கொண்டவரும், சம்பந்தப்பட்ட சிறுமிக்குத் தன்னுடைய சொந்த அப்பா பற்றி எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார்கள். தவிர, அந்தச் சிறுமிக்கு தானே அப்பாவாகவும் இருக்க விரும்புகிறார் அந்த இரண்டாம் கணவர். இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன அந்த முகநூல் குரூப்பில்.

வழக்கறிஞர் மகாலட்சுமி* சிறுமியின் பிறப்புச் சான்றிதழில் அவருடைய பயாலஜிக்கல் ஃபாதர் (பிறப்புக்குக் காரணமான அப்பா) பெயரே தொடர வேண்டுமா? அல்லது சிறுமியின் அப்பா என்கிற இடத்தில், அம்மா மறுமணம் செய்துகொண்டவரின் பெயரைக் குறிப்பிடலாமா? அப்படிக் குறிப்பிடும்போது அந்தப் புதிய நபரை, சிறுமியின் சட்டபூர்வமான தந்தை என்பதா அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் என்பதா? 

* சிறுமியின் அம்மாவை மறுமணம் செய்துகொண்டவர், சிறுமியைத் தானே தத்தெடுத்துக் கொள்ளலாமா? அதற்கு ஏதேனும் வயது வரம்பு இருக்கிறதா?

* அந்தச் சிறுமிக்கு மறுபடியும் புதிதாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எடுத்துவிட்டால், அதில் பயாலஜிக்கல் ஃபாதர் பற்றிய தகவல்கள் வராதா? 

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. விவாகரத்துக்குப் பிறகும் தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது; மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெண்களின் மனதில் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். மறுமணம் செய்துகொள்ள நினைக்கிற பெண்களுக்கு ஒரு தெளிவு தருவதற்காக, மேலேயுள்ள சம்பவம் மற்றும் சந்தேகங்களைப் பற்றிச் சொல்லி, வழக்கறிஞர் மகாலட்சுமியிடம் கேட்டோம். இனி அவருடைய பதில்.

``பெற்ற தந்தையையும், அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அந்த உறவையும் மாற்றவே முடியாது. பிறப்புச் சான்றிதழில் இருக்கிற சொந்த அப்பாவின் பெயரை மாற்றம் செய்ய இயலாது. ஆனால், அம்மாவை மறுமணம் செய்தவர், அந்தச் சிறுமியை அவருடைய சொந்த தந்தையின் சம்மதத்துடன் சட்டப்படி தத்தெடுத்துக்கொள்ளலாம். பெற்ற தந்தை அதற்கு ஒப்புதல் தந்தால், கார்டியன் அண்ட் வார்டு (Guardian and Ward Act) சட்டப்படி `தத்தெடுத்த அப்பா' என்று ஸ்டெப் ஃபாதரின் பெயரைச் சிறுமியின் சர்ட்டிஃபிகேட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம். அப்படித் தத்தெடுக்கும்பட்சத்தில், அவருக்கும் தத்தெடுக்கப்படவிருக்கிற குழந்தைக்கும் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும். 

சிறுமி

பாஸ்போர்ட்டைப் பொறுத்தவரை, சிறுமியைச் சட்டப்படி தத்தெடுத்திருந்தால் அதற்கான ஆவணங்களை இணைத்தல் வேண்டும்.
ஆதார் கார்டில் பெற்ற தந்தையின் பெயர்தான் வரும். அந்தத் தம்பதி சிறுமிக்கு அவளுடைய அப்பா பற்றி எதுவும் தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை புரிகிற வயதில் சொல்லிவிடுவதுதான் நல்லது என்பேன். ஏனென்றால், இந்தக் குழந்தைக்கு இவர்தான் பெற்ற தந்தை என்று இருக்கிற சட்டபூர்வமான ஆதாரங்களை மாற்றவே முடியாது இல்லையா?" என்று தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்